Last Updated : 17 Jun, 2019 12:14 PM

 

Published : 17 Jun 2019 12:14 PM
Last Updated : 17 Jun 2019 12:14 PM

இப்போ இந்தியாதான் எங்களைவிட பெஸ்ட் டீம்: பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது புகழாரம்

கடந்த 1990களில் நாங்கள் சிறந்த அணியாக இருந்தோம், ஆனால், இப்போது எங்களைக் காட்டிலும் இந்திய அணிதான் சிறந்த அணியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது புகழாரம் சூட்டியுள்ளார்.

மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி வென்றது. இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை வென்று இந்தியா வரலாற்றை தக்கவைத்துக் கொண்டது.

போட்டி முடிந்தபின், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 1990-களில் நாங்கள் தான் சிறந்த அணியாக இருந்தோம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இப்போது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் அதிகமான அழுத்தம் நிறைந்த போட்டியாக இருக்கிறது. இதில் வீரர்களுக்குத்தான் அதிகமான மனஅழுத்தம் இருந்தது.

இந்த அழுத்தங்களை மிகச்சரியாக கையாண்டவர்கள்தான் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தியா அழுத்தத்தை வெற்றிகரமாக கையாண்டார்கள். கடந்த 1990-களில் எடுத்துக்கொண்டால், இந்திய அணியைக் காட்டிலும் பாகிஸ்தான் அணிதான் சிறந்ததாக இருந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், இப்போது நிலைமை மாறி, எங்களைக் காட்டிலும சிறந்த அணியாக இந்தியாதான் இருக்கிறது. இதை ஏற்கிறேன்.

ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது குறித்தும், பிரதமர் இம்ரான்கான் ட்வீட் குறித்தும் பேசுவதைக் காட்டிலும், நாங்கள் பந்துவீ்ச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டோம். 3 பிரிவுகளிலும் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை.

கடந்த 2 நாட்களாக நாங்கள் ஆடுகளத்தைப் பார்க்கவில்லை, ஆடுகளம் மூடி வைக்கப்பட்டு இருந்ததால், ஆடுகளத்தில் மேற்புறத்தில் ஈரம் இருக்கும், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். ஆனால், அது தவறாக அமைந்துவிட்டது. டாஸ் வென்றாலும், சரியான திசையில் அதை பயன்படுத்தவில்லை.

ரோஹித் சர்மாவை ரன் அவுட் செய்ய இருமுறை வாய்ப்பு கிடைக்கும் அதை தவறவிட்டுவிட்டோம். அவரை ரன் அவுட் செய்திருந்தால் ஆட்டம் திசைமாறி இருந்திருக்கும். எங்கள் வீரர்கள் அனைவரும் இந்திய அணியை சமாளிக்கும் அளவுக்கு மனதளவிலும், உடல் அளவிலும் தகுதியாகத்தான் இருக்கிறார்கள்.

இமாத் வாசிமிற்கு மட்டுமே சிறிது உடல்ரீதியான பிரச்சினை இருந்தது. மற்ற வீரர்கள் அனைவரும் உடல்தகுதியுடனே இருந்தார்கள், நல்ல மனநிலையிலும் இருந்தார்கள். அதேபோல, மூத்த வீரர்கள் முகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக் இருவரும் என் மீது அதிருப்தியாக இருக்கிறார்கள் எனக் கூறுவது தவறு. ஓய்வு அறையில் அனைவரும் ஒருவொருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள்.

இனிமேல் தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அடுத்துவரும் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான அனைத்துஆட்டங்களிலும் நாங்கள் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது மிவும் கடினமான ஒன்றுதான். ஆனால், வெற்றியுடன் நகர்வோம் என நம்புகிறேன்.

இவ்வாறு சர்பிராஸ் அகமது தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x