Published : 31 May 2019 05:16 PM
Last Updated : 31 May 2019 05:16 PM

இவ்வளவுதான் பாகிஸ்தானா? - 2 மணிநேரத்திற்குள் ஆல் அவுட்: மே.இ.தீவுகளிடம் 105 ரன்களுக்கு ‘பவுன்ஸ்’ அவுட்

மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்குச் சுருண்டு படு ஏமாற்றமளித்தது. 3 மணிக்கு தொடங்கிய இன்னிங்ஸ் 5 மணிக்குள் முடிந்தது.

 

டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் பிட்சைச் சரியாகக் கணித்து முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். பந்துகள் எகிறத் தொடங்கின. பாகிஸ்தான்பேட்ஸ்மென்கள் கிரீஸிற்குள் கொதிமணலில் வெறுங்காலுடன் ஆடுவது போல் குதிக்க நேரிட்டது, வரிசையாக ‘ஊர்வலம்’ போவது போல் விக்கெட்டுகள் சரிய பாகிஸ்தான் ரசிகர்கள் கொதிக்க நேரிட்டது.

 

இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டாலும், வேகப்பந்துவீ்ச்சைப் பொறுத்தவரை பவுன்ஸரோடு சேர்த்து வேகப்பந்துவீச்சு வீசினால் பேட்ஸ்மேன்களால் ஆட முடியாத நிலை ஏற்படும் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

 

அதைத் தெரிந்து கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளர்கள் ரஸல், ஹோல்டர், தாமஸ், காட்ரல் ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிற்க வைத்து படம் காட்டினர். பின்னங்காலில் கிரீஸுக்குள் நின்று பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை குதிக்க வைத்தனர்.

மே.இ.தீவுகள் அணியில் ஒஷேன் தாமஸ் 5.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கோல்டன் ஆர்ம் ஆந்த்ரே ரஸல் 3 ஓவர் 1 மெய்டன் 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

 

பகார் ஜமான் கொஞ்சம் ஆக்ரோஷமாகத் தொடங்கி 2 பவுண்டரிகள் 1 அபாரமான ஜெயசூரியா பாணி சிக்சர் அடித்து ஆக்ரோஷம் காட்டி வந்த நிலையில் இமாம் உல் ஹக் 2 ரன்களில் காட்ரெல் வீசிய சாதுவான லெக் திசை பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேற பாகிஸ்தான் சரிவு தொடங்கியது.

 

பகர் ஜமான் 22 ரன்களில் ஆந்த்ரே ரஸலின் ஆக்ரோஷ பவுன்சரை புல் ஆட முயன்று பந்து ஹெல்மெட்டின் கிரில்லில் பட்டு இவர் பந்து எங்கு சென்றது என்று தெரியாமல் விழிக்க அது உருண்டு போய் பைல்களை தொந்தரவு செய்தது.  ஹாரிஸ் சொஹைலுக்கு ரஸல் ஷார்ட் பிட்ச்களாக வீசி ஒரு பந்தை உடலுக்குக் குறுக்காக இழுக்க எட்ஜ் ஆகி வெளியேறினார்.

 

பாபர் ஆஸமுக்கு ஏற்கெனவே ஹெட்மையர் பாயிண்டில் கேட்சை கோட்டை விட்டார், ஆனால் அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறி 22 ரன்களில் தாமஸின் அவுட்ஸ்விங்கரை சோம்பேறித் தனமாக மட்டையை விட எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ஷேய் ஹோப்பின் டைவிங் கேட்ச் ஆனது.

 

சர்பராஸ் அகமதுவுக்கு ஹோல்டர் ஒரு எழும்பிய பந்தை வீச இடுப்புக்கு மேல் லெக் திசையில் வர அதை கிளவ்வில் ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார், ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பானது.  இமாத் வாசிம், ஹசன் அலி ஆகியோரை ஹோல்டர் காலி செய்ய,ஷதாப் கானை தாமஸ் வீழ்த்தினார், ஹபீஸ் 16 ரன்களில் தாமஸ் பவுன்சருக்கு மட்டையைத் தொங்க விட்டு கேட்ச் ஆனார். கடைசியில் வஹாப் ரியாஸ் 1 பவுண்டரி 2 சிக்சர் என்று ஒரு காட்டுக் காட்டி கடைசியில் பவுல்டு ஆக பாகிஸ்தான் 22 ஒவர்களில் 105 ஆல் அவுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x