Published : 11 Jun 2019 09:53 PM
Last Updated : 11 Jun 2019 09:53 PM

ஷிகர் தவணுக்குப் பதில் ரிஷப் பந்த் என்கிறார் கவாஸ்கர்- ராயுடு என்கிறார் கம்பீர்

ஷிகர் தவண் காயம் அவரை உலகக்கோப்பையிலிருந்து விலகச் செய்தால் அவரது இடத்துக்கு அதிரடி வீரர் ரிஷப் பந்த் வரவேண்டும் என்று சுனில் கவாஸ்கரும், கெவின் பீட்டர்சனும் கூற, ராயுடு வேண்டும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர்.

 

இப்போதைக்கு தவண் அடுத்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டி மற்றும் ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஆகியவற்றில் ஆடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நூலிழை எலும்பு முறிவு இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் உலகக்கோப்பையே அவருக்கு இனி அவ்வளவுதான் என்ற நிலை உள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் ரிஷப் பந்த், ராயுடு அல்லது ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரில் ஒருவர் தவண் இடத்தை நிரப்ப அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

பெரும்பாலும் ரிஷப் பந்த் என்றே பெரும்பாலான ஊடகங்கள் ஹேஷ்யங்களை வெளியிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சுனில் கவாஸ்கர், “ரிஷப் பந்த்தைத்தான் தேர்வு செய்ய வேண்டும், அவர் ஐபிஎல் முதல் சூடான  பார்மில் இருக்கிறார்.  தன்னை முதலிலேயே உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்ற தன் தகுதி நிலையை அவர் நிரூபிக்க விரும்புவார்” என்றார்.

 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ஷிகர் காயத்தினால் இல்லையா உடனே ரிஷப் பந்த்தை தேர்வு செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

ஆனால் கவுதம் கம்பீர், “ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் கிட்டத்தட்ட ராயுடு கரியர் முடிந்து விட்டது என்றுதான் அர்த்தம். அவரது ஒருநாள் சராசரி 45, இந்த சராசரி வைத்திருக்கும் அவர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது நிச்சயம் ஏமாற்றமே.

 

வாய்ப்பு கிடைக்கவில்லையா ராயுடு தன் பெட்டிபடுக்கையைக் கட்டிக் கொள்ளலாம்,  ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தலாம், ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு முடிவுக்கு வந்து விட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x