Published : 23 Jun 2019 06:30 PM
Last Updated : 23 Jun 2019 06:30 PM

உலகக்கோப்பை அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு? இங்கி.முன்னேறுமா, தெ.ஆப்பிரிக்கா, பாக், இலங்கை என்னாகும்?- ஓர் அலசல்

உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு 4 அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதால், நாட்கள் செல்லச் செல்ல அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

12-வது உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து  வருகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் 4 அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்.

இதில் ஒரே புள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் இருந்தால் ரன் ரேட், அதிக வெற்றிகள், லீக் சுற்றில் பெற்ற  வெற்றி போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி கடந்த இரு நாட்களுக்கு முன் இலங்கையிடம் அடைந்த தோல்விக்குப் பின் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்புகளில் அணிகளின் கணக்கீடுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணி தற்போது 6 போட்டிகளில் 2 தோல்விகள், 4 வெற்றிகள் என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் இங்கிலாந்து மோத வேண்டும். ஆனால், இந்த 3 அணிகளுக்கு எதிராக அவ்வளவு எளிதாக வெற்றியைப் பெற்றுவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

கடந்த 27 ஆண்டுகளாக உலகக்கோப்பை போட்டியில் இந்த 3 அணிகளை இங்கிலாந்தால் வெல்ல முடியவில்லை என்பதே இதற்கு சாட்சி. இந்த முறை இங்கிலாந்து அணியின் தோற்றம், பலம் மாறி இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்காலம்.

இப்போதுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதை அடிப்படையாக வைத்து  கணக்கீடுகள் போடப்பட்டுள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.

அதேசமயம், கணக்கீடுகள் அனைத்தும் இங்கிலாந்து மீதமுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் இவை நடக்கலாம் என்ற அடிப்படைவாதத்தின் கீழ் போடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் அரையிறுதிப் பயணம் பாதிக்குமா?

இங்கிலாந்தின் அரையிறுதிப் பயணம் இலங்கையிடம் தோற்றதால் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்போது புள்ளிக்கணக்கில் 4-வது இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது. அடுத்த 3 போட்டிகளும் இங்கிலாந்துக்குக் கடினமானது. ஆதலால், அரையிறுதி வாய்ப்பைப் பெற வேண்டுமானால், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளில் இரு அணிகளைத் தோற்கடித்தே தீருவது அவசியம். அப்போதுதான் 12 புள்ளிகளை எட்டி பாதுகாப்பாக அமர முடியும்.

ஒருவேளை இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டும் வென்று 2 போட்டிகளில் தோற்றால் என்ன நடக்கும்?

ஒருவேளை இங்கிலாந்து ஒரு போட்டியில் வென்று, 2 போட்டிகளில் தோற்றால், 10 புள்ளிகளில் இருக்கும். இங்கிலாந்தை அரையிறுதிக்குள் செல்லவிடாமல் தடுக்க இலங்கை அணி தனக்குரிய மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அல்லது 2 வெற்றிகள் பெற்று ஒரு போட்டியை சமன் செய்தால் 11 புள்ளிகள் கிடைத்து இங்கிலாந்து அணியை முறியடிக்கலாம். தற்போது இலங்கை 6 புள்ளிகளுடன் உள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளும் மீதமுள்ள தங்களின் போட்டிகள் அனைத்திலும் வென்றால் 11 புள்ளிகள் இருக்கும். அப்போது டைபிரேக்கரில் அணிகள் பெற்ற வெற்றிகள் கணக்கிடப்பட்டு ஒரு அணி உள்ளே செல்ல முடியும். இங்கிலாந்துக்கு வாய்ப்பு பறிபோகும்.

ஒருவேளை இங்கிலாந்து அடுத்துவரும் 3 போட்டிகளிலும் தோற்றாலும் அரையிறுதிக்குள் செல்ல முடியுமா?

இங்கிலாந்து அடுத்து வரும் 3 போட்டிகளிலும் தோற்றாலும் அரையிறுதிக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்கு அதிர்ஷ்டம் அதிகம் தேவை.

