Last Updated : 24 Mar, 2019 11:48 AM

 

Published : 24 Mar 2019 11:48 AM
Last Updated : 24 Mar 2019 11:48 AM

இப்படியெல்லாமா பிட்ச் அமைப்பது, இதுல விளையாடவே முடியாது: சேப்பாக்கம் பிட்ச்சை வறுத்தெடுத்த தோனி

இப்படியெல்லாமா பிட்ச் அமைப்பது, இதுபோன்ற பிட்ச்சுகளை நான் பார்த்ததே இல்லை. இதைப் பார்க்கும்போது கடந்த 2011-ம் ஆம்டு சாம்பியன் லீக் ஆடியபோது இருந்த பிட்ச் நினைவுக்கு வருகிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி காட்டமாகத் தெரிவித்தார்

12-வது ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதலாவது ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதின. இரு வலிமையான அணிகள் மோதுவதால், முதல் ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று சென்னை ரசிகர்கள் எண்ணினர். ஆனால், அனைத்துக்கும் எதிராக ஆட்டம் அமைந்திருந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளத்தை மிக மோசமாக அமைத்து, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும், மெதுவான ஆடுகளமாக மாற்றிவிட்டனர். இதனால், பேட்ஸ்மேன்களால் நிலைத்து விளையாட முடியாமல், பந்துகள் ஏனோதானோ என்று ஸ்விங் ஆனது, சுழன்றது. ஹர்பஜன், ரவிந்திர ஜடேஜாவின் பந்துகள் சுழல்வதே அதிசயம், ஆனால், நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் பந்துகள் ஏகத்துக்கு சுழன்றது.

இதனால், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 17.1 ஓவர்களில்70 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகவும் குறைவான இந்த ஸ்கோரை எட்டுவதற்கு சிஎஸ்கே அணி 17.4 ஓவர்கள் எடுத்துக்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. தரமான பிட்ச்சாக இருந்தால், இந்த 70 ரன்களை 5 ஓவர்களில் அடித்திருக்க வேண்டும், ஆனால், 17 ஓவர்கள் வரை ஆனது.

போட்டிமுடிந்தபின், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ஆடுகளம் குறித்து பொறிந்து தள்ளினார்.

அவர் கூறியதாவது:

''இப்படிப்பட்ட ஆடுகளத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படி பேட் செய்ய முடியும், பேட்ஸமேன்களுக்கு சாதகமில்லாமல், மெதுவாக பந்துகள் வருகின்றன. இதைப் பார்க்கும்போது, கடந்த 2011-ம் ஆண்டு சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி ஆடுகளம் நினைவுக்கு வருகிறது.

கடந்த ஐபிஎல் போட்டிக்குபின் நாங்கள் திரும்பி வந்திருப்பதால், ஆடுகளம் நன்றாக அமைக்கப்பட்டு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், இப்படி கடினமானதாக இருக்கும் என நினைக்கவில்லை.

இதுபோன்ற ஆடுகளம் இருந்தால், எங்களுக்கும் பேட் செய்ய கடினமாகத்தான் இருக்கும். இப்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக பராமரிக்க வேண்டியது அவசியம். பேட்ஸ்மேன்கள் அதிகமான ஸ்கோர் அடிக்கும் விதத்தில் இருக்க வேண்டும், எதிரணிகளும் இந்த ஆடுகளத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் நாங்கள் 150 ரன்கள் வரை குறைந்தபட்சம் எதிர்பார்த்தோம். ஆனால், 90 முதல் 120 ரன்கள் சேர்ப்பது என்பது மிகவும் குறைவானது. உண்மையான தரமான ஸ்பின்னர்கள் இதில் பந்துவீசி இருந்தால், இந்த ரன்களைக் கூட அடித்திருக்க முடியாது, மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆடுகளம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

நாங்கள் பயிற்சி ஆட்டத்தின் போது இதே ஆடுகளத்தில்தான் விளையாடினோம். அப்போது இதுபோன்று சுழற்பந்துகள் சுழலவில்லை. ஐபிஎல் போட்டி என்பது வழக்கத்துக்கு மாறாக அதிகமான ஸ்கோர் செய்ய வேண்டிய போட்டி. வழக்கமான பயிற்சி ஆட்டத்தைக் காட்டிலும் இதில் அதிகமாக அடிக்க வேண்டும். ஆனால், பயிற்சி ஆட்டத்தில் அடித்த ஸ்கோரை விட 30 ரன்கள் வரை அதிகமாக அடிப்போம் என்று எதிர்பார்த்தோம், இப்போது அதைக் கூட அடிக்க முடியவில்லை.

நாங்கள் டாஸ் வென்றதால், எதிரிணியை பேட் செய்ய அழைத்தோம், இரவு நேரத்தில் பனி இருக்கும் பந்துவீச கடினமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், ஆடுகளம் இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை. ஒருவேளை நாங்கள்முதலில் பேட் செய்திருந்தால், நிலைமை மாறியிருக்கும். ஒருவேளை ஆடுகளம் இன்னும் தரமாக அமைந்திருந்தால், போட்டியின் சூழலே மாறி இருக்கும்.

தொடர்ந்து அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடுவதற்கு சேப்பாக்கத்தில் இப்போது அமைக்கப்பட்டு இருக்கும் ஆடுகளம் எங்களுக்கு சரியானது அல்ல, பொருத்தமாக இருக்காது''.

இவ்வாறு தோனி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x