Published : 23 Mar 2019 11:39 PM
Last Updated : 23 Mar 2019 11:39 PM

ஆரம்பமே ஆர்சிபி சொதப்பல்: விறுவிறுப்பற்ற முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கேயா?-ஆர்சிபியா?  விராட் கோலியா? தோனியா? என்ற பில்ட்-அப்களையெல்லாம் காலி செய்யும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி சொதப்பலாக பேட்டிங் செய்ய 71 ரன்கள் இலக்கையும் இழுத்து இழுத்து கடந்த முறை சாம்பியன் என்ற ஆகிருதி இல்லாமல் 18வது ஓவரில் இலக்கை எட்டி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

 

பிட்ச் எப்படி நடந்து கொள்ளும் என்று தெரியாது என்பதால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததாக கேப்டன் தோனி தெரிவித்தார்.  ஆனால் பிட்ச் ஸ்பின் பிட்ச் என்று ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா விசும் போது தெள்ளத் தெளிவானது.

 

விராட் கோலி தனக்குப் பழக்கமில்லாத, தான் பெரிய அளவில் சோபிக்காத தொடக்க நிலையில் களமிறங்கினார்.  தீபக் சாஹர் மிக அருமையாக முதல் ஓவரை வீசினார், அந்த ஓவரில் 1 ரன் தான் வந்திருக்கும் ஆனால் பார்த்திவ் படேலின் ஆஃப் டிரைவை ஷர்துல் தாக்குர் மிஸ் பீல்ட் செய்ய பவுண்டரி ஆனது.

 

தொடக்கத்திலேயே ஹர்பஜனைக் கொண்டு வந்தது தோனியின் கேப்டன்சி திறமைக்கு ஒரு எடுத்துக் காட்டு என்பதோடு கோலி நிற்கும்போது தைரியமான முடிவும் கூட அவரும் கடைசி 3 ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருந்த போதும் கோலி விக்கெட்டைக் காலி செய்தார்.

 

அதற்குக் காரணம் தீபக் சாஹர் ஒரு முனையில் கோலியை கட்டிப்போட்டார், ரன் எடுக்க கோலி திணறினார், அதிலும் ஃப்ரீ ஹிட் பந்து யார்க்கராக அமைய ரன் வரவில்லை கோலி கடும் ஏமாற்றத்தில் அடுத்த ஓவரில் ஹர்பஜன் சிங்கை தூக்கி அடித்து கேட்ச் ஆகி 12 பந்துகளில் 6 ரன்களுக்கு வெளியேறினார்.

 

மொயின் அலி இறங்கி ஹர்பஜனை ஒரு சிக்ஸ் அடித்தார். ஆனால் இவரும் நீடிக்காமல் 9 ரன்களில் ஹர்பஜன் பந்து ஒன்று நின்று திரும்ப அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.  ஏ.பி.டிவில்லியர்ஸ் வழக்கத்துக்கு விரோதமாக 10 பந்துகளில் பவுண்டரி எதுவும் இல்லாமல் 9 ரன்கள் எடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை சிஎஸ்கே தவறவிட்டும் அதனைப் பயன்படுத்தாமல் ஸ்வீப் ஷாட் ஆடி ஜடேஜா கையில் சிக்கினார், ஹர்பஜன் 3 பெரிய விக்கெட்டுகளைக் காலி செய்து தன் கோட்டா ஓவரை 4 ஓவர் 20 ரன்கள் 3 விக்கெட் என்று முடித்தார்.

 

ஐபிஎல் அறிமுக போட்டியில் ஆடும் மே.இ.தீவுகள் அதிரடி விரர் ஹெட்மையராவது தன் திறமையைக் காட்டுவார் என்று பார்த்தால் ரெய்னாவிடம் தட்டி விட்டு சிங்கிள் எடுக்க பாதி தூரம் ஓடினார், படேல் வரவில்லை டக்கில் ரன் அவுட் ஆனார்.  துபே, சைனி, சாஹலை இம்ரான் தாஹிர் சொற்ப ரன்களில் காலி செய்தார்.  கொலின் டி கிராண்ட் ஹோம், ஜடேஜாவின் திரும்பிய பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார்.

