Last Updated : 04 Jun, 2019 05:12 PM

 

Published : 04 Jun 2019 05:12 PM
Last Updated : 04 Jun 2019 05:12 PM

உலகக்கோப்பையில் இருந்து விலகல்: முடிவுக்கு வருகிறது ஸ்டெயினின் கிரிக்கெட் வாழ்க்கை?

தோள்பட்டை காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின்  உலகக் கோப்பைத் தொடரில் இருந்து விலகுகிறார் என அந்நாட்டு அணி அறிவித்துள்ளது.

ஸ்டெயினுக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பெருன் ஹென்ட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான் அவர் அறிமுகமாகினார்.

களத்தில் ஆக்ரோஷமாக பந்துவீசக்கூடியவர், பந்துகளை விரைவாக டெலிவரி செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்ற ஸ்டெயின் இல்லாதது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு.

தற்போது ஸ்டெயினுக்கு 35 வயதாகிறது, ஏற்கெனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ஸ்டெயின் சமீபத்தில்தான் விளையாட வந்தார். இப்போது மீண்டும் தோள்பட்டை காயத்தால் அவதிப்படுவதால், ஏறக்குறைய அவரின் கிரிக்கெட் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஐபிஎல்போட்டியில் பெங்களூரு அணியில் இடம் பெற்று ஒரு போட்டியில் மட்டும் பந்துவீசிய ஸ்டெயின் இதே தோள்பட்டை காயத்தால்தான் விலகினார்.

உலகக்கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும்போதுகூட முழுமையாக உடல்தகுதி இல்லாமல்தான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இருபோட்டிகளில் பங்கேற்காத நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் முழுமையாக குணமடையாததால், அவர் உலகக்கோப்பைத் தொடரில் இருந்தே விலகப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்டெயின் இதுவரை 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2015-ம் ஆண்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறப்பு ஸ்டெயினுக்கு இருக்கிறது.

தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் இல்லாதது, இங்கிடி காயத்தால் விளையாடதது போன்றவை அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x