Published : 21 Jun 2019 01:54 PM
Last Updated : 21 Jun 2019 01:54 PM

‘பந்தைப்பார்... அடி’ - சேவாகின் தாரக மந்திரத்தை கடைபிடிக்கும் கொலின் டி கிராண்ட்ஹோம்

பந்தைக் கணித்தல், லெந்த்தை வாசித்தல் மெல்ல பவுலரைப் புரிந்து கொண்டு அதன் பிறகு அடித்தல் என்பது பெரும்பாலான பாரம்பரிய கிரிக்கெட் வீரர்களின் தாரக மந்திரமாக இருக்கும் போது, சேவாக் போன்ற ஒருசில வீரர்களே ‘பந்தைப் பார்.. அடி என்ற தாரகமந்திரத்தைக் கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள்.

 

சச்சின் டெண்டுல்கர் போன்றோர் பிட்ச், பவுலிங் வீசுவது யார், லெந்த் போன்றவற்றை விரைவில் கணித்து களவியூகத்தை ஏமாற்றும் விதமாக ஷாட்களைத் தேர்வு செய்து ஆடுவது, சில கடினமான சூழ்நிலைகளில் உதாரணமாக கிளென் மெக்ரா, வாசிம் அக்ரம், கார்ட்னி வால்ஷ், ஷேன் வார்ன், முரளிதரன் உள்ளிட்டோர் வீசும் கடினமான சூழ்நிலைகளில் அடித்து நொறுக்கி கொஞ்சம் மனதிலிருந்து டென்ஷனை அகற்றி பிறகு செட்டில் ஆகி ஆடும் வகையறாவைச் சேர்ந்தவர். சச்சின் எப்படி என்றால், ஒருநாள் போட்டிகளில் இறங்கியவுடன் தடால் புடாலென்று அடித்து 25-30 ரன்களுக்கு வருவார் பிறகு ஒன்று இரண்டு என்று சேர்த்து 50 எடுத்துக் கொள்வார், பிறகு 50லிருந்து ஒரு 75 ரன்கள்வரைக்கும் தடாலடியைக் கடைபிடிப்பார், பிறகு 100 செல்வது வரைக்கும் ரன் விகித்த்தை விட்டுவிடாமல் நிதானம் கடைபிடிப்பார், இது அவர் இன்னிங்ஸை பில்ட் அப் செய்யும் விதம்.

 

ஆனால் சேவாக் சூழ்நிலை, ஆட்டத்தருணம், பவுலர், பிட்ச் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், அவர் அடிக்கக் கூடிய இடத்தில் பந்து விழுந்தால் அடி அவ்வளவுதான் மிகவும் எளிய பார்முலா.

 

அதே பாணியைத்தான் நியூஸிலாந்து வீரர் கொலின் டி கிராண்ட்ஹோம் கடைபிடிப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நெருக்கடியான தருணத்தில் இறங்கிய கொலின் டி கிராண்ட் ஹோம் முதல் பந்தையே ஹை பிளிக்கில் பவுண்டரிக்கு அனுப்பினார். பிறகு அரக்க புல் ஷாட்டில் 2 சிக்சர்களை முக்கியக் கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்தார். 47 பந்துகளில் 60 ரன்கள் என்ற இன்னிங்ஸ் ஒரு முனையில் கேன் வில்லியம்சனின் பளுவையும் மன அழுத்தத்தையும் குறைத்ததோடு வெற்றிக்கும் வித்திட்டது.

 

ஸ்டாய்னிஸ், கொலின் டி கிராண்ட் ஹோம் போன்றவர்கள் இந்த வகையான ஆல்ரவுண்டர்கள். பவுலிங்கில் ரன் கொடுத்தாலும் முக்கிய விக்கெட்டுகளை முக்கியத் தருணங்களில் கைப்பற்றுவது, பேட்டிங்கில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்துவது.

 

இந்நிலையில் தன் பேட்டிங் பற்றி கொலின் டி கிராண்ட் ஹோம் கூறியதாவது:

 

நான் பந்துகளை நன்கு கூர்ந்து கவனிப்பேன் பிறகு அடிப்பேன். எனவே பந்தைப் பார் அடி என்பதுதான். இது எனக்குக் கைகொடுக்கிறது. இதுதான் என் ஆட்டம், வழக்கமாக இப்படித்தான் ஆடுவேன். என்னால் முடியும் போது இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வேன். சில வேளைகளில் அது வேலைக்கு ஆகாமல் போகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கைகொடுத்தது, கிரிக்கெட் ஒரு எளிதான ஆட்டம்.

 

கேன் வில்லியம்சன் அதிகம் அறிவுரை கூறுபவர் அல்ல, நானும் அதிகம் அறிவுரைகளைக் கேட்பவனும் அல்ல.  கடைசி 10 ஓவர்களுக்குக் கொண்டு செல்வோம் என்று இருவரும் பேசினோம். தேவைப்படும் ரன் விகிதம் 7 ரன்களுக்கும்  மேல் செல்லவில்லை. இது சாதகமாக அமைந்தது.

 

என்று கூறினார் கொலின் டி கிராண்ட்ஹோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x