Last Updated : 18 Jun, 2019 11:33 AM

 

Published : 18 Jun 2019 11:33 AM
Last Updated : 18 Jun 2019 11:33 AM

நாட்டுக்குள் மக்கள் விடமாட்டாங்க, ஒழுங்காக விளையாடுங்க : பாக். வீரர்களுக்கு கேப்டன் சர்பிராஸ் எச்சரிக்கை

மதீமுள்ள போட்டிகளில் ஒழுங்காக விளையாடி வெல்ல வேண்டும் இல்லாவிட்டால், பாகிஸ்தானுக்குள் செல்ல முடியாது, மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் சர்பிராஸ் அகமது எச்சரித்துள்ளார்.

மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 5 போட்டிகளில் இதுவரை விளையாடி பாகிஸ்தான அணி 3 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் அனைத்திலும் வென்றாலும் அரையிறுதுக்குள் செல்வது கடினம்தான்.

உலகக்கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 7-வது முறையாக இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோற்றது அந்த நாட்டு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மீதமுள்ள 4 போட்டிகளிலும் மோசமான தோல்வியை அந்த அணியினர் சந்தித்தால் மக்கள் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும்.  கடந்த காலங்களில் உலகக் கோப்பைப் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணியினர் பல மாதங்கள் சொந்த நாட்டுக்குள் செல்லாமல் வெளிநாடுகளில் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணி வீரர்களை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மூளையில்லாத கேப்டன் என்று முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் காட்டமாக விமர்சித்தார். போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை, மனஅழுத்தத்தால் பயந்துவிட்டார்கள் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திநியூஸ்.காம். பாக் என்ற இணைதளம் வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, சக வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது. அதாவது மீதமுள்ள 4 போட்டிகளிலும் இதேபோன்று மோசமாக விளையாடி வந்தால்,  மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். யாராவது நான் மட்டும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன் என நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம். அனைவரும்தான் நாட்டுக்குள் செல்லப் போகிறோம் என்பதை மனதில் வையுங்கள். ஏதோ துரதிருஷ்டமாக நடக்கப்போகிறது என்பதால்தான் கடவுள் சில விஷயங்களை தடுத்துள்ளார். மோசமான விளையாட்டை கைவிட்டு, வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், சர்பிராஸ் அகமது பேசும்போது மூத்த வீரர்கள், பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் உள்ளிட்ட யாரும் இடைமறித்து பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவை வாழ்வா, சாவா போட்டியில் லாட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் சந்திக்கிறது. இனிவரும் 4 போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வென்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x