Published : 22 Apr 2019 08:36 AM
Last Updated : 22 Apr 2019 08:36 AM

தோனியின் போராட்டம் வீணானது: ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தீபக் ஷகார் ஆஃப் ஸ்டெம்புக்கு நன்கு வெளியே வீசிய பந்தை விராட் கோலி (9) டிரைவ் செய்ய முயன்ற போது தோனியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 14 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை டு பிளெஸ்ஸிஸ் தவறவிட்டார்.

எனினும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினார் டி வில்லியர்ஸ். ஜடேஜா வீசிய 7-வது ஓவரின் 5-வது பந்தை டி வில்லியர்ஸ் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்த போது எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற டு பிளெஸ்ஸிஸ் அற்புதமாக கேட்ச் செய்தார். டி வில்லியர்ஸ் 19 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய அக் ஷ்தீப் நாத் 24 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர், ஜடேஜா, இம்ரன் தகிர் ஆகியோரது பந்துகளில் சிக்ஸர் விளாசிய பார்த்தீவ் படேல் 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் டுவைன் பிராவோ பந்தில் எக்ஸ்டிரா கவர் திசையில் நின்ற ஷேன் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந் தார். பார்த்தீவ் படேல் சேர்த்த ரன்களில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

இம்ரன் தகிர் வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்தை மார்கஸ் ஸ்டாயினிஸ் சிக்ஸருக்கு தூக்க முயன்றார். அப்போது அற்புதமாக கேட்ச் செய்த டு பிளெஸ்ஸிஸ் நிலை தடுமாறி எல்லைக் கோட்டுக்கு வெளியே விழுந்தார். இந்த சமயத்தில் அவர், பந்தை மைதானத்துக்குள் வீச அருகில் நின்ற துருவ் ஷோரே கேட்ச் செய்தார்.

இதனால் மார்கஸ் ஸ்டாயினிஸ் (13) வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய பவன் நெகி (5), தீபக் ஷகார் பந்தில் நடையை கட்டினார். கடைசி கட்டத்தில் மொயின் அலி 16 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் டுவைன் பிராவோ பந்தில் வெளியேறினார். சென்னை அணி தரப்பில் தீபக் ஷகார், ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 162 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. டேல் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தில் ஷேன் வாட்சன் (5), சிலிப் திசையில் நின்ற ஸ்டாயினிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா (0), ஸ்டெம்புகள் சிதற வெளியேறினார்.

6 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் நிதானமாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 15 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தை தூக்கி அடித்த போது மிட் ஆன் திசையில் நின்ற டி வில்லியர்ஸிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய கேதார் ஜாதவ் 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் டி வில்லியர்ஸிடம் மிட் ஆஃப் திசையில் எளிதாக கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

28 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் அம்பதி ராயுடுவுடன் இணைந்த தோனி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். 10 ஓவர்களில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. ஸ்டாயினிஸ் வீசிய 11-வது ஓவரில் தோனி, சிக்ஸர் ஒன்றை விளாசினார்.

தொடர்ந்து உமேஷ் யாதவ் வீசிய 13-வது ஓவரில் அம்பதி ராயுடு தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார். அதிரடியாக விளையாட முயன்ற அம்பதி ராயுடு 29 பந்துகளில், 29 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திர சாஹல் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 13.1 ஓவரில் 83 ஆக இருந்தது. 5-வது விக்கெட்டுக்கு தோனியுடன் இணைந்து அம்பதி ராயுடு 55 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார்.

கடைசி 6 ஓவர்களில் சென்னை அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் தேவையாக இருந்தது. ஸ்டாயினிஸ் வீசிய 15-வது ஓவரில் 6 ரன்களையே விட்டுக்கொடுத்தார். யுவேந்திர சாஹல் வீசிய அடுத்த ஓவரில் தோனி சிக்ஸர் ஒன்றை விளாச 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. நவ்தீவ் ஷைனி வீசிய அடுத்த ஓவரில் ஜடேஜா 12 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து டுவைன் பிராவோ களமிறங்க இதே ஓவரில் தோனி பவுண்டரி ஒன்றை விரட்டினார்.

18 பந்துகளில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 18-வது ஓவரை டேல் ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரில் தோனி சிக்ஸர் ஒன்றை விளாச 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. நவ்தீப் ஷைனி வீசிய அடுத்த ஓவரின் முதல் இரு பந்துகளிலும் ரன் சேர்க்காத தோனி, நோ-பாலாக வீசப்பட்ட அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தார். இதே ஓவரின் கடைசி பந்தில் பிராவோ (5), பார்த்தீவ் படேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 24 ரன்களை விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனியின் மட்டையில் பந்து சிக்காத நிலையில் விக்கெட் பார்த்தீவ் படேலிடம் தஞ்சம் அடைந்தது. அதற்குள் தோனி வேகமாக ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்து ஓடி வந்த ஷர்துல் தாக்குர் அந்த அளவுக்கு வேகம் காட்டத் தவறியதால் ரன் அவுட் ஆனார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தோனி 48 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் ஸ்டெயின், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் சென்னை அணி 3-வது தோல்வியை பெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x