Last Updated : 21 Jun, 2019 04:04 PM

 

Published : 21 Jun 2019 04:04 PM
Last Updated : 21 Jun 2019 04:04 PM

நான் கேப்டனுக்காகவும், வாரியத்துக்காகவும் விளையாடவில்லை நாட்டுக்காகவே விளையாடுகிறேன்: மனம் திறந்த ரஷித் கான்

நான் கேப்டன் குல்பதீன் நயிப்புக்காகவும் விளையாடவில்லை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்காகவும் விளையாடவில்லை, நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுகிறேன் என்று ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் அணிக்குள் ஏராளமான குழப்பம் நீடிக்கிறது. விக்கெட் கீப்பர் ஷேசாத் காயத்தால் நீக்கப்பட்டார் என்று அணி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், அவரோ வாட்ஸ்அப் வீடியோ மூலம் எனக்கு எந்த காயமும் இல்லை, என்னைக் கேட்காமல் தன்னிச்சையாக அறிவித்துவிட்டார்கள் என்று கண்ணீர் விட்டார்.

 

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஆஸ்கர் அஸ்கரை நீக்கிவிட்டு, புதிதாக குல்பதின் நயிப்பை நியமித்தார்கள். இவர் நியமிக்கப்பட்டது அணியில் பல வீரர்களுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அணிக்குள் ஒற்றுமை இல்லாத சூழல் நீடிப்பதால், தொடர்ந்து 5 தோல்விகளை ஆப்கானிஸ்தான் அணி சந்தித்து வருகிறது.

 

இதுகுறித்து அந்த அணி வீரர் ரஷித் கான் மனந்திறந்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

 

எனக்கும் கேப்டன் குல்பதீன் நயிப்புக்கும் இடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. நான் அஸ்கர் கேப்டனாக  இருந்தபோது அளித்த ஆதரவைக் காட்டிலும் குல்பதீனுக்கு அதிகமாகவே ஆதரவு அளிக்கிறேன். அஸ்கருக்கு 50 சதவீதம் ஆதரவு அளித்தால், குல்பதீனுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன்.

 

இங்கிலாந்து வந்ததில் இருந்து இப்போதுவரை யாரும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை. ஆனால், ஊடகத்தின் ஊதி பெரிதாக்குகிறீர்கள். சிலர் அணிக்காக 15 ஆண்டுகள் வரை விளையாடி வருகிறார்கள். பல ஆண்டுகளாக எந்தவிதமான பிரச்சினையும் நடக்காதது சில நாட்களில் எப்படி மாறி, பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று நினைக்கிறீர்கள்.

 

கேப்டனை மாற்றினாலும் கவலையில்லை, மாற்றாவிட்டாலும் பரவாயில்லை. நான் குல்பதீனுக்காகவோ, கிரிக்கெட் வாரியத்துக்காகவோ விளையாடவில்லை. நான் எனது நாட்டுக்காக விளையாடுகிறேன். என்னுடைய  பணி என்ன என்பது எனக்குத் தெரியும். நான் தொடர்ந்து விளையாடுவேன்.

 

அதேசமயம், இப்போது கேப்டனை மாற்றுவதற்கு சரியான தருணம் அல்ல.. ஏனென்றால் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடரில் விளையாடுகிறோம். ஆசியக் கோப்பைப் போட்டியில் நாங்கள் இருந்த அணியைப் போல் இப்போது இல்லை என்பதை ஏற்கிறேன். இந்த சூழலில் திடீரென தலைமையை மாற்றும்போது அதுமேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

 

என்னுடைய பந்துவீச்சு குறித்து விமர்சனங்கள் வருவதை பற்றி எனக்கு கவலையில்லை. மக்கள் 10 நல்லநாட்களை பற்றி பேசமாட்டார்கள், ஒரு மோசமான நாளைப் பற்றித்தான் மனதில் வைத்திருப்பார்கள். கடந்த 10 நாட்களாக ரஷித்கான் என்ன செய்தார், எப்படி பந்துவீசினார் என்பதை மறந்துவிட்டார்கள்.

என்னுடைய தவறுகள் என்ன எனக்கு தெரியும். அந்த தவறுகளை நான் அடையாளம் கண்டு சரிசெய்து வருகிறேன். என்னை விமர்சிப்பது குறித்து கவலையில்லை. அனைத்தையும் எளிதாகவே அணுகுவேன்.

பொதுவாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன்விளையாடும்போது அழுத்தம் அதிகரிக்கும். அதிலும் உலகக் கோப்பைப் போட்டியின்போது அழுத்தம் பன்மடங்கு உயரும், அது நிச்சயம் நமது திறமையில் பாதிப்பை ஏறப்படுத்தலாம்.

முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுடன் இப்போதுதான் விளையாடினோம். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுடன் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடி இருக்கிறோம். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அணியுடன் மோதினால், பல பிரச்சினைகள் உருவாகும். அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல் பட வேண்டும்.

இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x