Last Updated : 10 Apr, 2019 10:32 AM

 

Published : 10 Apr 2019 10:32 AM
Last Updated : 10 Apr 2019 10:32 AM

தாஹிரும், ஹர்பஜனும் ஓல்டு வைன்; சென்னை ரசிகர்கள் என்னை தத்தெடுத்துவிட்டனர்: தோனி நெகிழ்ச்சி

இம்ரான் தாஹிரும், ஹர்பஜன் சிங்கும் ஓல்டு வைன் போன்றவர்கள். அவர்கள் வயது முதிர்ச்சியில்தான் ஒளிர்கிறார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியின் 23-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்தது. 109 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசிய இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். பவர்ப்ளே ஓவருக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை ஹர்பஜனும், தீபக் சாஹரும் வீழ்த்தியது கொல்கத்தா அணியை பெரும் நெருக்கடியில் தள்ளியது.

இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி நிருபர்களிடம் கூறியதாவது:

ஹர்பஜனுக்கும், இம்ரான் தாஹிருக்கும் வயதாகிவிட்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால், இருவரும் ஓல்டு வைன் போன்றவர்கள், வைன்(wine) நாள்பட, நாள்பட சுவை கூடுமோ அதுபோல் இருவரும் வயது முதிர்ச்சி அடையும்போது தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்கிறார்கள்.

குறிப்பாக பாஜி(ஹர்பஜன்) தான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசுகிறார். அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தும் கட்டாயம் இருக்கிறதோ அப்போது தாஹிரை அழைத்தால், சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்திக் கொடுப்பார். ஒட்டுமொத்தமாக எங்களின் பந்துவீச்சுப் பிரிவு சிற்பபாக செயல்படுகிறது.

நான் சென்னையில் நீண்ட ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். என்னுடைய டெஸ்ட் அறிமுகப் போட்டியில் இருந்து இங்கு ஏராளமான மறக்க முடியாத விஷயங்கள் நடந்துள்ளன. குறிப்பாக சென்னை மக்கள் சிஎஸ்கே அணியை கொண்டாடுகிறார்கள், சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து அதில் இடம் பெற்று இருக்கிறேன். எனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் சிறப்பான தொடர்பு இருக்கிறது, என்னை உண்மையாகவே சென்னை ரசிகர்கள் தத்தெடுத்து, ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற தீபக் சாஹர் கூறுகையில், " சேப்பாக்கம் மைதானத்தின் சூழலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார்போல் நான் பந்துவீசினேன். சென்னையில் ஏராளமான போட்டிகள் விளையாடப் போகிறோம் என எனக்குத் தெரியும். ஆதலால், ஆடுகளத்துக்கு ஏற்றார்போல், யார்கர்களையும், மெதுவான பந்துவீசும் முறையையும் தேர்வு செய்தேன்.

எனக்கு திறமை இருந்தாலும், அதை சரியாக தோனிதான் பயன்படுத்தினார். எந்த இடத்தில் பந்தை துல்லியமாக வீச வேண்டும், எவ்வாறு பந்துவீசினால் விக்கெட் வீழ்த்த முடியும் என்பது குறித்து ஓய்வு அறையில் அதிகநேரம் தோனி என்னிடம் ஆலோசனை நடத்தினார் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x