Last Updated : 25 Jun, 2019 03:30 PM

 

Published : 25 Jun 2019 03:30 PM
Last Updated : 25 Jun 2019 03:30 PM

தோனி ஆமைவேக பேட்டிங் குறித்த விமர்சனம்: சச்சினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் பேட்டிங் குறித்து சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தோனியை விமர்சித்த சச்சினுக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கத்துக்குட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக பேட் செய்தனர். விராட் கோலியும், கேதார் ஜாதவ் மட்டுமே அரைசதம் அடித்தாலும், ஜாதவ் பேட் செய்தவிதமும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. மிகப்பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்த சூழலில் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி ஒன்றில், தோனி, கேதார் ஜாதவ் பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், "  நான் தோனியின் பேட்டிங் குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். அதிலும் கேதார் ஜாதவ், தோனியின் பாட்னர்ஷிப் குறித்தும் எனக்கு திருப்தி இல்லை. மிகவும் மெதுவாக பேட் செய்தார்கள். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 34 ஓவர்கள் பேட் செய்து 119 ரன்கள்தான் எடுக்கப்பட்டது. இது சாதகமான விஷயம் அல்ல.

தோனி போன்ற மூத்த வீரர்களிடம் இருந்து பேட்டிங்கில் அதிகமான பங்களிப்பை எதிர்பார்த்தேன். மூத்தவீரர் தோனி, ஜாதவுக்கு வழிகாட்டுதலாக இருந்து அதிகமான ஸ்கோர் செய்ய வைத்திருக்க வேண்டும். ஜாதவ் மிகுந்த நெருக்கடியில் இருந்தார். சூழலுக்கு ஏற்றார்போல் யாரேனும் அந்த நேரத்தில் பொறுப்பெடுத்து விளையாட வேண்டியபோது, யாரும் விளையாடவில்லை. கேதார் ஜாதவ், தோனி இருவரும் அவர்களின் முழுத் திறமையை பயன்படுத்தி விளையாடவில்லை, அவர்களின் ஸ்ட்ரைக் ரேட்டும் எதிர்பார்த்த அளவு இல்லை " எனத் தெரிவித்தார்.

2011-ம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்த தோனியின் பேட்டிங்கை சச்சின் விமர்சனம் செய்ததை அவரின் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் கருத்து ரசிகர்கள் கடுமையான கண்டனத்தெரிவித்து  வருகின்றனர்.

தோனியின் ரசிகர் ஒருவர் சச்சின் குறித்து விமர்சிக்கையில், " சச்சின் 95 ரன்கள் முதல் 100 ரன்கள் எடுப்பதற்கு 20 பந்துகளை போட்டியின் சூழல் தெரியாமல் வீணாக்குவார், அவர் தோனியின் பேட்டிங் நுட்பத்தை குறித்து குறைகூறுகிறார். சிறப்பு, இதுபோன்ற போலித்தனத்துக்கு அளவில்லையா " எனத் தெரிவித்தார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில், " சச்சின் சுயநலத்துடன்தான் இன்னும் நடந்து கொள்கிறார். கிரிக்கெட்டின் மகாராஜா தோனி. சச்சின் தனது சுயலாபத்துக்காக விளையாடினார், அப்போது அவர் ஓய்வு பெற்ற பின், அவரின் மகனை அணிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். இது நெருங்கியவர்களுக்கு அனுகூலம் செய்வதின் உச்சகட்டம்" என விமர்சித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், " தோனியின் மெதுவான ஆட்டத்தை ஒவ்வொருவரும் குறை கூறுகின்றனர். சச்சின்கூட வெளிப்படையாக வந்து விமர்சிக்கிறார். சச்சினுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இந்திய அணிக்காக உங்களைக் காட்டிலும், தோனி ஏராளமான போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் " சச்சின் டெண்டுல்கரைக் காட்டிலும் தோனி எப்போதும் சிறந்தவர். இந்த லிட்டில் மாஸ்டர் களத்தில் பேட் செய்ய இறங்கும்போதெல்லாம் சுயலாபத்துடனே செயல்படுவார். 100 சதங்கள், சாதனைகள் எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், சச்சின் தலைமையில் எத்தனை டெஸ்ட் போட்டிகளை, ஒருநாள் போட்டிகளை வென்றோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x