Published : 05 Dec 2015 08:41 PM
Last Updated : 05 Dec 2015 08:41 PM

அத்தியாவசியப் பொருள்களை ரேஷனில் இலவசமாக வழங்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை ரேஷனில் இலவசமாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை, நடுத்தர, செல்வந்தர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் இழப்புகளை சந்தித்துளளனர். ஏழைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, உணவு, தங்குமிடம் வழங்கும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயன்றதை செய்து வருகிறது. மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தன்னார்வத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்ட பரத் என்ற இளைஞர் இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக அரசு வழங்க விரும்பிய நிவாரணத்தை பெற அரசு முனைப்பு காட்டவில்லை என செய்திகள் வருகின்றன. அனைத்துத் தரப்பிலிருந்தும் உதவிகளை திரட்டுவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.

இலவச பேருந்து பயண வசதி செய்துள்ளது போல அத்தியாவசியப் பொருள்களை ரேஷனில் இலவசமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் அனைத்துக் கட்சி குழுக்கள் அமைத்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x