Published : 21 Apr 2019 05:32 PM
Last Updated : 21 Apr 2019 05:32 PM

அந்த தருணத்தில் கண்ணீர் விட்டு அழுதேன்: கேகேஆர் அணி குறித்து ஆன்ட்ரூ ரஸல் நெகிழ்ச்சி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் என்னை மீண்டும் அணியில் சேர்த்த அந்த தருணத்தில் கண்ணீர் விட்டு அழுதேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன்ட்ரூ ரஸல் உருக்கமாகத் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் "எக்ஸ் ஃபேக்டர்" வீரர் என்று மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர் ஆன்ட்ரூ ரஸல் அழைக்கப்படுகிறார். இந்த ஐபிஎல் சீசனில் ரஸலுக்கென தனியாக ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

 ரஸல் களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் எல்லாம் குறைந்த பந்துகளில் அதிகமான ரன்களை அணிக்காக சேர்த்துக் கொடுத்துள்ளார். குறிப்பாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 18 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து எளிதாக வெற்றி பெற வைத்தார்.

இதுபோல் பல போட்டிகளில் அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், வெற்றி பெறுவதற்கும் ரஸல் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகலி்ல ரஸல்  377 ரன்கள் சேர்த்து சராசரியாக 74 ரன்கள் வைத்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகியபின் இந்த முறை ரஸல் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கே.கே.ஆர் அணிக்காக தான் நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும், அவர்களுக்காகவே சிறப்பான பங்களிப்பை அளிப்பதாக சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்தபேட்டியில் ரஸல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த 10-வது ஐபிஎல் போட்டியில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் நான் சிக்கினேன் இதில் ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட எனக்கு தடைவிதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு என்னை ஐபிஎல் போட்டியில் சேர்ப்பார்களா, யார் ஏலத்தில் எடுப்பார்கள் என்ற வருத்தம் ஏற்பட்டது. என்னுடைய குடும்ப சூழல், பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறேன் என்று கண்கலங்கினேன்.

அப்போது, திடீரென எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசினேன், மறுமுனையில் கொல்கத்தா அணியின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கி மைசூர் பேசினார். என்ன ரஸல் எப்படி இருக்கிறீர்கள் என்றார். நலமாக இருக்கிறேன் என்றேன் என்று கூறினேன்.

ஐபிஎல் ஏலத்தில் அணியில் இரு வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளோம். அதில் தக்கவைக்கப்பட்டுள்ள இரு வீரர்களில் நீங்களும் ஒருவர். அணியில் கொல்கத்தா அணியில் தொடர்கிறீர்கள் கவலையை விடுங்கள் என்று கூறினார்.

இந்த வார்த்தையைக் கேட்டதும் நான் உடைந்து கண்ணீர்விட்டு அழுதேன். அணி நிர்வாகிகளுக்கு என்னுடைய குடும்பத்தின் சூழல் தெரியும், என் நிலைமை புரியும் என்பதால், எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள்.

அதனால்தான் என்னால் முடிந்த சிறப்பான  பங்களிப்பை தொடர்ந்து கேகேஆர் அணிக்காக அளித்து வருகிறேன்.

இவ்வாறு ஆன்ட்ரூ ரஸல் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x