Published : 15 Jun 2019 08:06 PM
Last Updated : 15 Jun 2019 08:06 PM

ஆஸி. 334 ரன்களை எதிர்த்து இலங்கை காட்டடி தொடக்கம்: 12.4 ஓவர்களில் 100 நோ-லாஸ்; பீதியில் ஆஸ்திரேலியா

ஐசிசி உலகக்கோப்பை 20வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏரோன் பிஞ்ச் அதிரடி சதம் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள், மேக்ஸ்வெல் 46 ரன்கள் மூலம் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுக்க, இலங்கை அணி அதிரடி தொடக்கம் கண்டு ஆஸ்திரேலியாவுக்கு பீதியைக் கிளப்பியுள்ளது.

 

இலங்கை அணி 14 ஒவர்களில் 106/0. நடப்பு ரன் விகிதம் 7.55, தேவைப்படும் ரன் விகிதம் 6.39.

 

இலங்கை தொடக்க வீரர்களான கேப்டன் கருண ரத்னே 45 பந்துகளில் 50 ரன்களுடனும் குசல் பெரேரா 29  பந்துகளில்  5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தும் வெளுத்துக் கட்டி வருகின்றனர். ஜெயசூரியா, கலுவிதரன, அர்ஜுனா ரணதுங்கா, அரவிந்த டிசில்வா இலங்கை அணியை நினைவூட்டுமாறு அதிரடி ஆட்டம் காட்டி வருகின்றனர்.

 

ஸ்டார்க் 2 ஓவர் 13 ரன்கள், கமின்ஸ் 3 ஓவர் 25 ரன்கள் என்று வெளுத்துக் கட்டப்பட்டார். இடது கை வீச்சாளர் பெஹண்டார்ப் 3 ஓவர் 32 ரன்கள். கேன் ரிச்சர்ட்சன் 1.4 ஓவர் 15 ரன்கள் என்று அனைவருக்கும் அடி விழுந்து கொண்டிருக்கிறது.

 

முன்னதாக, ஆஸ்திரேலிய அணி ஏரோன் பிஞ்ச் 153 ரன்களை விளாச 334 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது.  டாஸ் வென்ற இலங்கை முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய வார்னர், பிஞ்ச் முதல் விக்கெட்டுக்காக 80 ரன்களைச் சேர்த்தனர். 26 ரன்கள் என்ற அதிருப்தி இன்னிங்சில் வார்னர், டிசில்வா பந்தில் பவுல்டு ஆனார்.

 

 

உஸ்மான் கவாஜாவின் டவுன் ஆர்டரை மாற்றி மாற்றி அவரது ரிதமை கெடுத்த நிலையில் அவர் 10 ரன்களில் ஸ்கொயர்லெக்கில் உதனா கேட்சுக்கு டிசில்வாவிடம் வீழ்ந்தார். இதனையடுத்து ஸ்மித் களமிறங்கினார்.

 

ஏரோன் பிஞ்ச் உடனேயே அதிரடியில் இறங்கினார். டிசில்வாவை அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய பிஞ்ச், மிலிந்தா சிரிவதனா பந்தை இன்னொரு சிக்ஸ் அடித்து 97 பந்துகளில் தனது 2வது உலகக்கோப்பை சதத்தையும் 14வது ஒருநாள் சதத்தையும் எடுத்தார்.

 

ஏரோன் பிஞ்ச் 150 ரன்களைக் கடந்தார், நின்றிருந்தால் இரட்டைச் சதம் அடித்திருக்கலாம், ஆனால் 15 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 153 ரன்களை எடுத்த அவர் உதனா பந்தை கவருக்குமேல் கொடியேற்றி ஆட்டமிழந்தார்.

 

ஸ்டீவ் ஸ்மித் 59 பந்துகளில் அனாயசமான 7 பவுண்டரிகள் 1 சிக்சர் 73 ரன்கள் எடுத்து மலிங்காவின் மிக அருமையான யார்க்கருக்கு பவுல்டு ஆனார்.  ஆஸ்திரேலியா வழக்கம் போல் பின்னால் சில ரன் அவுட்களுடன் விக்கெட்டுகளை அவசரம் அவசரமாக இழக்க ஒரு முனையில் அபாய கிளென் மேக்ஸ்வெல், நுவான் பிரதீப்பின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்களை விளாசி 25 பந்துகளில் 46 என்று நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியா 334 ரன்கள்.

 

இலங்கை அணியில் நுவான் பிரதீப் 10 ஒவர் 88 ரன்கள் என்று அதிகரன்களைக் கொடுத்தார். டிசில்வா 8 ஓவர் 40 ரன் 2 விக்கெட், உதானா 10 ஓவர் 57 ரன்கள் 2 விக்கெட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x