Published : 21 Jun 2019 01:41 PM
Last Updated : 21 Jun 2019 01:41 PM

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும்: வாழ்த்து கூறிய பாக். வீரர் திடீரென ட்வீட்டை நீக்கினார்

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக் கூறிய பாகிஸ்தான் வீரர் சிறிது நேரத்தில் ட்விட்டரில் இருந்து தனது பதிவை நீக்கிவிட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பை லீக் ஆட்டம் கடந்த 16-ம் தேதி நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா அடித்த சதம், ராகுல், கோலி அடித்த அரைசதம் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தன. இதில் பாகிஸ்தான் வீரர்களில் முகமது அமீரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.

இதில் குறிப்பாக தொடக்கத்தில் பந்துவீசிய ஹசன் அலியின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் வெளுத்து கட்டினர். 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ரன்கள் வாரி வழங்கினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஹஸன் அலியின் பந்துவீச்சு முக்கியக் காரணம் என்று அந்நாட்டு ரசிகர்கள் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றதை ட்விட்டரில் பத்திரிகை பெண் நிருபர் ஒருவர் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்தார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லவும் வாழ்த்தி இருந்தார். இந்த ட்விட்டுக்கு பதில் அளித்து ரிடீவிட் செய்த ஹசன் அலி, " உங்களின் எண்ணம் போல் நடக்க நான் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன்" என்று பதில் அளித்தார்.

நிருபரின் ட்விட்டில், "  இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணியின் மிகச்சிறப்பான வெற்றி பெற்ற, இந்த தருணமாகவும், இந்தியர் எனவும் பெருமைப்பட வைக்கிறது. உலகக் கோப்பையையும் வெல்லப் போகிறது இந்திய அணி " எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு இந்தியில் ரீடிவிட் செய்த ஹசன் அலி " உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் அதற்கு வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ஹசன் அலியின் ட்வீட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கண்டனங்கள் வரத் தொடங்கியதையடுத்து, அவர் தனது ட்விட்டை திடீரென நீக்கிவிட்டார். ஆனால், அதற்கு முன் அவரின் டிவீட்டைப் பார்த்த ரசிகர்கள் கொதிப்படைந்து எவ்வாறு பாகிஸ்தான் வீரர் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாழ்த்துக் கூறுவது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹசன் அலி குறித்து ஒருமுக்கிய விஷயம் குறிப்பிட வேண்டுமென்றால், கடந்த சில மாதங்களுக்கு முன் அடாரி வாஹா எல்லைக்கு ஹசன் அலி சென்றிருந்தார். அப்போது, மாலைநேரத்தில் எல்லையில்  இந்திய ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தி தேசியக் கொடியை இறக்குவார்கள். அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் நின்றுகொண்டு இந்திய  வீரர்களைக் கிண்டல் செய்த ஹசன் அலி ராணுவத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x