Published : 24 May 2019 04:27 PM
Last Updated : 24 May 2019 04:27 PM

‘எனக்குத் தெரியாது’;  ‘உள்நாட்டுச் சாதகம் பெரிதாக இல்லை’- உ.கோப்பையை ஜெயிக்கப்போவது யார்? - கேப்டன்கள் கூறுவது என்ன?

உலகக்கோப்பை 2019 திருவிழா நெருங்கி வருகிறது. மிகவும் கடினமான வடிவத்தில் 10 அணிகளும் ஒருவரை எதிர்த்து ஒருவர் ஒருமுறை மோத வேண்டும். 1992 உ.கோப்பைக்குப் பிறகு இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது.

 

இந்நிலையில் உலகக்கோப்பைய வெல்லப்போவது யார் என்று 10 அணி கேட்பன்களிடம் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ கேட்டபோது அவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

 

ஏரோன் பின்ச் (ஆஸ்திரேலியா):

 

இது நல்ல கேள்வி. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள்  கடந்த 2 ஆண்டுகளாக நல்ல பார்மில் இருந்து வருகிறது.  இந்த 2 அணிகளும்தான் தனித்துவமான அணிகள்.  இங்கிலாந்து அணிக்குத்தான் கோப்பையை வெல்ல சாதகமாக உள்ளது.

 

எங்கள் அணியிலும் சில வீரர்கள் உலகக்கோப்பை அனுபவம் பெற்றுள்ளனர்.  உலககக்கோப்பையை வென்ற அணியில் ஆடிய 6 வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். இவர்களால் அணி நல்ல நிலையில் உள்ளது. இது வித்தியாசமான தொடர், ஆடத்தொடங்கும்போது நெருக்கடி ஏற்படும். எனவே இது ஒரு கிரேட் உலகக்கோப்பைத் தொடராக இருக்கும்.

 

இயான் மோர்கன்:

 

எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு அணியுமே மற்ற அணியை விட சிறப்பாகத் தெரிகிறது. 10 அணி உலகக்கோப்பையில் 10 அணிகளுமே சிறந்த அணிகள் எனவே இது ஒரு அசாதாரணமான தொடராக அமையும். தரமான கிரிக்கெட் நடக்கும் ஆகவே ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.

 

உள்நாட்டில் ஆடுவது காரணமாக அமையும்.  ஒரு காரணத்துக்காக உள்நாட்டுச் சாதகம் என்பார்கள்.  எங்கள் படுக்கையிலேயே படுத்து எழுந்து எங்கள் குடும்பத்தினர் அருகில் இருப்போம். எண்ணற்ற ஆண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டது போல் இதற்கும் இங்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இங்கிலாந்தில் வந்து கிரிக்கெட் ஆடுவது உண்மையில் ஒரு உற்சாகமான அனுபவம், இங்கிருக்கும் எந்த வீரரை வேண்டுமானாலும் கேளுங்கள், இங்கு வந்து விளையாடுவது சிறப்பு என்றே கூறுவார்கள்.

 

விராட் கோலி:

 

ஏற்கெனவே அணி மீது எங்கு ஆடினாலும் அழுத்தம் அதிகம். உலகில் எங்கு ஆடினாலும் எங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிகின்றனர். நான் ஏரோன் பிஞ்ச் கருத்தில் உடன்படுகிறேன். இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி வலுவான அணியே. அதே வேளையில் நான் மோர்கனுடனும் உடன்படுகிறேன். அனைத்து அணிகளும் சமபலத்துடன் வலுவாகத் திகழ்கின்றனர். ஒவ்வொருவரும் பரஸ்பரம் எதிர்த்து ஆடவேண்டும் என்பது இந்தத் தொடரை கடும் சவாலாக்கியுள்ளது. ஆனால் இதுதான் இந்தத் தொடரின் சிறப்பு. உலகின் மிகச் சவாலான ஒரு தொடரை ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள்.

 

சர்பராஸ் அகமெட்:

 

மோர்கன், கோலி சொல்வது போல் அனைத்து அணிகளுமே வலுவாக உள்ளன. அனைவருக்கும் வாழ்த்துக்கள், பிரமாதமான கிரிக்கெட்டை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள். இங்கிலாந்தில் 1992 டெஸ்ட் தொடர் 1999 உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் பாகிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். இன்ஷா அல்லா, நாங்கள் நன்றாக ஆடுவோம் என்று நம்புகிறோம்.

 

திமுத் கருண ரத்னே:

 

நாங்கள் நன்றாக ஆடிவருகிறோம், இங்கிலாந்தில் நல்ல அனுபவம் பெற்றுள்ளோம். ஆகவே சிறந்த முறையில் ஆட முயற்சி எடுப்போம்.

 

கேன் வில்லியம்சன்:

 

கடந்த உலகக்கோப்பையில் ஆடிய வீரர்கள் சிலர் இருக்கின்றனர். இது கிரேட்.  ஆனால் உ.கோப்பைக்கு இடையில் 4 ஆண்டுகள் எனவே சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். யார் வெல்வார்கள்,  தரவரிசை, தோற்கும் அணி என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தநாளில் என்ன நடக்குமோ அதுதான் தீர்மானிக்கும். இதனால்தான் இந்தத் தொடர் உற்சாகமானது என்கிறேன்.

 

ஃபாப் டுபிளெசிஸ்:

 

உலகக்கோப்பையை சுற்றி சமீபமாக நடந்த போட்டிகளில் வெளிநாடாக இருந்தாலும் உள்நாடாக இருந்தாலும் நெருக்கமான போட்டியாகவே அமைந்ததைப் பார்த்து வருகிறோம். வெறுமனே உள்நாட்டு அணிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கவில்லை. மற்ற கேப்டன்கள் கூறுவது போல் அனைத்து அணிகளுமே வலுவாக உள்ளது, இது ஒரு கிரேட் உலகக்கோப்பைத் தொடராக இருக்கும்.

 

ஜேசன் ஹோல்டர்: தகுதிச் சுற்று போட்டிகளில் கடினமாக உழைத்து  ஆடி இந்தத் தொடருக்கு வந்திருக்கிறோம். அதாவது இதுதான் டாப் 10 மோதும் உலகக்கோப்பை, அனைவரையும் எதிர்த்து ஆடுவது எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எந்த அணி வெல்கிறதோ அந்த அணி நிச்சயம் அதற்கான தகுதியான அணிதான்.

 

குல்பதீன் நயீப் (ஆப்கான்):

 

ஆப்கானில் அமைதி நிலவுகிறது. கிரிக்கெட் அதில் மிகப்பெரிய அங்கமாகும். அதுதான் எங்களிடமிருந்து நல்ல ஆட்டங்களை வெளிக்கொணர்கிறது. இது டாப் 10 அணிகளுக்கான தொடர், ஆப்கான் அணியை பிரதிநிதித்துவம் செய்வதற்காக பெருமையடைகிறோம்

 

மஷ்ரபே மோர்டசா:

 

எங்கள் அணியும் நல்ல கலவையுடன் இருக்கிறது. சில இளம் வீரர்கள் வந்துள்ளனர். இது எங்களுக்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x