Published : 01 Apr 2019 03:13 PM
Last Updated : 01 Apr 2019 03:13 PM

உலகக்கோப்பைக்கு முன்னால் பின்னடைவு: ஆஸி.யிடம் ‘ஒயிட் வாஷ்’ வாங்கி பாகிஸ்தான் அதிர்ச்சி

துபாயில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-5 என்று ஒயிட் வாஷ் உதை வாங்கி உலகக்கோப்பைக்கு முன்பாக அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா  கவாஜா (98), மேக்ஸ்வெல் (70), பிஞ்ச் (53), ஷான் மார்ஷ் (61) ஆகியோரது ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஹாரிஸ் சொஹைலின் அபாரமான சதம் (130 ரன்கள்) வீணாக 307/7 என்று முடிந்து ஒயிட் வாஷ் வாங்கியது.

 

பாகிஸ்தானின் வழக்கமான மோசமான பீல்டிங், உற்சாகமற்ற பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்குக் கைகொடுத்தது.

 

துபாயில் மிக அரிதாகவே 300 ரன்களுக்கு மேலான இலக்கு விரட்டப்பட்டுள்ளது, இந்நிலையில் தொடக்கமே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி.  காயத்திலிருந்து மீண்டு வந்த அபிட் அலி முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இவர்தான் 4வது போட்டியில் 112 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அறிமுக வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோருக்கு உரியவராகத் திகழ்ந்தார், ஆனால் கடைசி போட்டியில் டக் அவுட்.

 

அதன் பிறகு ஷான் மசூத் (50 ரன்கள், 54 பந்துகள் 3 பவுண்டரிகள்), ஹாரிஸ் சொஹைல் இணைந்து 2வது விக்கெட்டுக்காக 19 ஓவர்களில் பிரமாதமாக 108 ரன்களைச் சேர்த்தனர் ரன் விகிதம் ஆஸ்திரேலியா எடுத்த அதே வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போதுதான் பார்ட்னர்ஷிப் பிரேக்கர் ஆடம் ஸாம்ப்பா, ஷான் மசூதை எல்.பி.செய்து வெளியேற்றினார்.

 

மொகமது ரிஸ்வான்ன் (12) மேஸ்வெல் பந்தில் நேதன் லயனின் அருமையான மிட் ஆஃப் கேட்சுக்கு வெளியேறினார்.  ஆனால் இதன் பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளரால் ஒதுக்கப்பட்ட உமர் அக்மல், ஹாரிஸ் சொஹைல் இணைந்தனர், உமர் அக்மல் 44 பந்துகளில் 43 ரன்கள் எடுக்க இருவரும் இணைந்து 102 ரன்கள் சேர்த்தனர். ஆனால் உமர் அக்மல் லயன் பந்தை மேலேறி வந்து குறிபார்த்து லான் ஆனில் பெஹெண்டார்பிடம் கேட்ச் கொடுத்தார். 39.4 ஒவர்களில் 238/4 என்று அடுத்த 10 ஒவர்களில் வெற்றி பெற ஒரு புற வாய்ப்பு இருந்தது.

 

ஆனால் ஹாரிஸ் சொஹைல் 130 ரன்களில் அடுத்ததாக பெஹெண்டார்ப் பந்தில் லயனிடம் பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  பாகிஸ்தானின் பொறுப்பு கேப்டன் இமாத் வாசிம் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்ஸ் என்று வேட்டையைத் தொடர்ந்தார்.  ஆனால் எதிர்முனையில் இவருடன் உறுதுணையாக ஆட ஆள் இல்லாததால் இவர் 50 ரன்களில் நாட் அவுட்டாக முடங்க, பாகிஸ்தான் 307/7 என்று முடிந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பெஹெண்டார்ப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

ஆஸ்திரேலியாவின் அபார பேட்டிங், பாகிஸ்தானின் சொதப்பல் பீல்டிங்

 

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவுக்கு நல்ல தொடக்கத்தை பிஞ்சும், கவாஜாவும் அளித்தனர். 23.2 ஓவர்களில் 134 ரன்களை இருவரும் சேர்த்தனர்.  இன்னொரு சதம் எடுக்கும் முன்பாக கவாஜா 98 ரன்களில் வெளியேறினார்.  கடந்த 7 இன்னிங்ஸ்களில் கவாஜா எடுக்கும் 5வது 80+ ஸ்கோராகும் இது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மொகமது அப்பாஸ் பந்து வீச்சும் எடுபடவில்லை, அவரை கவாஜா 2 பவுண்டரிகள் அடிக்க பிஞ்ச் ஒரு சிக்ஸ் அடித்தார்.

 

 

பாகிஸ்தான் கிரவுண்ட் பீல்டிங் படுமோசமாக இருந்தது, கேட்ச்களை விடாவிட்டாலும் மந்தமான பீல்டிங்கினால் ஒரு ரன் 2 ரன்களாக பலமுறை மாறியது, யாசிர் ஷா, உமர் அக்மல் பீல்டிங்கில் தொடர்ச்சியாகச் சொதப்பி வந்தனர். பாகிஸ்தானில் இடது கை மீடியம் பாஸ்ட் பவுலர் உஸ்மான் ஷின்வாரி முதல் 5 ஓவர்களில் 14 ரன்களையே விட்டுக் கொடுத்தார் கடைசியில் 10 ஓவர்களில் 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இவர் கவாஜா, பிஞ்ச், ஸ்டாய்னிஸ், ஹேண்ட்ஸ் கம்ப் ஆகியோரை வெளியேற்றினார்.

 

மேக்ஸ்வெல் முதலில் அவுட் ஆகியிருப்பார், ஆனால் பீல்டர் முன்னால் வந்ததால் அது கேட்ச் ஆகாமல் பவுண்டரி ஆனது, அதன் பிறகு மேக்ஸ்வெல் சரவெடி வெடித்தார். யாசிர் ஷாவைஉ 3 பவுண்டரிகளை அடுத்த ஒவரில் ஆரம்பித்த மேஸ்வெல் நிறுத்த முடியாமல் ஆடினார், 26 பந்துகளில் அரைசதம் கண்ட அவர், 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 70 ரன்களை விளாசி ஜுனைத் கான் பந்தில் பவுல்டு ஆனார்.  கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டது பாகிஸ்தானின் தோல்விக்குப் பெரும் காரணமாக அமைந்தது.

 

ஆட்ட நாயகன் கிளென் மேக்ஸ்வெல், தொடர் நாயகன் ஏரோன் பிஞ்ச்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x