 

பார்த்திவ் படேல் ஒருமுனையில் 29 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக பிராவோவிடம் ஆட்டமிழக்க ஆர்சிபி அணி 18வது ஓவரில் 70 ரன்களுக்கு சுருண்டது. ஆர்சிபி இன்னிங்சில் மொத்தம் 2 பவுண்டரிகள் 1 சிக்சர்தான். ஆர்சிபி அணி வீரர்களின் ஸ்கோர் பார்த்திவ் இரட்டை இலக்கம் நீங்கலாக கோலி உட்பட இவ்வாறு இருந்தது: 6, 9, 9, 0, 2,4, 2, 4, 1, 0 என்று பரிதாபமாகக் காட்சியளித்தது.  ஹர்பஜன், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை எடுக்க, ஜடேஜா 1 விக்கெட், பிராவோ 1 விக்கெட்.

 

ராயுடு சொதப்ப, சிஎஸ்கே-யின் அறுவை சேஸிங்:

 

இலக்கை விரட்டக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சனுக்கு சாஹல் முதல் ஓவரை மெய்டனாக வீசினார். அவர் 10 பந்துகளை ஆடியும் ரன் எண்ணிக்கையை தொடங்க முடியாமல் கடைசியில் சாஹலிடமே ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆகி வெளியேறினார்.

 

 

அம்பதி ராயுடு ஆஸ்திரேலியா தொடரில் சந்தித்த பார்ம் இன்மையினால் கடுமையாகத் திணறினார், அவரால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய முடியவில்லை. 28 ரன்கள் எடுப்பதற்கு 42 பந்துகள் எடுத்துக் கொண்டார், இதில் 2 முறை அவருக்கு கேட்ச் விடப்பட்டது.

 

சுரேஷ் ரெய்னா மட்டுமே அனாயசமாக ஆடி 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களை விறுவிறுப்பாக எடுத்தார். ஆனால் 19 ரன்களில் மொயின் அலி பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் துபேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  ராயுடு 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 பந்துகளைச் சந்தித்து 28 ரன்களை எடுத்து அசிங்கமான முறையில் ஆட்டமிழந்தார். மொகமது சிராஜ் பந்தை ஊருக்கு முன்னாடியே மேலேறி வந்து ஆட முயல அவர் ஷார்ட் பிட்ச் ஆக்க அசிங்கமாக மட்டையின் உள்விளிம்பில் வாங்கி பவுல்டு ஆனார் ராயுடு.  சீரியசாக ராயுடுவுக்கு பதில் முரளி விஜய்யை தோனி இறக்கும் முடிவை பரிசீலிப்பது நல்லது. ஏனெனில் 2 லைஃப் கொடுத்தார், ஆட்டத்திலும் எந்த வித சரளமும் இல்லை.

 

இதில் இவரால் கேதார் ஜாதவ் வந்தவுடன் ரன் அவுட் ஆகியிருப்பார், எளிதான சிங்கிளை வேண்டாம் என்று மறுக்க அங்கு ஆர்சிபி பீல்டர் சொதப்பியதால் கிரீசுக்குள் ரீச் ஆனார் ஜாதவ், கடைசியில் ஜாதவ் 13 நாட் அவுட், ஜடேஜா 6 நாட் அவுட். 18 வது ஓவரில் 71/3 என்று சிஎஸ்கே வென்றது. சாஹல் மட்டுமே 4 ஒவர் 1 மெய்டன் 6 ரன் 1 விக்கெட்.

 

சிஎஸ்கே அணி மொத்தம் 68 டாட்பால்களை சாப்பிட்டது.  மொத்தத்தில் பெரிய பில்ட் அப் கொடுக்கப்பட்டு கடைசியில்  இவ்வளவுதானா என்ற ரீதீயில் முடிந்தது முதல் ஆட்டம். ஆர்சிபி சொதப்புவது புதிதில்லை என்றால் சிஎஸ்கேவின் 70 ரன் விரட்டல் அதை விட புரியாத புதிர் மந்தகதியில் ஆட்டத்தின் விறுவிறுப்பே பறிபோனது.

 

2013க்குப் பிறகே ஐபிஎல் போட்டிகள் பல பில்ட் அப்புக்கு நிகராக இல்லாமல் விறுவிறுப்பற்ற சொதப்பல் போட்டிகளாக முடிவடைவதைப் பார்க்கிறோம், இந்த போட்டியும் அந்தப் பட்டியலைச் சேர்ந்ததே. ஆட்ட நாயகன் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x