Last Updated : 21 Mar, 2019 08:08 PM

 

Published : 21 Mar 2019 08:08 PM
Last Updated : 21 Mar 2019 08:08 PM

ஐபிஎல் 2019: பட்டையைக் கிளப்புவார்களா 5 பவர் ஹிட்டர்கள்?

ஐபிஎல் என்றாலே அதிரடி சரவெடி வீரர்கள் மீதுதான் கவனம் இருக்கும். ஆனால் இதிலும் ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோலி போன்ற ‘கலை நுட்ப’ வீரர்களும் உள்ளனர். ஆனாலும் கிறிஸ் கெய்ல், போலார்ட், தோனி எனும் போது கோலி, டிவில்லியர்ஸைக் காட்டிலும் ரசிகர்களிடையே ஒரு பிரமிப்பு உள்ளது. கிரிக்கெட் நுட்பத்துடன் பார்ப்பவர்களுக்கு கோலி, டிவில்லியர்ஸ் பிரமிப்பூட்டுபவர்களாகத் தெரிவார்கள்.

 

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வளம் சேர்ப்பது இந்த பவர் ஹிட்டர்கள் பறக்க விடும் சிக்சர்களும் பவுண்டரிகளும் சாதனைகளும்தான்.  இந்த பவர் ஹிட்டர்களால்தான் அதீத இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன, ஒரே போட்டியில் இதே பவர் ஹிட்டர்களால்தான் பெரிய இலக்குகளும் விரட்டப்படுகின்றன.

 

8 ஐபிஎல் அணிகளிலும் சிலபல பவர் ஹிட்டர்கள் இருந்தாலும் , இந்த 5 பவர் ஹிட்டர்கள் மீதுதான் ரசிகர்களின் கவனம் குவிமையம் பெறும். இவர்கள் அத்தகைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளனர்.

 

தோனியை முன்னைப்போல் பவர் ஹிட்டர் லிஸ்ட்டில் சேர்க்க முடியுமா என்றாலும் இந்தியாவுக்கு எதிராக தோனி ஆடும்போது தரமான எதிரணியினரின் பந்து வீச்சுக்கு எதிரான அவரது தடுமாற்றங்கள் அவர் மஞ்சள் உடையில் ஆடும்போது இருக்காது, அதுவும் கடந்த ஐபிஎல் தொடரில் 400க்கும் அதிகமாக ரன்கள் எடுத்து ஸ்ட்ரைக் ரேட்டை 150 ஆகவும் வைத்திருப்பர்வர் தோனி. ஆகவே நம் பட்டியலில் முதல் பவர் ஹிட்டர்...

 

‘கிராண்ட் பினிஷர்’ எம்.எஸ்.தோனி

 

தோனி என்றாலே எங்கே... எங்கே அந்த ஹெலிகாப்டர் ஷாட் என்று ரசிகர்கள் ஏறக்குறைய தோனியிடம் கெஞ்சும் அளவுக்கு வந்து விட்டனர்.  தோனி என்றாலே ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு சென்று கிராண்டாக வெற்றி பெற வைப்பது என்ற ஒரு படிமம் ரசிகர்களிடத்தில் நிலைத்து விட்டது.

 

 

சர்வதேச டி20-யில் தோனி 54 சிக்சர்கள், 116 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 126.  மொத்தமாக 302 டி20 போட்டிகளில் தோனி 6,205 ரன்களை அடித்துள்ளார்  ஸ்ட்ரைக் ரேட் 135.68.  இதில் 429 பவுண்டரிகள் 272 சிக்சர்கள் என்று தூள்பறத்தி வருகிறார் தோனி.

 

தோனியிடம் சமீபகாலமாக காணாமல் போயிருக்கும் ஹெலிகாப்டர் ஷாட் 2019 ஐபிஎல் போட்டியில் அதுவும் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியிலேயே வந்து விட்டால் ரசிகர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

 

ஏபி டிவில்லியர்ஸ்

 

 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பெயர் எடுத்த அச்சுறுத்தும் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் என்றாலும், 31 பந்துகளில் சதம் எடுத்து ஒருநாள் சாதனையை தன் வசம் வைத்திருந்தாலும், ஏ.பி.டிவில்லியர்ஸிடம் ஒரு கலைஞன் ஓளிந்து கொண்டிருக்கிறான். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஆஃப்  வாலி பந்தை அவரால் ஒரு கிளாசிக் கவர் ட்ரைவும் ஆட முடியும், அதே பந்தை கவருக்கு மேல் தூக்கி சிக்சும் அடிக்க முடியும் அல்லது லெக் திசையில் எங்கு வேண்டுமானாலும் அவரால் சிக்ஸ் அடிக்க முடியும் அத்தகைய அதிசய வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 150.93 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், அவருடைய பேட்டிங் பார்ம் இதுவரை இருப்பது போல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இவரது வெற்றி ஆர்சிபியின் வெற்றி, இவரது தோல்வி ஆர்சிபியின் தோல்வி.

