Published : 04 Jun 2019 01:54 PM
Last Updated : 04 Jun 2019 01:54 PM

தோற்றால் வெட்கப்பட வேண்டும்: சக இலங்கை வீரர்களைச் சாடிய லஷித் மலிங்கா

தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்வி என அணி சென்று கொண்டிருக்கிறது என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா சக இலங்கை வீரர்களைச் சாடியுள்ளார்.

 

இன்று இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து ஆடுகிறது. இந்நிலையில் நேற்று இலங்கை செய்தியாளர்களைச் சந்தித்த லஷித் மலிங்கா, “கடந்த ஒன்று அல்லது 2 ஆண்டுகளாக தோற்க வேண்டியது பிறகு தோல்வியை மறப்போம் அடுத்த போட்டிக்கு நகர்வோம் அதில் நன்றாக ஆடுவோம் என்போம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டை இப்படி ஆட முடியாது.

 

தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும், தோல்விகளை மறப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.  நான் 4 உலகக்கோப்பைத் தொடர்களில் ஆடியுள்ளேன், இருந்தும் எனக்கு ஆப்கான் அணிக்கு எதிரான போட்டி குறித்த பயம் இருக்கிறது. இது போன்று பயம், பதற்றம் இல்லாத வீரர்களிடமிருந்து 100% பங்களிப்பு எதிர்பார்ப்பது கடினம். அவர்கள் யோசிக்க வேண்டும் 100% பங்களிப்பு செய்யவில்லையா நாம் அணிக்கு நீதி செய்யவில்லை என்பதை அவர்களே உணர வேண்டும்.

 

அனைத்து வீரர்களும் தங்கள் தவறுகளை உணர வேண்டும்.  செய்த தவறுகளையே திரும்பத் திரும்ப செய்தால் எப்படி? அணியின் மூத்த வீரராக நான் கூறுவதெல்லாம் ஒவ்வொருவரும் கடமையைச் சரியாகச் செய்யாத போது பயம் ஏற்பட வேண்டும். தோல்வி குறித்து வெட்கப்பட வேண்டும். நாம் சிறப்பாக ஆடியே ஆக வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும், இல்லையெனில் நம் கிரிக்கெட் முன்னேறாது.

 

நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்ய தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 வீரர்கள் இவர்கள், ஆகவே இவர்கள் இனி பயத்துடன் ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். வெறும் பயணிகளாக முடிந்து விடக்கூடாது.  பலதரப்பட்ட ஆட்டச்சூழல்களை கருத்தில் கொண்டு களத்தில் ஆடும்போது ஒருவரை ஒருவர் அனுசரித்து ஒத்துழைப்புடன் ஆடுவது அவசியம்.

 

வீரர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம், இந்தத் தருணத்தில் நாம் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது, ஆனால் மன ரீதியாக கடினமாக வேண்டும்.

 

நம் டாப் 7 மட்டையாளர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். பொறுமை மிக அவசியம். இந்தச் சூழ்நிலை நமக்குத் தெரியும் யாராவது ஒருவர் டாப்பில் 60-70 ரன்களை எடுக்க வேண்டும்.” என்று பொரிந்து தள்ளினார் மலிங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x