Published : 25 May 2019 08:42 AM
Last Updated : 25 May 2019 08:42 AM

திணறடிக்க காத்திருக்கும் யார்க்கர் நாயகர்கள்

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதிலும் இறுதி கட்ட ஓவர்களில் யார்க்கர் பந்து வீச்சு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் நடைபெறும் இங்கிலாந்தில் தட்டையான ஆடுகளங்கள், குறைந்த தூரம் கொண்ட பவுண்டரி எல்லைகள் ஆகியவையால் பந்து வீச்சாளர்கள் ஏதும் ஒரு குறிப்பிட்ட வகையிலான திறனை கொண்டிருந்தால் மட்டுமே பேட்ஸ்மேன்களை பெரிய அளவிலான இன்னிங்ஸ்களை விளையாட விடாமல் தடுக்க முடியும்.

இந்த வகையில் ‘வேகப் பந்து வீச்சாளர்களின் பெரிய சொத்தாக யார்க்கர்’ இருக்கக்கூடும். நவீன கால கிரிக்கெட்டில் வேகப் பந்து வீச்சாளர்கள் பாரம்பரிய யார்க்கர், இன்ஸ்விங் யார்க்கர், நக்குல் யார்க்கர், மெதுவான யார்க்கர் என 4 விதமான யார்க்கர்களை கையாள்கின்றனர். இது பற்றிய ஓர் அலசல்....

பாரம்பரிய யார்க்கர்

பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம் ஆகியோர் பாரம்பரிய யார்க்கர் கலையை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்களாக திகழ்ந்தனர். பாரம்பரிய யார்க்கர் என்பது பேட்ஸ்மேனின் பாதத்தை குறிவைத்து வீசுவதாகும். இதன் மூலம் பேட்ஸ்மேனை நிலைகுலையச் செய்து ஸ்டெம்புகளை தகர்க்க முடியும். இந்த வகை யார்க்கர்களை தற்போது தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர்.

காகிசோ ரபாடா: இந்த தலைமுறையில் அதிவேக பந்து வீச்சாளராக அறியப்படும் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என கருதப்படுகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் போது ரபாடா வீசிய யார்க்கரில் ஆந்த்ரே ரஸ்ஸல் நிலைகுலைய நடு ஸ்டெம்பு தெறித்தது இன்னும் ரசிகர்களின் நினைவில் இருந்து மறைந்திருக்காது. அனைத்து பந்து வீச்சாளர்களையும் மிரளச் செய்த ஆந்த்ரே ரஸ்ஸலால், ரபாடாவின் யார்க்கருக்கு பதில் கூற முடியாமல் போனது. அதுபோன்ற மிரட்டல் யார்க்கர்களை இந்த உலகக் கோப்பை தொடரில் அள்ளி தெறிக்க காத்திருக்கிறார் ரபாடா.

 ஜோப்ரா ஆர்ச்சர்: 15 பேர் கொண்ட இறுதிகட்ட அணியில் சாமர்த்தியாக ஜோப்ரா ஆர்ச்சரை இடம் பெறச் செய்துள்ளனர் இங்கிலாந்து தேர்வுக்குழுவினர். 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட ஜோப்ராஆர்ச்சர் டி 20 கிரிக்கெட்டில் இதுவரை 61 யார்க்கர்களை வீசியுள்ளார். இதில் 38 ரன்களை மட்டுமே வழங்கி 9 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். முழுநிறைவான யார்க்கர்களை வீசும் ஜோப்ரா ஆர்ச்சர்,

வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்யக்கூடும் என இங்கிலாந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இன்ஸ்விங் யார்க்கர்

பந்தை காற்றில் பறக்கவிட்டபடி பேட்ஸ்மேனின் கால்பகுதியின் இடையே இருக்கும் இடைவெளியை நோக்கிபாய்ந்தபடி ஸ்டெம்புகளை பதம் பார்க்கும் வகையில் வீசுதே இன்ஸ்விங் யார்க்கர். இந்த வகை யார்க்கர்களை வீசுவதில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், மேற்கிந்தியத் தீவுகளின் கேமார் ரோச் ஆகியோர் கில்லாடிகள்.

