Published : 25 May 2019 09:04 AM
Last Updated : 25 May 2019 09:04 AM

பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானுக்கு மனரீதியானஅதிர்ச்சி - எளிதில் ஊதியது ஆப்கான்

உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு முன்னதாக பாகிஸ்தான் போல் உதை வாங்கும் அணி எதுவுமாகவும் இருக்க வாய்ப்பில்லை, ஆஸ்திரேலியாவிடம் ஒயிட் வாஷ், இங்கிலாந்திடம் ஏறத்தாழ ஒயிட் வாஷ் (4-0), தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிடம் அதிர்ச்சித் தோல்வி.

 

ஆனால் இனி ஆப்கானிடம் எந்த அணியாவது தோற்றால் அதை அதிர்ச்சித் தோல்வி என்று கூறுவதை தவிர்க்கப் பழக வேண்டும். பயிற்சி ஆட்டத்தில் நாம் அதிகம் நுட்பங்களை, உத்திகளைப் பார்க்கக் கூடாது என்றாலும் கேட்ச்களை விடுவது, மிஸ்பீல்ட், படு அபத்தமாக பந்து வீசுவது என்று எந்த அணி ஆடினாலும் அதை வெறும் பயிற்சி ஆட்டம் என்று பார்க்க முடியாது.

 

 

பிரிஸ்டலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து பாபர் ஆஸம் நீங்கலாக ஒருவருக்கும் பேட்டிங் வரவில்லை என்றுதான் கூற வேண்டும். பாபர் ஆஸம் சதமெடுக்க (112) பாகிஸ்தான் அணி 65/3 என்ற நிலையிலிருந்து 100/4 என்று ஆகி ஒருவழியாக 262 ரன்களை எட்டியது, ஆப்கான் தரப்பில் மொகமது நயீப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானை முடக்கினார், ரஷீத் கான் 9-1-27-2 என்று கட்டிப்போட்டார். தவ்லத் ஸத்ரான் 5.5-37-2 என்று முடிந்தார்.

 

 

தொடர்ந்து ஆடிய ஆப்கான் அணி மொகமத் ஷஸாத் (23) காயமடைந்து வெளியேறினாலும் இளம் அதிரடி வீரர், அபாய வீரர் ஹஸ்ரதுல்லா சஸாய் (49) மூலம் 11 ஒவர்களில் 80 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டு  ஹஸ்மத்துல்லா ஷாஹிதியின் மிக அருமையான பதற்றமில்லாத 74 ரன்களினாலும் நபியின் 34 ரன்களினாலும் இலக்கை கடைசி ஒவரில் 263/7 என்று எட்டி எளிதில் வெற்றி பெற்றது.  2 பந்துகள் மீதம் வைத்துதானே வென்றது என்று கேட்கக் கூடாது, போட்டியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் ஆப்கானிஸ்தான் மிக எளிதாக வென்றது என்று.

 

பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் தொடக்கத்திலிருந்தே சிக்கல்கள்தான் பகர் ஜமான் (19), இமாம் உல் ஹக் (32) இருவரும் 47 ரன்களைச் சேர்க்க முடிந்தது என்றால் அதற்கு ஆப்கானின் பீல்டிங்கும் ஒரு காரணம் 3 கேட்ச்கள் ட்ராப் மற்றும் ஒரு ஸ்டம்பிங் கோட்டை விடப்பட்டது. கடைசியில் ஹமித் ஹசன் பந்தை இமாம் உல்ஹக் புல் ஆட முயன்று பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார்.

 

அஸ்வின் போன்றோரெல்லாம் பாவம் விக்கெட் எடுக்க ஆஃப் ஸ்பின்னை நம்பாமல் மன்கட் அவுட்டை நம்பி உலகக்கோப்பை அணிக்கு செல்ல முடியாமல் வெளியில் இருக்கும் நேரத்தில் ஆப்கான் ஆஃப் ஸ்பின்னர் மொகமது நபி மிகச்சிறப்பான மரபான ஆஃப் ஸ்பின்னில் ஒரே ஓவரில் பகர் ஜமான், ஹாரிஸ் சோஹைலை வீட்டுக்கு அனுப்பினார்.

