Published : 25 May 2019 04:46 PM
Last Updated : 25 May 2019 04:46 PM

எனக்கு கோலி வேண்டும், ரஷித்கான் போதும், பாண்டிங் வரட்டும்: 10 கேப்டன்களின் வித்தியாசமான ஆசை

'எனக்கு கோலி வேண்டும்', 'எனக்கு ரஷித்கான் போதும்', 'ரபாடாவை கொடுத்திருங்க', 'யாரும்வேண்டாம், கோச்  பாண்டிங் வரட்டும்', 'பும்ரா மட்டும் வேண்டும்' ,  இவையெல்லாம் 10 கேப்டன்களின் வித்தியாசமான ஆசைகள்.

இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் தங்களின் வித்தியாசமான ஆசைகளை தெரிவித்துள்ளார்கள்.

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள் லண்டனில் ஐசிசி சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேற்றுமுன்தினம் பங்கேற்றார்கள்.

அப்போது அவர்களிடம் ஒரு இக்கட்டான சூழலில் மற்ற அணியில் இருந்து ஒரு வீரரை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வாய்ப்பளித்தால் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி முன்வைக்ககப்பட்டது. இந்த கேள்விக்கு ஒவ்வொரு அணியின் கேப்டனும் வித்தியாசமான பதிலை அளித்து வியப்பில் ஆழ்த்தினார்கள்.

கோலியிடம் கேட்டபோது அவர் கூறுகையில், " உண்மையில் இது கஷ்டமான விஷயம். நாங்கள் வலிமையான அணி என்று நினைக்கிறோம். ஆனாலும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பினால், டி வில்லியர்ஸைத்தான் தேர்வு செய்வேன் ஆனால் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால், டூப்பிளசிஸ்ஸை தேர்வு செய்வேன்" எனத் தெரிவித்தார்.

வங்கதேச கேப்டன் மஷ்ரபி மோர்தசா கூறுகையில், " நான் விராட் கோலியை என்னுடைய அணிக்கு எடுத்துக்கொள்வேன்" என்றார்.

தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில்,  " நான் பேட்ஸ்மேன்களுக்கு பதிலாக பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வேன். ஒருவேளை கோலி விரும்பினால் நான் கோலியைத் தேர்வு செய்வேன். இல்லாவிட்டால், ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்வேன் " என்றார்.

உடனே விராட் கோலி தலையிட்டு " நானும்கூட பந்துவீச்சாளர்களைத் தேர்வுசெய்வேன், ரஷித் கான், ஆஸி. வீரர் பாட் கம்மின்ஸை தேர்வு செய்வேன்" என்றார்

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் கூறுகையில், " இந்த உலகக் கோப்பைத் தொடரில் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஆதலால், நான் ரஷித் கானை தேர்வு செய்வேன்" எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வித்தியாசமாக பேசினார். " என்னுடைய அணி பலமாக இருக்கிறது. இப்போதைக்கு என்னுடைய அணியை மாற்றமாட்டேன். வேண்டுமென்றால், பயிற்சியாளர் பாண்டிங்கை என் அணிக்கு அனுப்புங்கள். ரிக்கி  பாண்டிங்கை எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது " எனக்கு இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை கொடுத்துவிடுங்கள்" என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேசுகையில், " தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவைத்தான் நான் தேர்வு செய்வேன். ரபாடாவிடம் ஏராளமான திறமை உற்சாகம் இருக்கிறது. ரபாடா ஒரு சூப்பர் ஸ்டார்" என்றார்.

இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே கூறுகையில், " எனக்கு பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஸ்டோக்ஸ் ஒரு கேம் சேஞ்சர் அவர் அணியில் இருப்பது ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லும்" என்று விருப்பத்தை தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x