மிட்செல் ஸ்டார்க்:  29 வயதான மிட்செல் ஸ்டார்க் கடந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். இன்ஸ்விங் யார்க்கர்களை திறம்பட கையாளும் மிட்செல் ஸ்டார்க், அந்தத் தொடரில் 22 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். காயம் காரணமாக கடந்த ஆண்டில் அணிக்குள் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருந்த மிட்செல் ஸ்டார்க், 7 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். சமீபகாலமாக பார்மின்றி தவித்து வரும் அவர், உலகக் கோப்பை தொடரில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

கேமார் ரோச்:  30 வயதான கேமார் ரோச் சமீபத்தில் வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அபாரமாக பந்து வீசக்கூடியவர் கேமார் ரோச். இரு வழியிலும், துல்லியமாக இன்ஸ்விங் யார்க்கர்களை வீசக்கூடிய அவர், உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் பந்து வீச்சு துறைக்கு பேருதவியாக இருக்கக்கூடும்.

நக்குல் யார்க்கர்

 ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றுக்கு இடையே பந்தை வைத்து வீசுவதே நக்குல் யார்க்கர் என அழைக்கப்படுகிறது. வேகம் குறைத்து வீசப்படும் இந்த வகை யார்கரில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார், இங்கிலாந்தின் டாம் கரன் ஆகியோர் அசத்தக்கூடியவர்கள்.

 புவனேஷ்வர் குமார்: இந்திய அணியின் ‘ஸ்விங் கிங்’ என அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார் இறுதிகட்ட ஓவர்களில் நக்குல் யார்கரால் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட் கைப்பற்றும் திறனையும் கொண்டவர். சமீபகாலமாக பார்மில் சற்று தேக்கம் அடைந்துள்ள புவனேஷ்வர் குமார், இங்கிலாந்து காலநிலைகளில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 டாம் கரன்:  உலகக் கோப்பை தொடருக்கென்றே பிரத்யேமாக நக்குல் வகை பந்துகளில் அதீத பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் இங்கிலாந்தின் டாம் கரன். இறுதி கட்ட ஓவர்களில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வேகம் குறைந்த பந்துகளை வீசுவதிலும் கைதேர்ந்தவர் டாம் கரன். சொந்த மைதான சாதகங்களால் டாம் கரனிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் வெளியாகலாம்.

வேகம் குறைந்த யார்க்கர்

வழக்கமான பாணியில் இருந்து வேகம் குறைத்து வீசப்படும் இந்த யார்கரானது, பேட்ஸ்மேன் தனது மட்டையை சுழற்றிய பின்னரே அவரை வந்து சேரும். குறைந்த வேகத்துடன் காற்றில் மிதந்து வரும் இந்த யார்கரை பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்தினால் ஏறக்குறைய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வது என்பது சாத்தியமற்றது. இந்த பாணியை களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, இலங்கையின் லஷித் மலிங்கா அபாரன திறன் கொண்டவர்கள்.

ஜஸ்பிரித் பும்ரா: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்கு வகித்திருந்தார். இறுதி கட்ட ஓவர்களில் தனது அசாத்தியமான செயல் திறனால் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கக்கூடியவர்.

ஐசிசி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பும்ரா, இந்த உலகக் கோப்பையில் முன்னணி பேட்ஸ்மேன்கள் பலருக்கு கடும் சவால்கள் கொடுக்கக்கூடும்.

லஷித் மலிங்கா: இறுதி கட்ட பந்து வீச்சில் சிறந்த வீரர் என பெயரெடுத்த இலங்கை அணியின் மூத்த வேகப் பந்து வீச்சாளரான லஷித் மலிங்கா, ஐபிஎல் தொடரில் முக்கியமான கட்டத்தில் அபார திறனை வெளிப்படுத்தினார். மலிங்காவின் பலமே, கடைசி சில ஓவர்களில், அதிலும் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ளும் சமயங்களில், பாதத்தை குறிவைத்து வீசுவதுதான். இழந்த பார்மை மீட்டுள்ள மலிங்கா, உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு பலம் சேர்க்கக்கூடிய வீரராக இருக்கக்கூடும்.

சுழலிலும் யார்க்கர்

நவீன கால கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களும் யார்க்கர் வகைகளை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸம்பா தனது யார்கரால் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியை ஆட்டமிழக்கச் செய்து மிரள வைத்தார். இதே தொடரில் விராட் கோலிக்கும் தொல்லை கொடுத்திருந்தார் ஆடம் ஸம்பா.

இதேபோல் ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மானும் யார்க்கர் பந்துகளை கையாள்வதில் சிறந்தவர். சரியான திசையில் அவர், பந்துகளை வீசும்போது அது பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வதற்கு சாத்தியமற்றதாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x