Published : 26 Apr 2019 03:00 PM
Last Updated : 26 Apr 2019 03:00 PM

வாயை மூடுங்கள்: ஆர்சிபி அணியின் ட்வீட்டால் கொந்தளித்த அசோக் டின்டா: புள்ளிவிவரங்களை வெளியிட்டு பதிலடி

மோசமான பந்துவீச்சுக்கு அசோக் டின்டாவை அடிக்கடி உதாரணம் காட்டுவதால் கொதித்துப்போன வேகப்பந்துவீச்சாளர் டின்டா நேற்று ட்விட்டரிலும், இன்ஸ்ட்ராகிராமிலும் தன்னுடைய பந்துவீச்சு புள்ளிவிவரங்களை வெளியிட்டு வெறுப்பாளர்களை வாயை மூடி இருக்கக் கண்டித்துள்ளார்

குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் ட்வீட்டுக்கு பின் மிகவும் கடுப்பாகிப்போன டின்டா நேற்று இரவு இந்த டிவிட்டை செய்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அசோக் டின்டா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் டின்டா விளையாடவில்லை.  கடந்த 2017-ம் ஆண்டுதான் கடைசியாக விளையாடினார். ஆனாலும், அவரின் பெயர் இந்த ஐபிஎல் போட்டியில் அதிகம் பேசப்படுகிறது.

பொதுவாக அசோக் டிண்டா பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக ரன் அடிப்பார்கள், ரன்களையும் டின்டா வாரி வழங்குவார். இதனால், இந்த ஐபிஎல் போட்டியில் எந்தபந்துவீச்சாளர் மோசமாகப் பந்துவீசி ரன்களை வாரி வழங்கினால் அவரை டின்டா அகாடெமியில் சேர்ந்துவிட்டாயா என்று கிண்டலாக கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.

எந்தவிதமான போட்டியிலும் பங்கேற்காமல் டிண்டா அமைதியாக இருந்தாலும் அவரின் முந்தைய ஐபிஎல் போட்டியில் மோசமான பந்துவீச்சை சுட்டிக்காட்டி பேசி அவரிடம் வம்பு செய்தவுடன் டிண்டா கொந்தளித்துவிட்டார்.

குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி அணி மோதியது. கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சிஎஸ்கே கேப்டன் தோனி, 24 ரன்கள் சேர்த்தார், 2 ரன்கள் எடுக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது.

அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த கிங்ஸ்லெவன்  பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

சிஎஸ்கே அணியிடம் அதிகமாக ரன்களைக் விட்டுக்கொடுத்த உமேஷ் யாதவைக் குறிப்பிட்டும், அவரின் படத்தை வெளியிட்டும், " டின்டா அகாடெமியா, என்ன அது" என்று ஆர்சிபி அணி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருந்தது. சிறிது நேரத்தில் அந்த ட்விட்டையும் ஆர்சிபி அணி நீக்கியது. ஆனால், பலரும் அந்த ட்விட்டுக்கு ரீட்விட் செய்து டிண்டாவையும், உமேஷ் யாதவையும் கிண்டல் செய்தனர்.

அதன்பின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக உமேஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதை பாராட்டி, ஆர்சிபி அணி அடுத்து ட்விட் செய்திருந்தது. அதில், " பலரும் உங்களை கடந்த முறை கிண்டல் செய்து ட்விட் செய்திருந்தது மோசமான  ரசனை. சவால் ஏற்கப்பட்டு, 4 ஓவர்கள் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் உமேஷ் கடைசி ஓவரில்மட்டும் 2 விக்கெட்" என்று பாராட்டி இருந்தது.

ஆனால், ஐபிஎல் போட்டியில் பங்கேற்காமல் அமைதியாக இருக்கும் தன்னை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்த ஆர்சிபி அணிக்குதகுந்த பாடம் கற்பிக்க டின்டா முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு தனது இன்ட்ராகிராம் பக்கத்தில் தன்னுடைய பந்துவீச்சு சாதனைகளின் விவரங்களை வெளியிட்டு கடுமையாக கருத்துக்களை பதிவிட்டார். அதில் " வெறுப்பாளர்களே, இந்த சரியான புள்ளிவிவரங்களைப் பெற்றுப் பேசுங்கள் இது உங்களுக்கு உதவும். என்னை வெறுமனே பார்க்காமல் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்களின் சுயவெறுப்புகளை மூடுங்கள், என்னைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து வாயை மூடுங்கள் " எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த அசோக் டிண்டா ஏராளமான அணிகளுக்காக விளையாடியுள்ளார். 115 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் டிண்டா கைப்பற்றியுள்ளார். 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x