Published : 22 Mar 2014 02:51 PM
Last Updated : 22 Mar 2014 02:51 PM

அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசால் மட்டுமே நதிகளைத் தேசியமயமாக்க முடியும் : ஜெயலலிதா பேச்சு

நதிகளை தேசியமயமாக்க அதிமுக அங்கும் வகிக்கும் மத்திய அரசால் மட்டுமே முடியும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா உறுதியளித்தார்

விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:

மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் தமிழகமும், தமிழக மக்களும் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் தேர்தலை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் வாழ்க்கை பாதிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் மக்களை வஞ்சித்துவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், காமன்வெல்த் போட்டி நடத்தியதில் ஊழல் என அதன் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

கடந்த 33 மாதங்களில் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மின் உற்பத்தியில்லாமல் மக்கள் பாதிப்புக்கு ஆளாகினர். ஆனால் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வறட்சி ஏற்பட்டபோது தமிழகத்தில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்கிய ஒரே ஆட்சி நாட்டிலேயே அதிமுக ஆட்சி மட்டும்தான்.

தொடர்ந்து பாரபட்சம்

மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழக மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு, காவிரி பிரச்சினைகளில் தமிழகத்தை மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாகிவிட்டது.

அதிமுக வென்றால் மத்தியில் அதிமுகவின் ஆதரவு பெற்ற அரசை அமைக்க முடியும். அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைந்தால் தமிழகத்துக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். மத்தியில் மாற்றம் தேவை. அந்த வலிமை அதிமுகவுக்கு வேண்டும். அப்போதுதான் விலைவாசியைக் கட்டுப்படுத்தி பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைக்க முடியும். அமைதி, வளம், வளர்ச்சி என்பதை முன்னிறுத்தி ஆட்சி நடத்த அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x