Last Updated : 17 Jun, 2019 03:09 PM

 

Published : 17 Jun 2019 03:09 PM
Last Updated : 17 Jun 2019 03:09 PM

1970களில் மே.இ.தீவுகள் அணியைப் பார்த்தது போன்று இந்திய அணியினர் இருக்கிறார்கள்: ஸ்ரீகாந்த் புகழாரம்

இப்போதுள்ள இந்திய அணியைப் பார்க்கும் போது, எனக்கு கடந்த 1970-களில் துடிப்புடன், ஆவேசத்துடன் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பார்த்த மாதிரி இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7-வது முறையாக நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வீழ்த்தியது. இதுவரை உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஐசிசியின் இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:

’’இப்போதுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணியைப் பார்க்கும் போது எனக்கு கடந்த 1970-களில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பார்த்த நினைவு வருகிறது. இந்திய அணியுடன் விளையாடும் எதிரணிகள், உளவியல் ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்துவிடுகிறார்கள். இந்திய அணியை எதிர்கொள்ளும் அணிகள் அச்சப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். இந்திய அணிக்கு ஈடுகொடுத்து எவ்வாறு ஆடப்போகிறோம் என்று நினைத்து உடனடியாக முன்வைத்த காலை பின்வைக்கிறார்கள்.

ரோஹித் சர்மா எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எனக்கு பாகிஸ்தானுக்கு எதிராக கே.எல்.ராகுல் விளையாடிய இன்னிங்ஸ் முக்கியமானது. ஷிகர் தவண் இல்லாத நிலையில், எவ்வாறு இந்திய அணி தொடக்க விக்கெட்டை தக்கவைக்கப் போகிறது என்று நினைத்த நிலையில் ராகுல் சிறப்பாக விளையாடினார்.

ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சிறப்பாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார்கள். இவர்களின் ரன் குவிப்பு இந்திய அணி முன்னோக்கி நகர்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், குல்தீப் யாதவ் குறித்து கவலை இருந்தது. ஃபார்மில் இல்லை என்று பேசப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் பாபர் ஆசம் விக்கெட்டை குல்தீப் எடுத்தது மிகச்சிறப்பான பந்துவீச்சு.

பும்ரா, புவனேஷ்வர் குமார், யஜூவேந்திர சாஹல், குல்தீப் அனைவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். இவர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும். குட்டி இங்கிலாந்து போல் இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அழுத்தம் பாகிஸ்தான் அணிக்குத்தான் இருந்தது. ஆனால் ரோஹித் சர்மா தொடக்க வீரராக வந்தாலும், எந்தவிதமான அழுத்தமும் இன்றி விளையாடினார். இது உலகக் கோப்பை போட்டி. எவ்வளவுபெரிய அணியாக இருந்தாலும், அழுத்தத்தை நமக்கு நாமே கொடுக்கக் கூடாது. அந்த அழுத்தம் இன்றி ரோஹித் விளையாடினார்.

புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் லேசானது என்றாலும், ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக விஜய் சங்கரை நாம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்’’.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x