Published : 27 Jun 2019 05:58 PM
Last Updated : 27 Jun 2019 05:58 PM

தோனி ‘கிரேட் எஸ்கேப்’: அரைகிரவுண்டில் இருந்த போதும் ஸ்டம்பிங்கை விட்டு சொதப்பிய ஷேய் ஹோப்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் விராட் கோலியை நம்பி இருப்பது தெரிந்தது. அவர் 56 ரன்களுடன் வழக்கம் போல் ஒரு முனையைத் தாங்க இன்னொரு முனையில் விக்கெட்டுகள் சரிந்து இந்திய அணி 33 ஓவர்களில் 154/4 என்று போராடி வருகிறது.

 

இந்நிலையில் ரோஹித் சர்மா அதிருப்தி அவுட்டில் வெளியேற, ராகுல் 64 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆடிவந்த நிலையில் இன்று மிகச்சிறப்பாக வீசி வரும் ஜேசன் ஹோல்டர் பந்தில் முன்னால் வராமலும் பின்னால் செல்லாமலும் ஒரு அரைகுறை காலெடுப்பில் ஆட முயன்று இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.

 

விஜய் சங்கர் 19 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த நிலையில் கிமார் ரோச்சின் தரமான பந்துக்கு போதாமை உத்தி காரணமாக எட்ஜ் ஆகி வெளியேறினார். கேதார் ஜாதவ் 7 ரன்களில் ஆடிவந்த போது கிமார் ரோச்சின் வெளியே சென்ற பந்தை அசட்டுத் தனமாக தேர்ட் மேனில் தள்ளிவிட முயன்று எட்ஜ் ஆனார்.  இதுவும் ரிவியூவில் அவுட் கொடுக்கப்பட்டது.

 

அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் போல் இந்த ஆட்டத்திலும் மே.இ.தீவுகள் தங்கள் அவுட்களில் 2-ஐ ரிவியூவில்தான் பெற்றனர்.

 

இந்நிலையில் தோனி இறங்கி எந்த விதத்திலும் முன்னேற்றமடையாத அவரது பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதில் ஒரு பயங்கரமான லைஃப் அவருக்குக் கிடைத்தது.

 

14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இடது கை ஸ்பின்னர் ஃபேபியன் ஆலன் வீசிய பந்தை மேலேறி வந்து அடிக்க நினைத்தார், ஆனால் பந்து சிக்கவில்லை. தோனி கிட்டத்தட்ட அரை கிரவுண்டில் இருந்தார் சுமார் 3 முறை ஸ்டம்பிங் செய்திருக்கலாம் தோனியும் ரீச் செய்யும் முடிவைக் கைவிட்டார். ஆனால் ஷேய் ஹோப் தடவு தடவென்று தடவி பந்தை எடுக்கத் தவறியதைப் பார்த்த தோனி ரீச் செய்ய திரும்பினார், மீண்டும் ஒரு முறை பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி மெல்ல அடித்தார் ஷேய் ஹோப் மீண்டும் மிஸ் ஆனது. ஒரே ஸ்டம்பிங்குக்கு இருமுறை வாய்ப்பிருந்தது என்றால் தோனி எங்கு இருந்திருப்பார் என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம் மிகமிகச் சுலபமான வாய்ப்பைத் தவற விட்டார் ஷேய் ஹோப், இதோடு மட்டுமல்லாமல் சமயோசிதமாக ஒரு  ‘பை’ ரன்னையும் ஓடினர். பிறகு ரன்னர் முனையில் அடிப்பதிலும் தவறிழைத்தனர். மொத்தத்தில் பள்ளிச்சிறுவர்கள் கூட இதைவிட சிறப்பாக ஆடியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

 

தோனி கிரேட் எஸ்கேப். தற்போது அவர் படு சொதப்பாலாக ஆடி 27 பந்துகளில் 16 ரன்கள் என்று ஆடிவருகிறார். விராட் கோலி ஒருமுனையில் அவருடன் போராடி வருகிறார். இந்திய அணி 37.1 ஓவர்களில் 174/4. கோலி 67 பேட்டிங். கிமார் ரோச் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x