Last Updated : 04 Jun, 2019 12:22 PM

 

Published : 04 Jun 2019 12:22 PM
Last Updated : 04 Jun 2019 12:22 PM

பீல்டிங்தான் படுமோசம்: இங்கி. கேப்டன் மோர்கன் குற்றச்சாட்டு

எங்கள் அணியில் பந்துவீச்சு, பேட்டிங் நன்றாகத்தான் இருந்தது, ஆனால் பீல்டிங் படுமோசமாகச் செய்தார்கள், இதுதான் தோல்விக்கு காரணம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் குற்றம்சாட்டினார்.

நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி. இங்கிலாந்து அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் அதிகமான ரன்களை வழங்கியதால்தான் பாகிஸ்தான் 348 ரன்கள் வரை சேர்க்க முடிந்தது.

இந்த ஆட்டத்தில் மட்டும் இங்கிலாந்து அணி வீரர்கள் 13 முறை பீல்டிங்கை கோட்டைவிட்டனர். 4 கேட்ச்சுகளை தவறவிட்டனர், 20 உதரிகள்வரை வழங்கினார்கள். இதுதான் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

முகமது ஹபீஸ் 14 ரன்கள் சேர்த்தபோது கிடைத்த கேட்ச்சை ஜேஸன் ராய் தவறவிட்டார். இதனால், 84 ரன்கள்வரை ஹபிஸ் அடித்தார். இதேபோன்று பல தவறுகளை இங்கிலாந்து வீர்ரகள் செய்தார்கள்

இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது:

''என்னைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் என்று நினைக்கவில்லை. ஆனால் பீல்டிங் படுமோசமாக இருந்தது. நாங்கள் மோசமாக பீல்டிங் செய்ததன் விலையைத்தான் இந்த போட்டியில் கொடுத்திருக்கிறோம். ஏறக்குறைய 50 முதல் 60 ரன்களை மோசமான பீல்டிங்கால் எதிரணிக்கு வழங்கி இருக்கிறோம்.

பந்துவீச்சில், பேட்டிங்கில்கூட நாம் சிறப்பாகச் செயல்படாமல் முடியாமல்  போகலாம். இதுபோன்ற நீண்ட தொடரில் ஒருபோட்டியில் பேட்டிங் சிறப்பாக இருக்கும். ஒரு போட்டியில் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும்.

ஆனால், பீல்டிங்கில் மட்டும்  நாம் தவறு செய்யக்கூடாது. பீல்டிங் மட்டும் எப்போதும் நிலைத்தன்மையுடன், உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். கடினமாக முயற்சி செய்தும், உழைத்தும் பீல்டிங் மோசமாக செய்ததால், வெற்றியை இழந்தோம்.

வெற்றிக்கு அருகே சென்று 14 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோற்றிருக்கிறோம். ஆனால், மெத்தனமாக தோற்கவில்லை. பாகிஸ்தான் அணியும் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் கடைசிவரை ஆட்டம் யார் பக்கம் செல்லும் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகக்கோப்பை போட்டிக்கு சிறந்த விளம்பரமாகத்தான் இந்தப் போட்டியைப் பார்க்கிறோம்.

கடினமாக வீரர்கள் உழைத்தும் முடிவு பாதகமாக கிடைத்தது எங்களுக்கு சற்று வேதனையாகத்தான் இருக்கிறது''.

இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x