Published : 23 Mar 2019 08:04 AM
Last Updated : 23 Mar 2019 08:04 AM

இதுவே கடைசியாக இருக்கலாம்

ஐபிஎல் தொடரில் கடந்த 11 சீசன்களாக ஏராளமான வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வந்துள்ளனர்.  இவர்களில் யுவராஜ் சிங், ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல், டி வில்லியர்ஸ், இம்ரன் தகிர் உள்ளிட்ட 5 வீரர்கள் வயது மூப்பின் காரணமாக இந்த சீசனுடன் ஓய்வு பெறக்கூடும் என கருதப்படுகிறது.

யுவராஜ் சிங்

ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து யுவராஜ் சிங் விளையாடி வருகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், பெங்களூரு, சன் ரைசர்ஸ் என பல அணிகளுக்காக விளையாடிய அவர், இந்த சீசனில் மும்பை அணிக்காக களமிறங்குகிறார்.

கடந்த இரு சீசன்களிலும் யுவராஜ் சிங்கின் பேட்டிங் திறமை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த சீசனில் யுவராஜ் சிங்கை ஏலம் எடுக்க யாரும் முன்வராத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1 கோடிக்கு வாங்கியது. 37 வயதாகும் யுவராஜ் சிங் தனது பேட்டிங் திறனை நிரூபிக்காவிட்டால், இதுவே அவருக்கு கடைசி தொடராக அமையக்கூடும்.

ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட 37 வயதான ஷேன் வாட்சன் பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த வாட்சன், அதன்பின் பெங்களூரு அணியிலும், கடந்த இரு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் உள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று 15 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் அவர், எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரது எதிர்காலம் அமையும்.

டி வில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் அணிகளில் விளையாடி வருகிறார். தொடக்கத்தில் 2008 முதல் 2012-ம் ஆண்டு வரை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் 2013 முதல் பெங்களூரு அணியிலும் தவிர்க்க முடியாத வீரராக  உள்ளார்.

360 டிகிரி கோணத்தில் மைதானத்தில் எந்த பகுதிக்கும் பந்துகளை விரட்டும்  திறமை கொண்டவர். இந்த சீசனில் பெங்களூரு அணி நிர்வாகம் அதிகளவில் இளம் வீரர்களை வளைத்து போட்டுள்ளது. இதனால் 37 வயதான டி வில்லியர்ஸ் அடுத்த சீசனில் தொடர முடியுமா என்பது சந்தேகம்தான்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் 111 இன்னிங்ஸ்களில்  3,994 ரன்கள் சேர்த்துள்ளார். 40 வயதான அவர், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடி மிரளச் செய்தார். உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ள கிறிஸ் கெயில், அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் சிறந்த பங்களிப்பு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

இம்ரன் தகிர்

தென் ஆப்பிரிக்காவின் உணர்ச்சிமிகு சுழற்பந்துவீச்சாளர் இம்ரன் தகிர். 37 வயதான இம்ரன் தகிர் டி20 போட்டியில் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார். தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இம்ரன் தகிர், உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறும் முடிவில் உள்ளார். இதனால் அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் அவர், விளையாடுவாரா என்பது கேள்விக்குறிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x