Last Updated : 20 Apr, 2019 01:04 PM

 

Published : 20 Apr 2019 01:04 PM
Last Updated : 20 Apr 2019 01:04 PM

தப்பித்தனர்: பெண்கள் குறித்த சர்ச்சைப் பேச்சில் ஹர்திக், கே.எல்.ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம்

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ குறைதீர்ப்பு மன்றம் தடைவிதிக்காமல் அபராதம் மட்டும் விதித்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கடந்த ஜனவரி மாதம் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதப்பொருளானது. இருவரின் பேச்சுக்கு நாடுமுழுவதும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராகுல், பாண்டியா இருவரையும் இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடிய இருவரும் நீக்கப்பட்டு நாடு திரும்ப உத்தரவிட்டு, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரியது.

இந்தச் சம்பவத்துக்குப்பின் ஹர்திக் பாண்டியாவின் ஜிம்கானா கிளப் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது, தனியார் நிறுவனம் ஒன்று விளம்பர  ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயினிடம் இந்த விவகாரம் அனுப்பப்பட்டது. ஹர்திக் பாண்டியா, கே.எல்,ராகுல் ஆகிய இருவரிடமும் டி.கே. ஜெயின் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பிசிசிஐ அமைப்பின் குறைதீர்ப்பு அதிகாரி டி.கே.ஜெயின் தனது முடிவை அறிவித்துள்ளார். அதை பிசிசிஐ தனது இணைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவர் மீதும் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏற்கனவே இருவரும் சஸ்பெண்ட் எனும் தண்டனையை அனுபவித்துவிட்டனர், குறைதீர்ப்பு மையத்திடமும் இருவரும் தங்களின் தவறை உணர்ந்து, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிவிட்டனர்.

இருவரும் தற்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்கள். இருவரின் நலனைக் கருத்தில் கொண்டு இருவருக்கும் தலா ரூ.20லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த ரூ.20 லட்சத்தில் இருவரும் தலா ரூ.10 லட்சத்தை 10 பணியின்போது, உயிரிழந்த துணை ராணுவப்படையினரின் விதவை மனைவிக்கும் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்.

இருவருக்கும் மீதமுள்ள ரூ.10 லட்சத்தை பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில், தனியாக நிதியம் உருவாக்கப்பட்டு அதில் ரூ.20 லட்சத்தையும் டெபாசிட் செய்ய வேண்டும்.

இந்த அனைத்து அபராதத் தொகையும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து  அடுத்த 4 வாரங்களுக்குள் செலுத்தப் பட வேண்டும். அவ்வாறு தவறினால், பிசிசிஐ நிர்வாகம் அவர்களின் ஊதியத்தில் இருந்து இந்த தொகையை கழித்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே இருவரும் ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு ரூ.30 லட்சம் வருமானத்தை இழந்துவிட்டார்கள். இரு கிரிக்கெட் வீரர்களும் சமூகத்தில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்கள், வரும் காலங்களில் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x