Published : 01 Apr 2019 04:04 PM
Last Updated : 01 Apr 2019 04:04 PM

செம யார்க்கர்; ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து : ரஸலைக் காலி செய்த ரபாடா யார்க்கர் குறித்து ‘தாதா’ புகழாரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் வென்ற அந்தப் போட்டியில் ரபாடா, ஆந்த்ரே ரஸலுக்கு வீசிய யார்க்கர் இதுவரை ஐபிஎல் தொடரின் சிறந்த பந்து என்று கங்குலி பாராட்டியுள்ளார்.

 

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக இருந்து வரும் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த வெற்றியின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.

 

சூப்பர் ஓவரில் 10 ரன்களை, அதுவும் ஆந்த்ரே ரஸலுக்கு எதிராகக் கட்டுப்படுத்துவது என்படு அவ்வளவு எளிதான காரியமல்ல, காரணம் ஆந்த்ரே ரஸல் தன் வாழ்நாளின் அதிரடி பார்மில் உள்ளார், முதலில் 19 பந்துகளில் 49, பிறகு அஸ்வின் செய்த மகாபெரிய பீல்டிங் வியூகத் தவறினால் பவுல்டிலிருந்து தப்பிய ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசித்தள்ளியது கிங்ஸ் லெவனின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.  பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அன்று 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார் ரஸல்.

 

இந்நிலையில் சூப்பர் ஓவரில் 10 ரன்களை அவரை எடுக்க விடாமல் செய்தது சாதாரணம் அல்ல. ஒவ்வொரு பந்தையும் மிகச்சரியாக மட்டையை கீழிறக்கி கிரீஸ் அருகே தடுத்தாடும் பிளாக் ஹோலில் வீசினார் ரபாடா.

 

3வது பந்து ரஸலின் பேட்டையும் ஏமாற்றி ஸ்டம்பைப் பெயர்த்தது. இந்தப் பந்து உண்மையில் கங்குலியின் புகழாரத்துக்கு உரியதுதான்.

 

“ரஸலுக்கு ரபாடா வீசிய அந்த யார்க்கர் இந்த ஐபில் சீசனின் இதுவரையிலான சிறந்த பந்து என்றே கருதுகிறேன். தன் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கும் ரஸலை விழித்த இப்படிப்பட்ட பந்து நம்ப முடியாத பந்தாகும்.  வெற்றியில் மகிழ்ச்சி, இந்த அணிக்கு இந்த வெற்றி மிகவும் அவசியம். கடந்த வருடம் பெரிதாக சோபிக்கவில்லை.  இப்போது இளம் வீரர்கள் கொண்ட அணியாக உள்ளது.  அதே போல் பிரித்வி ஷாவின் 99 ரன்கள்... அவரது பேட்டிங் தனித்துவமானது.

 

இப்படிப்பட்ட வெற்றிகள் அணியின் நம்பிக்கையை வேறு தளத்துக்குக் கொண்டு செல்லும். இன்னும் 11 போட்டிகள் உள்ளன.  ஆனல் இந்த வெற்றி வெறும் வெற்றியைத் தாண்டியும் முக்கியமானது” என்றார் கங்குலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x