Last Updated : 29 Mar, 2019 10:26 AM

 

Published : 29 Mar 2019 10:26 AM
Last Updated : 29 Mar 2019 10:26 AM

கண்ணை திறந்து வெச்சு பாருங்க, ஐபிஎல் விளையாடுகிறோம், கிளப் போட்டி இல்லை": நடுவரை வறுத்தெடுத்த கோலி

ஐபிஎல் போட்டியில் நடுவர்களாக இருப்பவர்கள் கண்ணை திறந்துவைத்து பணி செய்ய வேண்டும், இது கிளப் கிரிக்கெட்  போட்டி அல்ல, ஐபிஎல் போட்டி என்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்தார்.

பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் 12-வது ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து மோதியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் பெங்களூரு அணி வெற்றிக்கு 17 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. ஆனால், 5 பந்துகளில் 10 ரன்களை துபேயும், டிவில்லியர்ஸும் சேர்த்துவிட்டனர். கடைசி பந்தை மலிங்கா புல்டாஸாக வீச அதை  ஆர்சிபி வீரர் துபே அடிக்கமுடியாமல் போனதால் பெங்களூரு அணி தோற்றது.

போட்டி முடிந்த சில நிமிடங்களில் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் மல்லிங்காவின் பந்துவீச்சு முறை ரீப்ளை செய்யப்பட்டது. ரீப்ளேயில் மலிங்கா கீரீஸை தாண்டி பந்துவீசியது தெரிந்தது. இதைப் பார்த்த நடுவர்கள், நோபால் அளித்துமீண்டும் விளையாட வீரர்களை அழைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நடுவர்கள் போட்டி முடிந்தவுடன் புறப்பட்டனர்.

 இதை நடுவர்கள் இருவரும் இதை பார்த்தும் மூன்றாவது நடுவருக்கு கேட்கவில்லை.  நோபாலாக அறிவித்து ப்ரீஹிட் கொடுத்திருந்தால்,  போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

களத்தில் ஐசிசி எலைட் பேனல் நடுவர் எஸ்.ரவியும், நந்தனும் இருந்தனர். இந்தியா சார்பில் எலைட் பேனலில் இடம் பெற்ற ஒரே நடுவர் ரவி மட்டும்தான். ஆனால், இருவரும் இதை பொருட்டாக கருதாமல் சென்றனர். இது ஆர்சிபி அணியினர் அனைவருக்குமே அதிர்ச்சியாக அமைந்தது.

போட்டி முடிந்தபின், ஆர்சிபி கேப்டன் விராட் கோலியிடம் இது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு மிகுந்த கோபத்துடன் பதில் அளித்தார்.

நாங்கள்  உயர்தரமான ஐபிஎல் போட்டியை சர்வதேச அளவில் விளையாடுகிறோம், கிளப் லெவலில் விளையாடவில்லை. நடுவர்கள் எல்லாம் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு கண்காணிக்க வேண்டும். மல்லிங்கா வீசியது எவ்வளவு பெரிய நோ-பால் தெரியுமா. இதை கவனிக்காமல் இருந்தது கேலிக்குரியதாக இருக்கிறது.  என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. நடுவர்கள் இன்னும விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் 7 விக்கெட்டுகளை இழந்தபின்பும் கூட சிறப்பாக பேட் செய்து வெற்றிக்கு அருகே சென்றுவிட்டோம். ஆனால், பும்ரா வீசிய சில ஓவர்கள் எங்களுக்கு கடும் சரிவை ஏற்படுத்திவிட்டது. பும்ரா பந்துவீச்சை கவனமில்லாமல் எதிர்கொண்டதால், நான் விக்கெட்டை இழந்துவிட்டேன். உண்மையில் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் திறன் பும்ராவுக்கு இருக்கிறது.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடுவர் தவறு குறித்து கூறுகையில்," நேர்மையாகக் கூறுகிறேன், நான் மைதானத்தை விட்டு செல்லும்போதுதான் அது நோ-பால் என்பதை நான் அறிந்தேன். தொலைக்காட்சி இருக்கிறது, ரீப்ளை செய்து பார்த்திருக்கலாம். இதுபோன்ற தவறுகள் விளையாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. மல்லிங்கா வீசிய ஓவருக்கு முதலில் பும்ரா பந்துவீசினார். அப்போது, அந்த பந்து வைட் இல்லாமல் சென்றபோதிலும் அதை வைட் என்று அறிவித்தார்கள்.

இதுபோன்ற முடிவுகள் விளையாட்டை குலைத்துவிடும், இதுபோன்ற ஆட்டங்கள் ஐபிஎல் போட்டியையே சிதைத்துவிடும். நாங்கள் சேர்த்த 180 ரன்கள் என்பது போராடக்கூடிய ஸ்கோர் என்ற  போதிலும்கூட, எங்கள் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தார்கள். விராட், டிவில்லியர்ஸ் கூட்டணியைப் பிரிக்க கடும் சிரமப்பட்டனர். பந்துவீச்சாளர்களின் பணி சிறப்பானது. 200 ரன்கள்வரை அடித்திருந்தால், இந்த ஆடுகளத்தில் வெற்றி பெறுவது கடினமாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x