Published : 09 Mar 2019 11:04 AM
Last Updated : 09 Mar 2019 11:04 AM

11.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்த மே.இ.தீவுகள்: 45 ரன்களுக்குச் சுருண்டு இங்கிலாந்திடம் பெரிய தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, ஒருநாள் தொடரை ட்ரா செய்து இங்கிலாந்தை சிதைத்த மே.இ.தீவுகளை நேற்று டி20 போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் காலி செய்ய மே.இ.தீவுகள் 137 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியைத் தழுவியது, இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்று வென்றுள்ளது.

 

பஸட்டெரில் நடபெற்ற 2வது ஆட்டத்தில் மே.இ.தீவுகளால் பேட் செய்ய அனுப்பப்பட்ட இங்கிலாந்து முதலில் 32/4 என்று தடுமாறியது, பிறகு சாம் பில்லிங்ஸ் (87), ஜோ ரூட் (55) அதிரடி ஆட்டத்தின் மூலம் 182/6 என்று பெரிய ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 45 ரன்களுக்கு சுருண்டது. மொத்தம் 11.5 ஓவர்கள்தான் மே.இ.தீவுகள் ஆடியது.  கிறிஸ் ஜோர்டான் 4 ஓவர்கள் 6 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அசத்தினார்.

 

கிறிஸ் ஜோர்டான் நேற்று ஹீரோவானார் 2 ஒவர்களில் அடுத்தடுத்து இரண்டிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முதல் ஒவரில் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் தொடர்ச்சியானது என்பதால் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார் ஜோர்டான். ஆனால் அந்த ஒரு தர்மசங்கடமும் கூடுதலாக எதற்கு என்று ஹாட்ரிக் வாய்ப்பை தடுத்து விட்டது.

 

முன்னதாக இங்கிலாந்து பேட் செய்த போது தேவேந்திர பிஷு பாயிண்டில் அசத்தல் கேட்ச் பிடித்து ஜானி பேர்ஸ்டோவை 12 ரன்களில் காலி செய்தார். இடது கை ஸ்பின்னர் பேபியன் ஆலன் (2/29), ஹேல்ஸ் (8), ஜோ டென்லி (2) ஆகியோரை தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். இயன் மோர்கனை கார்லோஸ் பிராத்வெய்ட் வீழ்த்தினார்.

 

32/4 என்ற நிலையிலிருந்து ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ் மறுக்கட்டமைப்பு ஆட்டம் ஆடினர், அடுத்த 26 பந்துகளில் 2 பவுண்டரிகளே வந்தன. இதில் ஒரு பவுண்டரி கேட்சை விட்டதினால் வந்தது. லாங் ஆனில் கேட்ச் விடப்பட்டது. அதன் பிறகு ரூட், பில்லிங்ஸ் கூட்டணி ஆக்ரோஷமான ஆட்டம் காட்டியது. ரூட் 36 பந்துகளில் அரைசதம் கண்டார். பிறகு ரூட் ரன் அவுட் ஆனார்.

 

ஆனால் சாம் பில்லிங்ஸை ஒன்றும் செய்ய முடியவில்லை. கடைசி 2 ஓவர்களில் பவுண்டரிகள் மூலமாக மட்டுமே 32 ரன்கள் விளாசினார். 47 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 87 ரன்கள் என்று பின்னி எடுத்தார். முதல் 3 ஓவர்களில் 11 ரன்கள் 1 விக்கெட் என்று இருந்த பிராத்வெய்ட் பவுலிங் சீரழிந்து 4 ஒவர் 33 ரன்கள் என்று ஆனது. இங்கிலாந்து 182/6 என்று முடிந்தது.

 

கிறிஸ் கெய்லுக்கு இந்த இலக்கெல்லாம் ஒன்றுமில்லை, அவரை நம்பித்தான் மே.இ.தீவுகள் நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனால் இவரும் இவருடன் இறங்கிய ஷேய் ஹோப் இருவரும் 3வது ஓவரில் டேவிட் வில்லேயிடம் வெளியேறினர். கெய்ல், மிட் ஆனில் ரூட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷேய் ஹோப் கொடியேற்றியதை மோர்கனும் டாம் கரனும் மோதிக்கொள்ள எப்படியோ அட்ஜஸ்ட் செய்து மோர்கன் பிடித்து விட்டார்.

 

அங்கிருந்து மே.இ.தீவுகள் எழும்பவேயில்லை, கிறிஸ் ஜோர்டான் டேரன் பிராவோவை விக்கெட் கீப்பர் கேட்சில் வீழ்த்தினார். அடுத்த பந்தே ஜேசன் ஹோல்டரையும் எல்.பி.ஆக்கி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார். நிகோலஸ் பூரன் ஹாட்ரிக்கைத் தடுத்தார்.  ஆனால் ஜோர்டான் அடுத்த ஓவரில் இவரையும் காலி செய்து , ஆலன் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

 

கீழ் வரிசை வீரர்களை ஆதில் ரஷீத் (2/12), லியாம் பிளெங்கெட் (2/8) வீழ்த்த 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல் அவுட்.  மே.இ.தீவுகளில் ஹெட்மையர், பிராத்வெய்ட் முறையே 10 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.

 

ஆட்ட நாயகனாக சாம் பில்லிங்ஸ் விருது வழங்கப்பட்டார்.

 

வரும் ஞாயிறன்று மே.இ.தீவுகள் பதிலடி ஆறுதல் வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x