Published : 25 Jun 2019 06:04 PM
Last Updated : 25 Jun 2019 06:04 PM

பிஞ்ச் அபார சதம்; 32 ஓவர்களில் 173/1-லிருந்து வீணடித்த ஆஸி.; ஸ்டாய்னிஸ் தேவையற்ற ரன் அவுட்: 285 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 32வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஏரோன் பிஞ்ச் தன் 15வது ஒருநாள் சதத்தையும், நடப்பு உலகக்கோப்பையில் 2வது சதத்தையும் எடுத்து ஆட்டமிழக்க அந்த அணி கடைசியில் 300 ரன்களை எடுக்க முடியாமல் 285 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

 

ஆஸ்திரேலிய அணி நல்ல தொடக்கத்தை வீணடித்து 32 ஓவர்களில் 173/1 என்ற வலிமையான நிலையிலிருந்து 300 ரன்களைக் கடக்க முடியாமல் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் என்று மட்டுப்படுத்தப்பட்டது.

 

தொடக்கத்தில் சற்றே கடினமான பிட்சை எதிர்கொண்ட ஆஸ்திரேலியாவின் வார்னர், பிஞ்ச் ஆகியோர் 10 ஒவர்களில் 44 ரன்கள் என்று நிதானத்துடன் தொடங்கி பிறகு 22.4 ஓவர்களில் 123 ரன்கள் என்று அபார அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

 

ஆனால் வார்னர் 53 ரன்களில் மொயின் அலியிடம் ஆட்டமிழக்க அடுத்த 10 ஓவர்களில் பிஞ்ச், கவாஜா ஜோடி 50 ரன்களைச் சேர்த்தது, கவாஜா 29 ரன்களில்  ஸ்டோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். அதன் பிறகு ஏரோன் பிஞ்ச் 100 ரன்களை எடுத்து உடனடியாகவே ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா சரிவு கண்டது.

 

மேக்ஸ்வெல் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் ஒருமிகப்பெரிய சிக்சரையும் அதே இடத்தில் கொஞ்சம் தள்ளி பவுண்டரியையும் அடித்து அதிரடி காட்டினார், ஆனால் அவரிடம் பொறுமை இல்லை. 12 ரன்களில் அவர் மார்க் உட்டின் எழுச்சி ஷார்ட் பிட்ச் பந்தை தேர்ட் மேனில் தட்டி விட முயன்று எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆனார்.

 

ஸ்டாய்னிஸும் ஸ்மித்தும் சேர்ந்து ஸ்கோரை 213/4லிருந்து 228 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது ஸ்டாய்னிஸ் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இதற்கு ஸ்மித்தும் ஒரு காரணம். ஸ்மித் லாங் ஆஃபுக்கு ஒரு பந்தை ட்ரைவ் ஆட பந்து டீப்புக்குச் சென்றது. ஸ்டாய்னிஸ் ரன்னர் முனையிலிருந்து வேகமாக ஓடி ஒரு ரன்னை எடுத்து விட்டு ஸ்மித்தைப் பார்க்காமலேயே விறுவிறுவென 2வது ரன்னுக்காக ரன்னர் முனைக்கு ஓடி வந்தார். ஆனால் ஸ்மித்தும் ரன்னர் முனையை விட்டுக் கிளம்பாததால் அதிர்ச்சியடைந்தார். இருவரும் ஒருமுனையில். ரஷீத் பந்தை சேகரித்து பட்லருக்கு அனுப்ப ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆனார். முற்றிலும் தேவையற்ற ரன் அவுட் திருப்புமுனையானது.

 

ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தை தூக்கி அடிக்க முயன்று லாங் ஆனில் ஆர்ச்சரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.  பாட் கமின்ஸ் 1 ரன்னில் வோக்ஸிடம் வெளியேற கடைசியில் அலெக்ஸ் கேரி 5 பவுண்டரிகளுடன் சிறு அதிரடியைக் காட்ட அவர் 27 பந்துகளில் 38 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா ஒருவழியாக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்து 300 ரன்கள் வாய்ப்பை கோட்டை விட்டது.

 

ஒருகட்டத்தில் 173/1 என்று 32 ஓவர்களில் 300ஐக் கடக்கும் நிலையில் இருந்தது. முதல் 30 ஓவர்களில் ஆஸ்திரேலியா 162/1 கடைசி 20 ஓவர்களில் 123/6 என்று சரிவு கண்டது.

 

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 46 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர், உட், ஸ்டோக்ஸ், அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆதில் ரஷீத் 10 ஓவர்கள் 49 ரன் விக்கெட் இல்லை.

 

முன்னதாக...

 

உ.கோப்பையில் 2வது சதமெடுத்தவுடன் ஆட்டமிழந்தார் ஏரோன் பிஞ்ச்

 

finchjpg100 

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 32வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஏரோன் பிஞ்ச் தன் 15வது ஒருநாள் சதத்தையும், நடப்பு உலகக்கோப்பையில் 2வது சதத்தையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

அவர் 116 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து 36வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய  எகிறு ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்து சரியாகச் சிக்காமல் நேராக மார்க் உட்டிடம் ஆன் திசையில் கேட்ச் ஆக வெளியேறினார்.

 

ஆனால் அதற்கு முன்னதாக வார்னர் (53 ரன், 61 பந்து 6 பவுண்டரிகள்), பிஞ்ச் கூட்டணி முதல் விக்கெட்டுக்காக 22.4 ஓவர்களில் 123 ரன்கள் கூட்டணி அமைத்தனர். முதலில் டேவிட் வார்னர் மொயின் அலி பந்தை பேக்ஃபுட் பஞ்ச் ஆட முயன்று ஆஃப் திசையில் ரூட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

உஸ்மான் கவாஜா 29 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸின் நேர் நேர் தேமா பந்தில் பவுல்டு ஆனார். இது பிளாக்ஹோலில் விழுந்த பந்து என்று தவறாக சில வர்ணனைகளில் கூறப்பட்டது, ஆனால் இது யார்க்கர் அல்ல. கவாஜா நேராக ஆடாமல் அக்ராஸ் த லைனில் ஆடியதால் பந்தின் வேகத்துக்கு பீட்டன் ஆகி பவுல்டு ஆனார்.

 

ஏரோன் பிஞ்ச், மொயின் அலியை 2 சிக்சர்கள் அடித்தார்.  பவர் ப்ளேயான முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 44 ரன்களைத்தான் எட்டியது. காரணம் நிதானம். ஆனால் 18 ரன்களில் இருந்த போது எல்.பி.தீர்ப்பில் அம்பயர் நாட் அவுட் என்றதால் அம்பயர் கால் என்பதால் ரிவியூவில் தப்பினார் பிஞ்ச், பிறகு வின்ஸ் ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பைக் கோட்டை விட்டார். பிறகு வோக்ஸை ஒரு ஓவரில் 2 பவுண்டரிகளையும் அடுத்த மார்க் உட் ஓவரில் 2 பவுண்டரிகளையும் விளாசி 61 பந்துகளில் அரைசதம் கண்டவர் பிறகு 116 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

மேக்ஸ்வெல் வந்தார், ஜோப்ரா ஆர்ச்சரை ஒரு மிகப்பெரிய மிட்விக்கெட் சிக்சரையும், அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பௌண்டரியும் அடித்து 12 ரன்களில் மார்க் உட்டின் ஷார்ட் பிட்ச் பந்தை தேர்ட்மேனில் திருப்பி விட நினைத்து எட்ஜ் ஆகி வெளியேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x