Last Updated : 17 Jun, 2019 04:22 PM

 

Published : 17 Jun 2019 04:22 PM
Last Updated : 17 Jun 2019 04:22 PM

மூளையில்லாத கேப்டன் சர்பிராஸ்; சராசரி பாக். வீரர்களிடம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது: அக்தர் விளாசல்

பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் கான் மூளையில்லாத கேப்டன். இப்போது இருக்கும் சாராசரி பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இருந்து மிகச்சிறப்பான செயல்பாடு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயிப் அக்தர் விளாசியுள்ளார்.

உலகக் கோபைப் போட்டயின் லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் பாகிஸ்தான் 7-வது முறையாக தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயிப் அக்தர்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் அணியையும், கேப்டன் சர்பிராஸ் அகமதுவையும் காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:

சர்பிராஸ் அகமதுவைப் போன்று ஒரு மூளையில்லாத கேப்டன் இருக்க முடியுமா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. நம்மால் சேஸிங் செய்ய முடியாத நிலையில் பின் எதற்கு சேஸிங்கை தேர்வு செய்ய வேண்டும்.

ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது, ஈரப்பதமாக இல்லை எனும் போது பேட்டிங்கைதேர்வு செய்யலாமே. முதலில் சர்பிராஸ் அகமது அணியின் பலம் பேட்டிங் அல்ல, பந்துவீச்சுதான் என்ற உண்மையை அறிய வேண்டும்.

டாஸ்வெல்வது ஆட்டத்தின் முக்கியமான விஷயம். ஆனால், டாஸ வென்ற சர்பிராஸ் எதற்காக பீல்டிங் தேர்வு செய்தார். டாஸ் வென்று பேட்டிங் செய்திருந்தாலே ஏறக்குறைய பாதி வெற்றி பெற்றதுபோலத்தான். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள். போட்டியில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக முயற்சித்தீர்கள். மறுபடியும் முட்டாள்தானமான, மூளையில்லாத கேப்டன்ஷிப், மூடத்தனமான நிர்வாகம்தான் வெளிவந்துள்ளது.

நமது அணியில் இன்சமாம், யூசுப், சயீத் அன்வர், ஷாகித் அப்ரிடி ஆகிய மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் இருந்தபோதே, நம்மால் 1999-ம் ஆண்டு 227 ரன்களே இதை மைதானத்தில் சேஸிங் செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது 336 ரன்களை எவ்வாறு சேஸிங் செய்ய முடியும். நமக்கு ஏற்றார்போல் டாஸ் வென்றவுடன், பேட்டிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும்.

கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி செய்த தவறுகளை இந்த முறை பாகிஸ்தான் செய்துள்ளது. கர்மா பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. சராசரியான பாகிஸ்தான் வீரர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவுக்கு செய்யக்கூடிய விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.

பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரும், அணி நிர்வாகமும் அணியை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கேப்டன் சர்பிராஸ் அகமது 10-ம்வகுப்பு மாணவர் போல் செயல்பட்டு முடிவுகளை எடுக்கிறார். எவ்வாறு வெற்றி பெறுவது என அவருக்குத் தெரியவில்லை .

பாகிஸ்தான் அணிக்கு ட்வீட் செய்து இம்ரான் கான் ஊக்கப்படுத்தக்கூடாது. எந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்களோ அந்த வீரர்களுக்கு ட்வீட் செய்ய வேண்டும்.

இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x