Published : 21 Mar 2019 10:45 AM
Last Updated : 21 Mar 2019 10:45 AM

சிஎஸ்கே அணிகளில் இருந்து முக்கிய வீரர், கேகேஆர் அணியில் இருந்து 3 வீரர்கள் திடீர் விலகல்: அடுத்து யாருக்கு வாய்ப்பு?

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியில் இருந்தும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் காயம் காரணமாக இரு முக்கிய வீரர்கள் போட்டி தொடங்கும் முன்பே விலகியுள்ளனர்.

12-வது ஐபிஎல் போட்டி வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியில் பெரும்பாலான வீரர்களை மாற்றவில்லை. இரு வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட்டனர். சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் பந்துவீச்சில் மிகப்பெரிய தூணாக விளங்கியவர் தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி.

தற்போது தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையே டி20 போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியின்போது, பந்துவீசிய சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள லுங்கி இங்கிடிக்கு தோள்பட்டையில் திடீரென கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து, உடனடியாக அவர் பந்துவீசுவதை நிறுத்தி ஓய்வெடுத்தார்.

அதன்பின் மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், அவருக்கு தோள்பட்டையில் தசைநார் கிழிவு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த காயம் சரியாக குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் இங்கிடியிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளர் முகமது மூசாஜி கூறுகையில் "வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, தோள்பட்டை தசைநாரில் கிழிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், அவர் 4 வாரங்கள் ஓய்வு எடுக்கக் கோரி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால், அவரால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் இடம் பெற இயலாது" எனத் தெரிவித்தார்.

அடுத்த 3 வீரர்கள்?

ஐபிஎல் போட்டி தொடங்கும் முன், வெளிநாட்டு வீரர் ஒருவர் விலகி இருப்பதால், அடுத்த வீரரை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் இருக்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி என்பதால், அவர் இல்லாத நிலையில், அதேபோன்ற திறமையான பந்துவீச்சாளரை எடுக்க வேண்டியது இருக்கும்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் ரிச்சார்ட்ஸன், மே.இ.தீவுகள் வீரர் ஷெல்டன் காட்ரெல். இடது கை வேகப்பந்துவீச்சாளரான காட்ரெல், விக்கெட் வீழ்த்திவிட்டால் வித்தியாசமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அதாவது எதிரணி வீரர்களைப் பார்த்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்துவார். மூன்றவது மார் வுட்உள்ளார். இவர்களில் 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

3 வீரர்கள் விலகல்

இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென் ஆப்பிரிக்க பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நார்ட்ஜேவும் காயத்தால் விலகியுள்ளார். இவருக்கும் தோள்பட்டை காயம் ஏற்பட்டுள்ளதால், இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் தன்னால் பங்கேற்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் கமலேஷ் நாகர்கோட்டி, சிவம் மவி ஆகியோரை காயத்தால் இழந்துவிட்டது. இப்போது 3-வது வீரரையும் காயத்தால் இழக்கிறது. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த 3 வீரர்களுக்கு பதிலாக யாரைத் தேர்வு செய்யப் போகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x