Published : 04 Apr 2019 06:36 PM
Last Updated : 04 Apr 2019 06:36 PM

24 மணி நேரம்.. 2 நாடுகள்... 10 விக்கெட்டுகள்: மலிங்காவின் அயராதப் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அனுப்புங்கள் என்ற பிசிசிஐ கோரிக்கைக்கு அடிபணிந்து மலிங்காவை மும்பை இந்தியன்சுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் ரிலீஸ் செய்தது.

 

மலிங்கா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் உடனடியாக இலங்கை புறப்பட்டார்.

 

ஏனெனில் அங்கு உலகக்கோப்பை இலங்கை அணியைத் தேர்வு செய்வதற்கான முன்னோட்ட  சூப்பர் ஃபோர் புராவன்ஷியல் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது, இது முடிந்துதான் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வருவார்.

 

இந்நிலையில் நேற்று இரவு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை வெற்றியில் தன் பங்கைப் பதித்த மலிங்கா இன்று காலை இலங்கை கிரிக்கெட்டின் உள்நாட்டுத் தொடரில்  பங்கேற்க இலங்கை சென்றார்.

 

இந்த தொடரில் அவர் காலே அணிக்கு கேப்டன். கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மலிங்கா 2 ரன்களைத்தான் அடித்தார், இவரது அணி 256 ரன்கள் எடுத்த்தது.

 

தொடர்ந்து ஆடிய கண்டி அணியை மலிங்கா தன் வேகத்தில் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். அதாவது கண்டி அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளையும் மலிங்காவிடம் இழந்து 40/5 என்று தடுமாறியது, பிறகு மலிங்கா மேலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 49 ரன்களுக்கு 7 விக்கெட் என்று அசத்தினார். கண்டி அணி 100 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

 

நேற்று ஐபிஎல்-ல் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், 24 மணி நேரத்துக்கு இருவேறு நாடுகள், இருவேறு மைதானங்கள், இருவேறு சூழல்களில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் மலிங்கா.

 

உண்மையில் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன் என்பதை இலங்கை வாரியத்துக்கு நிரூபித்தார் மலிங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x