Published : 28 May 2019 07:53 PM
Last Updated : 28 May 2019 07:53 PM

ராகுல், தோனி அதிரடி சதம்; தவண், ரோஹித் சொதப்பல்: இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனி ஒருநாள் போட்டியில் ஒரு அதிரடி சதத்தை இன்று வங்கதேசத்துக்கு எதிரான உ.கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளாச, ராகுலும் முன்னதாக ஒரு சதத்தை எடுக்க  இந்திய அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.

 

கார்டிப் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்க அணி முதலில் இந்திய அணியை மட்டை பிடிக்க அழைத்தது.

 

ஒருநாள் போட்டிகளில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டுத் தொடரில் சதம் எடுத்த தோனி இப்போது சதம் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். என்ன! இந்தச் சதம் கணக்கில் சேராது, புள்ளிவிவரங்களிலும் சேராது, ஆனால் தோனியின் இந்த சதம் இந்திய அணிக்கு உலகக்கோப்பைக்கு முன்பாக மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவும் தான் எதிர்கொண்ட 73வது பந்தை, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் அபுஜயேத் வீசிய பந்தை நேராக ஒரே தூக்குத் தூக்கி சிக்சருக்கு அனுப்பி சதம் கண்டார் தோனி. அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் சிக்ஸ் இதுதான், சத சிக்ஸ்.  99லிருந்து 105க்குத் தாவினார். அதன் பிறகு அதே ஒவரில் மீண்டும் ஒரு மிகப்பெரிய சிக்ஸ் விளாசி 78 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் சொதப்பினர், தவண் வெளியே ஸ்விங் ஆகும் பந்தின் தன் பலவீனத்தை மறைக்க காலை நன்றாக முன்னால் தூக்கி முன் கூட்டியே போட உள்ளே வந்த முஸ்தபிசுர் பந்தை அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் எல்.பி.ஆகி வெளியேறினார். ரோஹித் சர்மா அடிக்க வேண்டிய பந்துகளைக் கூட அடிக்காமல் சோம்பேறித் தனமாக டிபன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார். கோலி, ராகுல் இணைந்து நிலைப்படுத்தினர்.

 

விஜய் சங்கர் 2 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்ப இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 102/4 என்று தடுமாறிய போது கே.எல்.ராகுலுடன் இணைந்தார் தோனி. இறங்கியவுடனேயே கொஞ்சம் கடினமான பந்தை சரியான் டைமிங்கில் கவர் பவுண்டரிக்கு அனுப்பி எண்ணிக்கையைத் தொடங்கினார்.

 

இவரும் ராகுலும் ரன் விகிதத்தை உயர்த்தத் தொடங்கினர்.  கே.எல்ராகுல் 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். தோனி முதல் 15 பந்துகளில் 8 ரன்கள். 30 ஓவர்கள் முடிவில் 150/4  என்று கொஞ்சம் ரன் விகிதம் முன்னேற்றம் கண்ட நிலையில் ராகுல் 31வது ஓவரை விச வந்த ஷாகிப் அல் ஹசனை நன்றாகக் கவனித்தார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது.  இந்த ஓவருக்குப் பிறகு வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் வர தோனி மேலேறி வந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்சரை அடித்து சிக்சர் கணக்கைத் தொடங்கினார்.

 

30 ஓவர்களில் 150/4 என்ற நிலையிலிருந்து 35 ஓவர்கள் முடிவில் 199/4 என்று ரன் விகிதம் மளமளவென உயர்ந்தது, தோனியும் ராகுலும் இணைந்து தங்கள் கூட்டணி ரன் விகிதத்தை 7.75 என்று பராமரித்து வந்தனர்.  பிறகு மொசாடக் ஹுசைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தோனி அரைசதத்தை 39 பந்துகளில் எடுத்தார். அரைசதத்தைக் கொண்டாட ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். தோனியும் ராகுலும் இணைந்து 20.2 ஓவர்களில் அதாவது 122 பந்துகளில் 164 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

 

கே.எல்.ராகுல் 99 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 108 ரன்கள் விளாசி சபீர் ரஹ்மான் லெக்ஸ்பின்னில் பவுல்டு ஆனார். 43.2 ஓவர்களில் 266/5 என்ற நிலையிலிருந்து தோனி, பாண்டியா (21), கார்த்திக் (7), ஜடேஜா (11) ஆகியோர் இணைந்து 359 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். கடைசி 40 பந்துகளில் 93 ரன்கள் விளாசப்பட்டது, தோனி 78 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 113 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் பவுல்டு ஆனார்.

 

முஸ்தபிசுர் ரஹ்மான்  கோட்டாவை முடிக்கவில்லை 8 ஓவர்கள் 43 ரன் ஒரு விக்கெட், அதுவும் ஷிகர் தவண் அசிங்கமாக எல்.பி.ஆகி வெளியேறினார். மீண்டும் ஒரு தோல்வி இன்னிங்ஸ் அவருக்கு, ரோஹித் சர்மா படு தடவல் இன்னிங்சில் 42 பந்துகளில் 1 பவுண்டரி 19 ரன் எடுத்து படு சோம்பேறித்தனமான ஒரு புல் ஷாட்டில் ரூபல் ஹுசைன் பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார்.

 

விராட் கோலி 46 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து மொகமது சைபுதின் பந்தில் பவுல்டு ஆனார். இரண்டாவது முறையாக பயிற்சி ஆட்டத்தில் பவுல்டு ஆனார் விராட் கோலி.  விஜய் சங்கர் 2 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.

 

தொடக்கத்தில் கோலியாகட்டும், ரோஹித் சர்மாவாகட்டும் அடிக்க வேண்டிய பந்துகளையே லொட்டு வைத்தனர். கடைசியில் தோனிக்கு இறுதி ஓவர்களை வங்கதேச வீச்சாளர்கள் ஏதோ வலையில் வீசுவது போல் ஃப்ரீ ஹிட் பந்துகளை வீசினர் என்றால் மிகையாகாது. மொத்தத்தில் தோனியின் 113 ராகுலின் 108 இந்திய அணியை மிகப்பெரிய ரன் எண்ணிக்கைக்கு இட்டுச் சென்றது.

 

உலகக்கோப்பை போட்டியில் பவுலிங் இவ்வளவு மோசமாக இருக்க வாய்ப்பில்லை.  அப்படியும் மோர்தசா, முஸ்தபிசுர் ரஹ்மான் மிகவும் டைட்டாக வைத்திருந்தனர்.  அபுஜயேத், ஷாகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ், மொசாடக் ஹுசைன் ஆகியோர் வலையில் வீசுவது போல் வீசினர். மொத்தத்தில் இது ஒரு 400-450 பிட்ச் இதில் 359 ரன்களை இந்தியா எடுத்துள்ளது. தோனி இந்த மோசமான பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சதத்துடன் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x