Last Updated : 23 Mar, 2019 08:23 AM

 

Published : 23 Mar 2019 08:23 AM
Last Updated : 23 Mar 2019 08:23 AM

சிஎஸ்கே… நமது அணியா?

12-வது ஐபில் போட்டிகள் துவங்க போகின்றன. 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் சென்னையில் போட்டிகள் நடக்க இருக்கின்றன. கடந்த முறை உள்ளூர் போராளிகளுக்கே மாநில அரசு பயந்துபோனதால் போட்டிகள் சென்னையிலிருந்து பறந்துபோனது. இம்முறை மக்களவை தேர்தலைக்கூட கண்டுகொள்ளாமல் நடக்க இருக்கிறது. துவக்கப் போட்டியும், இறுதிப் போட்டியும் சேப்பாக்கத்திற்கே கிடைத்திருக்கிறது.

 

நமது ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு தீனிபோட காரணங்கள் தேவையில்லைதான். அதனால்தான் தமிழக வீரர்களுக்கே வாய்ப்பளிக்காத அணியாக இருந்தாலும் பெயரில் “சென்னை“ இருப்பதால் தேசிய அணிக்கு தரும் முக்கியத்துவத்தை சிஎஸ்கே வுக்கும் தருகிறார்கள். ஷாருக்கின் “சென்னை எக்ஸ்பிரஸ்“ திரைப்படத்தையே கொண்டாடியவர்கள்தானே நாம்.

 

பயிற்சி போட்டியிலேயே அல்டிமேட் ஸ்டாரின் முதல்நாள் காட்சிக்கான அலப்பறையை பார்க்க முடிந்தது. தூண்களோடு நின்ற பறக்கும் பால பணிகள்கூட நிறைவடைந்தாலும், நமது சேப்பாக்கம் மைதானத்தின் ஐ, ஜே, கே கேலரி பிரச்சினை முடிவுக்கு வராது போல. சென்னை ரசிகர்களுக்கான திருஷ்டிப் பொட்டாக தொடருகிறது.

 

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க சிஎஸ்கேவும் ஒரு வழியாக இருப்பதால் 4-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்தை பிடிக்க இத்தொடரில் மோஹித்சர்மாவுக்கும், தீபக் சஹாருக்கும் இடையே போட்டி நிலவலாம். ஏன் அது ஷர்துல்தாகூராக இருந்தாலும் ஆச்சர்யமில்லை. பேட்ஸ்மேன்களுக்கான 4-வது இடத்தை பிடித்து வைத்திருந்த அம்பத்திராயுடுவுக்கு ஆஸ்திரேலிய தொடரால் ஏற்பட்ட திடீர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவும் இந்த ஐபில் உதவக்கூடும். ரவீந்திரஜடேஜாவுக்கு இடம்பிடிக்க யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.

 

சென்னை அணி என்றில்லை, மும்பை இந்தியன்ஸ் போன்ற ஐபிஎல் அணி வீரர்களுக்கும் இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் என்பது போக ஐபிஎல் அணிகள், அதன் ஸ்பான்சர்கள், வீரர்கள் ஸ்பான்சர்கள் போன்ற வர்த்தகக் காரணிகளே இந்திய அணித்தேர்வில் பிரதானம் வகிக்கின்றன, அதனால்தான் கருண் நாயார் இன்று இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார், நாளை ஹனுமா விஹாரிக்கும் இதே நிலைதான் ஏற்படும். இப்படியிருக்கையில் ஐபிஎல் ஆடுவது கனவு, இந்தியாவுக்கு ஆடுவது கனவு என்றெல்லாம் இளம் வீரர்கள் ஆசைப்படுவது துர்லபமே.

 

கடந்த முறை பெயரளவிற்கு அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தமிழக வீரர்கள் விஜய், ஜெகதீசன் ஆகிய இருவரும் கடைசிவரை பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்ட வருத்தம் நிறைய ரசிகர்களை அணி மாறச் செய்துள்ளது. சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தோனிக்கே கிடைக்க வேண்டும் என்ற கவனமா? கடந்த காலங்களிலும் அணியிலிருந்த பாபா அபாராஜித் போன்ற இளம்வீரர்களுக்கு உரிய வாய்ப்புகள் தரப்படாமல் புறக்கணிக்கப்ட்ட நிகழ்வுகள் அதிகம் இருக்கின்றன.  தோனி அணியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பாபா அபராஜித் இருந்திருப்பார், மருந்துக்குக் கூட அவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவில்லை தோனி. மற்ற அணிகளில் ஆடும் சில உள்ளூர் வீரர்களுடன் ஒப்பிடும்போது அபினவ் முகுந்த்தும் குறைந்தவரல்ல.

 

சென்னை ரசிகர்களை தோனி என்ற பிராண்டின் பெயரால் அணியுடன் ஒன்றச்செய்யும் செயற்கை ஏற்பாடுகளுக்கு பதில் சில தமிழக வீரர்களுடன் ஆடினாலே இயற்கையாகவே இது நமது அணி என்ற உணர்வு வந்துவிடும். ஏற்கனவே தனது ஜார்க்கண்ட் மாநில வீரர்களான சவுரப் திவாரி, வருண் ஆரோன், இஷான் கிஷான் ஆகியோர்களுக்கு பிற மாநில வீரர்களை போல் உரிய ஆதரவை பெற்றுத்தரவில்லை என்ற குற்றச்சாட்டும் தோனி மீது உண்டு. வருங்காலங்களிலாவது சென்னை வீரர்களுடன் ஆடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை காணும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம். ஆனது ஆகட்டும், நாமும் சிஎஸ்கேவுக்கு பெரிய விசில் போடுவோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x