அதாவது இலங்கை அணிக்கு மீதம் இருக்கும் 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற வேண்டும். இங்கிலாந்தின் தற்போதுள்ள 8 புள்ளிகளுக்கு மேல் எந்த அணியும் செல்லக்கூடாது. ஆனால், பாகிஸ்தானும், வங்கதேசமும் நல்ல ஃபார்மில் இருக்கும்போது சாத்தியமா?

இலங்கை அரையிறுதிக்குள் வர முடியுமா?

இலங்கை அணிக்கு இன்னும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் ஆகிய அணிகளுடன் ஆட்டங்கள் இருக்கின்றன. இரு போட்டிகளில் வென்றால் இப்போதுள்ள 6 புள்ளிகளுடன் கூடுதலாக 4 புள்ளிகள் பெற்று 10 புள்ளிகளாகும்.

 அதேசமயம், இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் தங்களுக்கு மீதம் இருக்கும் 3 போட்டிகளிலும் தோற்க வேண்டும். இந்தியா ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல வேண்டும். இவை எல்லாம் நடந்தால், இலங்கை அரையிறுதிக்குள் செல்லலாம்.

இல்லாவிட்டால் இலங்கை அணி தனக்கிருக்கும் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால், 12 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், 12 புள்ளிகள்தான் அளவுகோலாக இருக்குமா என்று இப்போது சொல்லிவிட முடியாது. இது கணக்கீடு மட்டுமே.

மற்ற அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்குமா?

மற்ற அணிகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் செல்ல அதிகமாக உழைக்க வேண்டும்.

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு வாய்ப்பு வர வேண்டுமானால், இங்கிலாந்து மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் தோற்க வேண்டும். இலங்கை ஒரு போட்டிக்கு மேல் வெல்லக்கூடாது. அதாவது 8 புள்ளிகள் மட்டுமே இலங்கை பெற வேண்டும். வங்கதேசம் மீதமிருக்கும் 3 ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற வேண்டும். இதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், வங்கதேசம் அடுத்ததாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுடன் மோதுகிறது. இதில் ஆப்கானிஸ்தானுடன் வெற்றி பெறலாம், இந்தியா பாகிஸ்தானுடன் ஏதாவது ஒரு அணிக்கு நெருக்கடி கொடுத்து வெல்லலாம். அல்லது இரண்டிலும் தோற்கலாம்.  

அதேசமயம், பாகிஸ்தான் அணி மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றால் 9 புள்ளிகள் கிடைக்கும். இங்கிலாந்து அடுத்துவரும் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் 8 புள்ளிகளோடு நின்றுவிடும் .அப்போது பாகிஸ்தான் அரையிறுதி செல்ல வாய்ப்பு உண்டு. அல்லது வங்கதேசம் இரு போட்டிகளில் வென்றால், 9 புள்ளிகளை இரு அணிகளும் பெறும். அப்போது டைபிரேக்கர் விதி கடைபிடிக்கப்ப ட்டு முடிவு எடுக்கப்படும். பாகிஸ்தான், வங்கதேசம் இருஅணிகளில் ஒரு அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதி வாய்ப்புள்ளதா?

தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குள் செல்ல வேண்டுமானால், மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும். அதேசமயம் இங்கிலாந்து மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் தோற்க வேண்டும். இலங்கை ஒரு போட்டிக்கு மேல் வெல்லக்கூடாது. எந்த அணியும் 9 புள்ளிகளுக்கு மேல், நல்ல ரன் ரேட்டில் செல்லக்கூடாது. இவை நடந்தால், தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்குள் செல்லும்.

முதல் 4 இடங்களில் யாருக்கு வாய்ப்பு?

இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அதிகபட்சமாக 9 புள்ளிகள் வரை எடுத்து, இங்கிலாந்து அணி மீத முள்ள அனைத்துப் புள்ளிகளிலும் தோல்வி அடைந்தால், வங்கதேசம், பாகிஸ்தான் இரு அணிகளில் ஒரு அணி வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x