Last Updated : 29 Mar, 2019 11:46 AM

 

Published : 29 Mar 2019 11:46 AM
Last Updated : 29 Mar 2019 11:46 AM

தடைக்காலம் முடிந்தது: ஸ்மித், வார்னர் உள்ளூர், சர்வதேசப் போட்டிகளில் இனி விளையாடலாம்: ஆஸி. வீரர்கள் எதிர்ப்பு

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  விதித்திருந்த ஒரு ஆண்டு தடை நேற்றுடன் காலாவதியானது. இனிமேல் இருவரும் சர்வதேச, உள்ளூர் போட்டிகளில் எந்தவிதமான தடையுமின்றி விளையாடலாம்.

உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இருவரும் இடம் பெறுவதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வார்னர், ஸ்மித், கேமரூன் ஆகியோர் அணிக்குள் வருவதை சில வீரர்கள் எதிர்த்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தடைக்காலம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

கேப்டவுனில் நடந்த  3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்த விசாரணையில் மூன்றுபேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, 3 பேரில் வார்னர், ஸ்மித் இருவருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்ட்டுக்கு  9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்து.

இதில் பான்கிராப்ட் தடைக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் முடிந்து ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார். ஆனால், ஸ்மித், வார்னருக்கு தடைக்காலம் முடியாமல் இருந்தது.

தடை முடிந்தது

இந்நிலையில், வார்னர், ஸ்மித் மீது விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. வார்னர், ஸ்மித் இருவரும் இனிமேல் ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் தடையின்றி விளையாட முடியும். தடைக்காலம் இருந்ததால்,  கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வார்னர், ஸ்மித் இடம் பெறாமல் இருந்த நிலையில்,  இருவரும் இப்போது ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார்கள்.

தற்போது ஆஸ்திரேலிய அணி துபாயில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் வார்னர், ஸ்மித் ஆஸ்திரேலிய அணியில் இணையலாம் எனத் தெரிகிறது.

எதிர்ப்பு

இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் சிலர் வார்னர், ஸ்மித் இருவரும் அணிக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக 'தி சிட்னி ஹெரால்டு' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஷ் ஹாசல்வுட், பாட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் வார்னர், ஸ்மித் அணிக்குள் திரும்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட வார்னர்தான் காரணம், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி வார்னர்தான் என்பதால், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று 4 வீரர்களும் வலியுறுத்தியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பந்தை சேதப்படுத்திய சம்பவம் நடந்தபோது, வார்னரை அணியில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால், தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியை புறக்கணிப்போம் என்று 4 பந்துவீச்சாளர்களும் ஆஸி. வாரியத்திடம் தெரிவித்தாதகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்மித் , வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் அணிக்குள் வரும்போது, சகவீரர்கள் அவர்கள் மூவரையும் கிண்டல் செய்யாத வகையில் வீரர்களுக்கு ஒருநாள் ஆலோசனைக் கூட்டத்தையும் துபாயில் ஆஸ்திரேலிய வாரியம் ஏற்பாடு செய்தது. அதில் ஸ்டார்க், ஹேசல்வுட்டைத் தவிர மற்ற வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கெவின் ராபர்ட்ஸ் கூறுகையில், "வார்னர், ஸ்மித், கேமரூன் ஆகிய மூவரும் அணிக்குள் வருவதற்கான அனைத்து ஆதரவையும் அளிப்போம். மற்ற வீரர்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அணிக்குள் ஒற்றுமையும், நட்புணர்வும் வருவதற்கு பேசி வருகிறோம். இந்த மூன்று வீரர்களும் தாங்கள் செய்த தவறுகளுக்கு போதுமான அளவு விலை கொடுத்துவிட்டார்கள். தவறையும் உணர்ந்துவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x