 

டிவில்லியர்ஸின் இன்னொரு திறமை அசாத்தியமான பீல்டிங் கடந்த முறை இவரது தடுப்புகள் கேட்ச்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. இவரது ரிப்ளெக்ஸ் எந்த ஒரு கடினமான கேட்சையும் ஜுஜுபி ஆக்கிவிடும்.

 

ஏ.பி.டிவில்லியர்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு போட்டியில் அவர் இடது கைக்கு மட்டையை மாற்றிக் கொண்டார், ஆனால் பந்து மெதுவான பவுன்சர் பந்து மெதுவாக வலது தோள்பட்டை உயரத்திற்கு வந்தது என்ன செய்யப்போகிறார் என்று ஆவலாகப் பார்த்த போது இடது கை பேட்ஸ்மென் போல் அந்தப் பந்தை ஹூக் செய்து சிக்சருக்குப் பறக்கவிட்டார், பிரமிக்க வைத்த ஷாட். இதற்கு முன்னரும் இனிமேலும் அது போன்ற ஒருஷாட்டை ஆட ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்.

 

இதுவரை மொத்தமாக 274 டி20 போட்டிகளில்  7,396 ரன்களை 611 பவுண்டரிகள் 335 சிக்சர்களுடன் 148 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

 

 

கெய்ரன் பொலார்ட்:

 

 

மும்பை இந்தியன்ஸ் அணியை பல இக்கட்டான தருணங்களிலிருந்து மீட்டு வெற்றி பெறச் செய்துள்ள பவர் ஹிட்டிங் ஆல்ரவுண்டர் கெய்ரன் போலார்ட். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் 145.07 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

 

மொத்தம் 459 டி20 போட்டிகளில் 9037 ரன்களை 586 பவுண்டரிகளுடன் 585 சிக்சர்களுடனும் 150.29 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள மிகப்பெரிய ஹிட்டர் பொலார்ட் இந்த முறையும் கலக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

ஜோஸ் பட்லர்

 

கடந்த ஐபிஎல் தொடரில் முதல் பகுதிகளில் தடுமாறிய ராஜஸ்தன ராயல்ஸ் அணியை பிற்பகுதியில் முன்கள வீரராக இறங்கி வெளுத்து வாங்கி முன்னேற்றினார்.

 

இங்கிலாந்தின் மதிப்பு மிக்க குறைந்த ஓவர் கிரிக்கெட் வீரர் என்று பெயர் எடுத்த பட்லர்  டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை அடித்துள்ளார். இம்முறை ஐபிஎல் ஆட்ட நுணுக்கங்களை அறிந்த அனுபவ வீரராகக் களமிறங்கி அஜிங்கிய ரஹானேயின் ஒரு படைத்தளபதியாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கிறிஸ் மோரிஸ்

 

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டரான கிறிஸ் மோரிஸ்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தூணாகத் திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை மிகப்பெரிய அடிதடி வீரர்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ளனர்.

 

கிறிஸ் மோரிசின் ஸ்ட்ரைக் ரேட் 166.66.  பின் களத்தில் இறங்கி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் மோரிஸ்.

 

இவர் சென்னை சூப்பர் கிங்ஸில் ஐபிஎல் வாழ்வைத் தொடங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ஆடியுள்ளார். இப்போது இவர் ஐபிஎல் அனுபவ வீரர் ஆவார்.

 

எல்லைக்கோட்டுக்கு வெளியே எவ்வளவு பெரிய பவுலரின் பந்துகளையும் தூக்கி வெளியே அடிப்பதில் பெயர் பெற்றவர் கிறிஸ் மோரிஸ், இம்முறை நிச்சயம் ஷ்ரேயஸ் அய்யரின் முக்கிய ஆயுதமாக கிறிஸ் மோரிஸ் விளங்குவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x