Published : 29 Mar 2019 04:12 PM
Last Updated : 29 Mar 2019 04:12 PM

எங்கே...! மிடில் ஸ்டம்ப் யார்க்கர் வீசு பார்ப்போம் : 3 ஸ்டம்ப்களையும் காட்டி மலிங்காவுக்கு சவால் விடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸின் பேட்டிங்

மலிங்கா ஒரு காலத்தில் பாதம் பெயர்க்கும் யார்க்கர்களுக்குப் பெயர் பெற்றவர், 2007 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் உட்பட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவை கதி கலக்கினார், ஆனால் தென் ஆப்பிரிக்கா வென்றது, அப்போது முதல் மலிங்கா என்றால் தென் ஆப்பிரிக்காவுக்குக் கொஞ்சம் கிலிதான்.

 

அதாவது உலகிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எந்த பவுலரும் எடுத்ததில்லை. சக்லைன் முஷ்டாக் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

 

ஆனால் டிவில்லியர்ஸ் எந்த பவுலரைக் கண்டும் அஞ்சாதவர், 360 டிகிரி ஷாட்களை அடிக்கும் அசகாய சூரர்.  டிவில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் மலிங்காவுக்கு எதிராக 61 பந்துகளில் 100 ரன்களை விளாசியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 

இப்போதெல்லாம் மலிங்காவின் வேகம் போய் விட்டது அதிகபட்சமாக மணிக்கு 135-36 கிமீ வேகம் வீசுகிறார், ஆனால் கட்டர்கள், ஸ்லோ பந்துகள் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வேறுபட்ட லெந்த்களில் வீசுவது என்று கட்டுப்படுத்தும் முறைகளை மேம்படுத்தியுள்ளார்.

 

இவர் வேகம் குறைந்ததால் நேற்று ஏ.பி.டிவில்லியர்ஸ் மலிங்காவை ஸ்பின்னர் போல் டீல் செய்தார், பந்தை ரிலீஸ் செய்யும் வரை தன் நகர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.  மேலும் 3 ஸ்டம்புகளையும் காட்டியபடிதான் டிவில்லியர்ஸின் ஸ்டான்ஸ் இருந்தது. இது மலிங்காவின் யார்க்கர் திறமைக்கு விடப்பட்ட சவாலாகும்.

 

ஆனால் யார்க்கர் விழவில்லை, ஏபி டிவில்லியர்ஸ் மட்டையிலிருந்து பந்துகள் பவுண்டரிக்குத்தான் பறந்தன. 14 ஓவர்கள் முடிவில் 127/3 என்ற நிலையில் 30 பந்துகளில் 61 ரன்கள் தேவை எனும்போது மலிங்கா 15வது ஓவரை வீசிய போது  லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ் பிறகு மிட்விக்கெட் மேல் ஒரு அரக்க சிக்ஸ். அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசல். 2 ஒவர் 17 என்று இருந்த மலிங்கா அனாலிசிஸ் 3 ஒவர்கள் 37 என்று ஆனது.

 

பிறகு 18வது ஓவரில் ஹர்திக் பாண்டியாவுக்கும் பாடம் நடத்தினார் டிவில்லியர்ஸ், முதலில் புல்டாஸ் லெக் திசையில் காணாமல் போனது. அடுத்ததாக அடித்த சிக்ஸ் டிவில்லியர்ஸால் மட்டுமே முடியக்கூடியது.  ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே சென்ற வேகம் குறைந்த பந்து டிவில்லியர்ஸ் கிட்டத்தட்ட வலதுபுறம் கீழே விழும் அளவுக்குச் சாய்ந்து மட்டையை ஆக்ரோஷமாகச் சுழற்ற டீப் கவர் பாயிண்ட் திசையில் அபாரமான நம்ப முடியாத சிக்ஸ். அடுத்த புல்டாஸ் லெக் திசையில் சிக்ஸ்.

 

எங்கு வேண்டுமானாலும் எந்தப் பந்தையும் அடிப்பேன் என்பதுதான் டிவில்லியர்ஸின் திறமை.  டிவில்லியர்ஸ் நேற்று போட்டியையே ஜெயித்திருப்பார், ஆனால் பும்ரா வேறு ஒரு பவுலர், உலகத்தின் இப்போதைய சிறந்த பவுலர் அவரால் மட்டுமே டிவில்லியர்ஸைக் கட்டுப்படுத்த முடிந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x