Published : 22 Mar 2019 05:33 PM
Last Updated : 22 Mar 2019 05:33 PM

‘தல’ தோனியின் சிஎஸ்கேவிடம் அடி மேல் அடி: இந்த முறையாவது வீழ்த்துமா ஆர்சிபி?- சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் திருவிழா

ஐபிஎல் கிராண்ட் டி20 திருவிழா நாளை சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் களைகட்டுகிறது. இந்திய கேப்டன்  விராட் கோலி தலைமை ஆர்சிபி அணி தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

 

ஒருவர் தற்போதைய இந்திய கேப்டன் இன்னொருவர் தற்போதைய கேப்டனுக்கு பின்னால் நின்று கொண்டு அரிய ஆலோசனைகளை வழங்கும் முன்னாள் கேப்டன், ஆனால் தோனி ஐபிஎல் கிங், கோலி பேட்டிங் கிங். கேப்டன்சி, டி20 உத்தி, அணித்தேர்வு, களவியூகம், பந்து வீச்சு மாற்றம், முடிவில் தெளிவு என்று பாக்ஸ்களைப் போட்டு டிக் அடித்தால் தோனியின் பெயருக்கு அருகில் இருக்கும் பாக்ஸ்தான் இவை அனைத்திலும் டிக் மார்க் கொண்டிருக்கும்.

 

ஏனெனில் இந்த வடிவத்தில் தோனி ஒரு  ‘தாதா’ என்பதை நிரூபித்துவிட்டார். கடந்த முறை வயதான அணி என்று கேலி செய்தனர், ஆனால் முரட்டு இளம் வேகத்தை விட அனுபவத்தின் நிதான ஆக்ரோஷமே கை கொடுக்கும் என்பதை தோனி கடந்த ஐபிஎல் கோப்பையை வென்று நிரூபித்துள்ளார்.

 

இதுவரை இந்த அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் சவால், மோதல் என்றெல்லாம் பேச இடமில்லை, பேசாமல் சென்னை வெற்றி பெறும் என்று கூறிவிட்டு போக வேண்டியதுதான்.  எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்றாலே ஆர்சிபிக்கு கசப்பனுபவம்தான் 7 முறை ஆடி 6 தோல்வி கண்டது. அதே போல் 2014முதல் தல தோனியின் சிஎஸ்கே படையை ஆர்சிபி படை வீழ்த்தியதில்லை. நடுவில் 2 ஆண்டுகள் சிஎஸ்கே தடை செய்யப்பட்டு விளையாடவில்லை என்றாலுமே  சிஎஸ்கேவை வீழ்த்திய நினைவு ஆர்சிபி அணிக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

 

அதுவும் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஒன்றில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சென்ன சூப்பர் கிங்ஸ் அணி ஆர்சிபி அணியின் இறுதி ஓவர் வீசும் பவுலர்களை சாத்து சாத்து என்று சாத்தினார்கள் தோனியும் ராயுடுவும்.  தோனி 34 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாச, அம்பதி ராயுடு 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுக்க 19.4 ஓவர்களில் 206 என்ற இலக்கு ஊதப்பட்டது. இந்த உதையையும் ஆர்சிபி மறக்க வாய்ப்பில்லை.

 

இந்த முறை சென்னையில் நடக்கும் போட்டிகளில் மஞ்சள் ஆர்மி, உள்ளிட்ட சிஎஸ்கே ரசிகமணிகளின் சத்தமும் ஆரவாரமும் காதைப் பிளக்கும் இதில் எதிரணியினர் வெற்றி பெறுவது கடினம்தான்.

 

சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன், டுபிளெசிஸ், ராயுடு, ரெய்னா, தோனி, கேதார் ஜாதவ், பிராவோ என்று அதிரடி வீரர்கள் வரிசைகட்ட, ஆர்சிபி அணியிலும் மொயின் அலி, விராட் கோலி, டிவில்லியர்ஸ், பெரிய அடிதடி மன்னன் மே.இ.தீவுகளின் ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே என்று வரிசை கட்டுகிறது.

 

பந்து வீச்சில் சென்னை அணி கொஞ்சம் பலவீனமாகவே இருக்கிறது. மோஹித் சர்மா, டேவிட் வில்லே, தீபக் சாஹர் ஆக்ரோஷ சக்தி இல்லை, ஆர்சிபியில் டிம் சவுதி, உமேஷ் யாதவ், சிராஜ், சாஹல் உள்ளனர். ஆகவே பந்து வீச்சு ஆர்சிபிக்கு கொஞ்சம் பலம் கூடுதலாக உள்ளது.  கடந்த ஐபிஎல்-இல் உமேஷ் யாதவ் பவர் ப்ளேயில் சிறந்த சிக்கன விகிதம் வைத்திருந்ததாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முடிவு ஓவர்களில் ஆர்சிபி ஓவருக்கு 11 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

கடைசியாக சிஎஸ்கே பவுலிங்கை எதிர்கொண்ட போது ஜடேஜா கோலியையும், ஹர்பஜன் சிங் டிவில்லியர்ஸையும் முதல் பந்திலேயே காலி செய்ய ஆர்சிபி புனேயில் நடந்த அந்த 2018 போட்டியில் 127 ரன்களுக்கு மடிந்தது, சிஎஸ்கே வென்றது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

 

வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, தோனி, ராயுடு, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லே, மோஹித் சர்மா/ சாண்ட்னர்.

 

ஆர்சிபி அணி விவரம்:

 

பார்த்திவ் படேல், மொயின் அலி, விராட் கோலி, டிவில்லியரஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே. வாஷிங்டன் சுந்தர், டிம் சவுதி, உமேஷ் யாதவ், மொகமத் சிராஜ், சாஹல்.

 

ஆட்டம் சனிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x