 

அதன் பிறக் பாபர் ஆஸம்தான் ஒரு முனையில் இவர் அனாயசமாக ஆடினார். மொகமது ஹபீஸை ரஷீத் கான் 12 ரன்களில் வெளியேற்ற பாகிஸ்தான் 100/4 என்று 20 ஓவர்களில் திணறிக்கொண்டிருந்தது. பாபர் ஆஸம், ஷோயப் மாலிக் கூட்டணி சேர்ந்து 17 ஓவர்களில் 103 ரன்கள் கூட்டணி அமைத்தனர் மாலிக் 59 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்திருந்தார், இவரெல்லாம் தோனி ஸ்கூல் ஆஃப் தாட் பேட்ஸ்மென் கடைசியில்தான் அடிப்பார், ஆனால் இவரையும் மொகமது நபி வீட்டுக்கு அனுப்ப. கடைசி 13 ஓவர்களில் வெறும் 59 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது, பாபர் ஆஸம் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து தவ்லத் ஸத்ரானிடம் அவுட் ஆனார். பாகிஸ்தான் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

 ‘வாட்ச் அவுட்’ஹஸ்ரதுல்லா சஸாய்:

 

263 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆப்கான் அணி அதிரடியில் தொடங்கியது மொகமது ஷஸாத், மொகமது ஆமீரை 2 , ஷாஹின் அப்ரிடியை ஒரு பவுண்டரி என்று தொடங்கி 23 ரன்களை விளாசி காயம் காரணமாக வெளியேறினார், ஆனால் ஹஸ்ரதுல்லா சஸாய், இவர் ஒருமுறை தான் 30 ஓவர்கள் வரை நின்றால் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் விளாசுவேன் என்று கூறியதற்கேற்ப ஷாஹீன் அஃப்ரீடியை பின்னி எடுத்து ஒரே ஒவரில் 5 பவுண்டரிகளை விளாசினார், அஃப்ரீடி இவரை ஸ்லெட்ஜ் செய்த போது, ‘போ.. போ.. போய் பந்து வீசு’ என்பது போல் அனாயசமாக சிக்னல் செய்தார்.

 

 

அனுபவசாலி அபாய பவுலர் வஹாப் ரியாஸையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவரது ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு சரியான பதிலடி கொடுத்து 2 சிக்சர்களை விளாசியதோடு ஒரு பளார் நேர் பவுண்டரியையும் அடிக்க 18 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. கொலை மூடில் இருந்தார் அவர். 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப் கான் பந்தை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் ஆன் திசையில் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 44 ரன்களை பவுண்டரி, சிக்சர்கள் மூலமே அடித்து பாகிஸ்தானை பதற வைத்தார் சசாய்.

 

இவர் அவுட் ஆன பிறகு ரஹ்மத் ஷா 32 ரன்களில் வஹாபிடம் வீழ்ந்தார். அஷ்கர் ஆப்கான், ஷின்வாரி ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற 32.5 ஓவர்களில் 178/4 என்று இருந்தாலும் வெற்றி பெறுவதில் சிக்கல் இல்லை என்ற நிலையே நீடித்தது.

 

ஹஸ்மதுல்லா ஷாஹிதியின் அபாரமான தடுப்பாட்டத்தை பாக். ஸ்பின்னரும், வேகப்பந்து வீச்சாளர்களும் ஊடுருவ முடியவில்லை. 102 பந்துகளில் கவலைப்படாமல் அவர் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக்கி 74 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

கடைசியில் வஹாப் ரியாஸ் யார்க்கர்களை வீச 3 விக்கெட்டுகள் மளமளவென விழ கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டாலும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி, ரஷீத் கான் வெற்றியை உறுதி செய்தனர். பாகிஸ்தானில் இடது கை ஸ்பின்னர் இமாத் வாசிம் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படி வீசி 10-0-29-2 என்று முடிந்தார்.

 

ஆப்கான் வெற்றி பெற ஆடியது, பாகிஸ்தான் ஏனோதானோவென்று ஆடி மனரீதியான பலவீனத்தை அளிக்கும் அதிர்ச்சித்தோல்வி கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x