Last Updated : 21 Apr, 2019 10:11 AM

 

Published : 21 Apr 2019 10:11 AM
Last Updated : 21 Apr 2019 10:11 AM

‘தூண்’ ஸ்ரேயாஸ், தவண் ‘புதிய சாதனை’: சொந்தமண்ணில் டெல்லிக்கு 2-வது வெற்றி: அஸ்வின் அணிக்கு நெருக்கடி

ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவணின் பொறுப்பான பேட்டிங்கால் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தின் 37வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 போட்டிகளில் 6 வெற்றிகள்,4 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிறது. டெல்லி அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 2-வது வெற்றி இதுவாகும்.

நெருக்கடி

அதேசமயம், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணி 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. அஸ்வின் அணிக்கு அடுத்து வரும் 4 போடட்டிகளும் மிக முக்கியமானவை, வலிமையான அணிகளான கொல்கத்தா, சிஎஸ்கே, ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.

 இந்த 4 அணிகளில் சிஎஸ்கே மட்டுமே ப்ளை-ஆப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்யும் நிலையில் இறுக்கிறது. மற்ற 3 அணிகளும் நெருக்கடியுடன் இருப்பதால், இந்த 3 அணிகளையும் எளிதாக பஞ்சாப் அணியால் வெல்லமுடியாது. ஆதலால், அடுத்து வரும் போட்டிகள் அஸ்வினுக்கு கத்திமீது நடப்பது போன்றதாகும்.

முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில், 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வலுவான கூட்டணி

டெல்லி அணியைப் பொறுத்தவரை ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அடித்து ஆடுவதைக் கைவிட்டு ஸ்ட்ரைக்கை இருவரும் பகிர்ந்து கொண்டு ரன்கள விரைவாகச் சேர்த்தது பஞ்சாப் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஷிகர் தவண் 41 பந்துகளில் 56 ரன்களும், ஸ்ேரயாஸ்  அய்யர் 49 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். இருவரும் சேர்ந்து 62 பந்துகளுக்கு 92 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

தவண் சாதனை

இதில் ஷிகர் தவண் ஐபிஎல் வரலாற்றில் அதிகமான பவுண்டரிகளை அடித்த வீரர் எனும் புதிய சாதனையை நேற்று படைத்தார். இதுவரை ஷிகர் தவண் 500 பவுண்டரிகளை ஐபிஎல் போட்டிகளில் அடித்துள்ளார். இந்த சாதனையை இதுவரை எந்த வீரரும் செய்யவில்லை.

களத்தில் தவண், அய்யர் கூட்டணி இருக்கும் வரை டெல்லி அணியின் ரன் ரேட் வேகமாக நகர்ந்தது. இதில் தவண் ஆட்டமிழந்ததும் சிறிது தேக்கம் ஏற்பட்டு ஆட்டம் சற்றுநெருக்கடியை நோக்கி திரும்பியது, ஆனால், கடைசிநேரத்தில் பவுண்டரி அடித்து ஸ்ரேயாஸ் வெற்றியை உறுதி செய்தார்.

பிரித்வி ஷா கடந்த 10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே 99 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து ஆட்டங்களிலுமே அவசரப்பட்டு விக்கெட்டை பறிகொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். அதேபோலவே ரிஷப் பந்தும் ஒரு போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் சரியாக விளையாவில்லை. ஒருவேளை உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை என்ற விரக்தியில் ஆடுகிறார் என்பதும் தெரியவில்லை.

லாமிசானே அசத்தல்

பந்துவீச்சில் நேபாள வீரர் சந்தீப் லாமிசானே, அக்்ஸர் படேல் நேற்று பஞ்சாப் அணிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் வீசினர். ரபாடாவின் துல்லியம் நேற்றும் பளிச்சிட்டது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாகக் கையாண்டு பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தினர்.

