Published : 21 Mar 2019 07:44 AM
Last Updated : 21 Mar 2019 07:44 AM

ஐபிஎல் தொடரில் தோனி 4-வது வீரராகவே களமிறங்குவார்: பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வணிக பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

கடந்த சீசனில் தோனி 4-வது வீரராக களமிறங்கினார். ஆனால் நாங்கள் அவரை சற்று இணக்கமான இடங்களிலும் பயன்படுத்தினோம். இதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. கடந்த 10 மாதங்களாக தோனியின் பேட்டிங் பார்ம் மிகச்சிறப்பாக உள்ளது. புதிய வீரராக தற்போது கேதார் ஜாதவையும் பெற்றுள்ளது சிறப்பான விஷயம்.

பேட்டிங் வரிசை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மற்ற அணிகளுடன் எங்களது அணியின் சமநிலையை ஒப்பிடும் பணியை நாங்கள் செய்வதில்லை. ஏனெனில் மற்ற அணிகளை பார்க்க ஆரம்பித்தால் நம்மிடம் உள்ள நல்லது அல்லது கெட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில் இருந்து விலகிவிடுவோம். எல்லா அணியிலும் போதுமான அளவிற்கு சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் மனப்பாங்கு, அணியின் சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகியவற்றின் வழியே வெற்றியின் பெரிய தருணங்களை அடைய முடியும். கடந்த வருடம் நாங்கள் பெரிய தருணங்களை வென்றோம்.

இது அணியின் கலாச்சாரம், முடிவு எடுக்கும் உரிமையை வீரர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றின் மூலமே சாத்தியமானது. கேதார் ஜாதவ் கடந்த சீசனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதில் பிராவோவுடன் இணைந்து பெரிய பங்களிப்பு செய்திருந்தார். மேலும் டு பிளெஸ்ஸிஸ், வாட்சன் ஆகியோர் தொடரின் இறுதி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர்.

 எங்கள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பங்கு உள்ளது. தற்போதைய நிலையில் அணி சிறந்த சமநிலையில் உள்ளது. சுழற் பந்து வீச்சில் இம்ரன் தகிர் சிறந்த பார்மில் உள்ளார். கரண் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் அனுபவமிக்கவர்கள். அணியின் பெரும்பாலான தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். இவ்வாறு பிளெமிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x