Last Updated : 23 Mar, 2019 08:01 AM

 

Published : 23 Mar 2019 08:01 AM
Last Updated : 23 Mar 2019 08:01 AM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்; சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரீட்சை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 12-வது சீசன் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவானது வரும் மே 12-ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹாலி, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை ஆகிய 8 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்

சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன.

தொடக்க நாளான இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. கடந்த சீசனில் அதிக வயதான வீரர்களை உள்ளடக்கிய அணி என விமர்சிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் திரும்பிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.

‘அப்பாக்களின் ஆர்மி’ என செல்லப் பெயருடன் அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 37 வயது ஆகிறது. ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சனும் 37 வயதை கடந்தவர்தான். டுவைன் பிராவோ 35 வயதையும், டு பிளெஸ்ஸிஸ் 34 வயதையும், அம்பதி ராயடு, கேதார் ஜாதவ் ஆகியோர் 33 வயதையும் எட்டியவர்கள். சுரேஷ் ரெய்னா 32 வயதை விரைவில் எட்ட உள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரன் தகிர் 39 வயதையும், ஹர்பஜன் சிங் 38 வயதையும் எட்டிய போதிலும் தங்களது அனுபவத்தால் ஆட்டத்தின் போக்கை எந்த சூழ்நிலையிலும் மாற்றும் திறன் கொண்டவர்கள். இவர்களுடன் கரண் சர்மா, மோஹித் சர்மா ஆகியோரும் 30 வயதை எட்டிவிட்டனர்.

கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றதால் சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களது அனுபவத்தால் நிருபித்துக்காட்டினர். பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் அரை இறுதியில் கால்பதித்த ஒரே அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

இம்முறையும் அதே வீரத்துடன் களம் காண்கிறது சிங்கத்தின் கர்ஜனையை லோகோவாக கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெயரளவில் பெரிதாக பேசப்பட்டாலும் இதுவரை அந்த அணி ஒருமுறை கூட பட்டம் வென்றதில்லை. பெங்களூரு அணிக்கு 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி பேட்ஸ்மேனாக மட்டையை சுழற்றுவதில் எந்தவித குறையையும் வைக்கவில்லை என்றாலும் கூட கேப்டனாக அணிக்காக ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்காதது விமர்சனங்களையும் எழுப்பாமல் இல்லை.

இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் சிறப்பாக பந்து வீசும் அணியும், நெருக்கடியான சூழ்நிலையை திறம்பட கையாளும் அணியே வெற்றியை வசப்படுத்தும். ஏனெனில் இரு அணியிலும் ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய திறன் உள்ள வீரர்கள் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வுக்கு பரிசீலனையில் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் உயர்மட்ட திறனை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். அதேவேளையில் பெங்களூரு அணியில் உமேஷ் யாதவும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறும் வகையில் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும்.

தொடக்க விழா கிடையாது

ஐபிஎல் தொடரின் தொடக்க விழா வழக்கமாக பிரம்மாண்டமாக நடத்தப்படும். ஆனால் பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். இதனால் ஜபிஎல் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவை பிசிசிஐ  ஏற்கெனவே ரத்து செய்திருந்தது.

மேலும் தொடக்க விழாவுக்காக ஒதுக்கப்படும் தொகை புல்வாமா தாக்குதலில் இறந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த வகையில் சுமார் ரூ.20 கோடியை பிசிசிஐ வழங்கக்கூடும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த தொகையின் ஒரு பகுதி இன்றைய ஆட்டத்தின்போது, ராணுவ உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படக்கூடும் என தெரிகிறது.

அணிகள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், டேவிட் வில்லி, தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, நேதன் கவுல்டர் நைல், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், மொயின் அலி, காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ் ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

நேருக்கு நேர்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 23 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்ந்தது இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பெரும்பாலான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து சமநிலை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள சில வெளிநாட்டு வீரர்கள் சீசன் முழுவதும் விளையாட முடியாத நிலை உள்ளது. அந்த அணியின் ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் கடந்த சீசன்களில் அணியின் துருப்பு சீட்டாக இருந்து வந்துள்ளார். இம்முறையும் அவர், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும்.

சிஎஸ்கே சார்பில் நிதி

புல்வாமா தாக்குதலின்போது இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் மொத்த டிக்கெட் விற்பனை தொகை வழங்கப்பட உள்ளது. இதனை இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக  உள்ள தோனி, ராணுவ உயரதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x