Last Updated : 25 May, 2019 10:17 AM

 

Published : 25 May 2019 10:17 AM
Last Updated : 25 May 2019 10:17 AM

விஜய் சங்கருக்கு திடீர் காயம்: உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பதில் அளிக்காத அணி நிர்வாகம்?

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு நேற்று பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து பதில் அளிக்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டது.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இருவரும் இடம் பெற்றுள்ளனர். நடுவரிசையில் பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கிலும் ஆல்ரவுண்டர் தேவை என்ற ரீதியிலும் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டத்துக்கு தயாராகும் வகையில் நேற்று இந்திய அணியினர் வலைபயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கலீல் அகமது வீசிய பந்தை, தடுத்து ஆடும் போது, விஜய் சங்கரின் வலது முழங்கையில் பந்துபட்டு காயம் ஏற்பட்டது. வலிதாங்க முடியாமல் அவதிப்பட்ட விஜய் சங்கர் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறி ஓய்வறைக்குச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயத்தின் தன்மை அறிய விஜய் சங்கருக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டன. ஆனால், காயத்தின் தன்மை என்ன என்பது குறித்து பதில் அளிக்க கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துவிட்டது. அதனால் இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் உடல்நலன் குறித்த அறிக்கை கிடைத்த பின்புதான் அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை விஜய் சங்கருக்கு காயம் பெரிதாக இருந்து அவர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்காத சூழல் ஏற்படும் பட்சத்தில் கேப்டன் கோலிக்கும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் மிகப்பெரிய தலைவலியாக அமையும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவோடு இணைந்து பந்துவீசவும், பகுதிநேர பந்துவீச்சாளராகவும் விஜய் சங்கரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுத்தான் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் போது விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் அவர் பயிற்சிப் போட்டியில் களமிறங்குவது குறித்து உறுதியில்லாத நிலையில் இருக்கிறது.

ஒருவேளை விஜய் சங்கருக்கு அச்சப்படும் விதத்தில் காயம் இல்லாத பட்சத்தில், நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் இன்று 4-வது வீரராக களமிறக்கி பரிசோதிக்கப்படும் எனத் தெரிகிறது. விஜய் சங்கர் விளையாடாவிட்டால், அந்த இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்குவார்.

மேலும், ஐபிஎல் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்த இந்திய வீரர் கேதார் ஜாதவ் உடல் தகுதியுடன் நேற்று பயிற்சியில் ஈடுபட்டாலும், பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவி்ல்லை. கேட்ச் பிடிக்கும் பயிற்சிலும், பந்தை எறியும் பயிற்சியிலும் மட்டுமே ஜாதவ் ஈடுபட்டார். இன்றைய பயிற்சிப் போட்டியிலும் ஜாதவ் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x