கெயில் மட்டுமே சிறப்பு

பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கெயில் புயல் இருக்கும் வரை ரன்ரேட் உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால், கெயில் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தை கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல பொறப்பான பேட்ஸ்மேன்கள் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாகும். ஒற்றை வீரர்களை நம்பி இருப்பது பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய சிக்கல். கெயிலின் 69, மன்தீப் சிங் 30 ரன்களைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மன்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் வகையில் ரன்களைச் சேர்க்கவில்லை.

பந்துவீச்சில் முகமது ஷமி கடைசிவரை கட்டுக்கோப்பாக பந்துவீசினார், தமிழக வீரர் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசுகிறார், அவரை அஸ்வின் தொடர்ந்து பயன்படுத்தாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 3 ஓவர்கள் வீசிய முருகன் அஸ்வின் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேசமயம் 2-வதாக பந்துவீசியபோது பனிப்பொழிவு பந்துவீச்சாளர்களுக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. சுழற்பந்துவீச்சாளர்களின் கையில் பந்து நிற்கவே இல்லை, இதனால், பல நோ-பால்கள் போடப்பட்டன.

164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்விஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். தவண் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடத்தொடங்கினார். பிரித்வி ஷா ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்த நிலையில் விஜான் வீசிய 3-வது ஓவரில் ரன் அவுட் ஆகி 13ரன்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் அய்யர்,தவணுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 10 ஓவர்களில் டெல்லி அணி ஒரு விக்ெகட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவண் 36 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது 5-வது அரைசதத்தை நிறைவு செய்தார். விஜான் வீசிய 14-வது ஓவரில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து தவண் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒருசிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ரிஷப் பந்த் விஜான் வீசிய 16-வது ஓவரில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்னில் வெளியேறினார். அடுத்துவந்த இங்ராம், அய்யருடன் சேர்ந்தார். விஜான் வீசிய 18-வது ஓவரில் இங்ராம் 3 பவுண்டரிகள் அடித்து ரன் நெருக்கடியை குறைத்தார்.

ஆனால், ஷமி வீசிய 19-வது ஓவரில் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அந்த ஓவரில் க்ளீன் போல்டாகி இங்ராம் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஸர் படேல், அதேஓவரில் ரன் அவுட் ஆகிவெளியேறினார். ஒரே ஓவரில் 2 விக்கெட் இழந்து நெருக்கடிக்கானது டெல்லி. ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார்

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. சாம் கரண் பந்துவீசினார் 4 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 4-வது பந்தில் அய்யர் பவுண்டரி அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களிலும், ரூதர்போர்ட் 2 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் விஜான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கெயில் அதிரடி

முன்னதாக டாஸ்வென்ற டெல்லி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கிங்ஸ்லெவன் அணிக்கு கெயில், ராகுல் தொடக்கம் அளித்தனர். இசாந்த் சர்மா வீசிய முதல் ஓவரில் ராகுல் திணறினார். லாமிசானே வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்த ராகுல், 4-வதுபந்தில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு  12ரன்னில் வெளியேறினார்.

அடுத்து மயங்க் அகர்வால் களமிறங்கி கெயிலுடன் சேர்ந்தார். கெயில் அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பினார். லாமிசானே வீசிய 4-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார் கெயில். ரபாடா வீசிய 5-வது ஓவரில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து மயங்க் அகர்வால் 2 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 50 ரன்கள் சேர்த்தது. அடுத்துவந்த மில்லரும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கெயில் தனது வழக்கமான அதிரடியை கையாண்டார். 25 பந்துகளில் அரைசதம் அடித்து 69 ரன்களில் கெயில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்  அடங்கும்.

கெயில் ஆட்டமிழந்தபின் பஞ்சாப் அணியின் ரன்வேகம் மட்டுப்பட்டது. மன்தீப் சிங் 30 ரன்களும், அஸ்வின் 16 ரன்களும் சேர்த்தனர். ஹர்பிர்த் பரார் 20 ரன்களுடனும், விஜான் 2 ரன்னிகளும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் லாமிசானே 3 விக்கெட்டுகளையும், படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x