Published : 23 Mar 2019 08:07 AM
Last Updated : 23 Mar 2019 08:07 AM

தனிப்பட்ட வீரரால் வெல்ல முடியாது: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கருத்து

தனிப்பட்ட வீரரால் மட்டுமே ஐபிஎல் தொடரை வெல்ல முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரு முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தவருமான கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதில், “விராட் கோலி 8 வருடமாக பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை. எனினும் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படாமல் உள்ளார். இதனால் அவர், அணிக்கு கடமைப்பட்டிருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்மிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “ஒரு நபரால் மட்டும் ஐபிஎல் தொடரை வென்றுவிட முடியாது. இந்தத் தொடரில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். எல்லா அணிகளுமே புத்திசாலித்தனமாக செயல்படக்கூடியது என்பதால் இந்தத் தொடர் கடினமாகவே அமைகிறது.

எனவே உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகவும், வீரராகவும் இருந்துவிட்டால் மட்டுமே அவர், ஐபிஎல் தொடரை வென்று கொடுத்துவிட முடியும் என்பது அர்த்தமல்ல. இதுதொடர்பாக பல விஷயங்கள் உள்ளன. ஒன்றுமட்டும் எனக்கு தெரியும், விராட் கோலிக்கு சவால்கள் இருக்கும் போதெல்லாம் அவர், அதை எதிர்கொள்கிறார்.

காயம் காரணமாக லுங்கி நிகிடி விலகியுள்ளது எங்களது அணிக்கு இழப்புதான். மாற்று வீரரை அணியில் சேர்ப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம், அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதுதான். பேட்ஸ்மேன்கள் ரிஸ்க் எடுக்கும் இடங்களை அவர்கள், அறிந்து கொண்டு பந்து வீசுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x