Published : 09 Mar 2019 09:29 AM
Last Updated : 09 Mar 2019 09:29 AM

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர்; பட்டம் வெல்லும் முனைப்பில் சென்னை சிட்டி அணி: மினர்வா பஞ்சாப்புடன் இன்று பலப்பரீட்சை

ஹீரோ ஐ லீக்  கால்பந்து தொடரில் கோவை நேரு விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

ஹீரோ ஐ லீக்  கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சாம்

பியன் பட்டம் வெல்வதற்கான ரேசில் சென்னை சிட்டி, ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சிட்டி அணி 12 வெற்றி, 4 டிரா, 3 தோல்விகளுடன் 40 புள்ளிகள் பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதேவேளையில் ஈஸ்ட் பெங்கால் அணி 19 ஆட்டங்களில் 12 வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 39 புள்ளிகள் பெற்று 2-வது இடம் வகிக்கிறது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இன்று மோத உள்ளன. கோவை நேரு விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி, நடப்பு சாம்பியான மினர்வா பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தை ரசிகர்கள் இலவசமாக கண்டுளிக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நேரத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - கோகுலம் கேரளா அணிகள் மோதுகின்றன. இன்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி வெற்றி பெற்றால் 43 புள்ளிகளுடன் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். சென்னை சிட்டி அணி வெற்றி பெறும் பட்சத்தில், கோகுலம் கேரளா அணியை வீழ்த்தினாலும் ஈஸ்ட் பெங்கால் அணியால் 42 புள்ளிகளுடன் 2-வது இடத்தையே பெற முடியும்.

சென்னை சிட்டி அணி தனது ஆட்டத்தை டிராவில் முடித்தாலோ அல்லது வெற்றி பெறத் தவறினாலோதான் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதுவும் அந்த அணி கோகுலம் கேரளா அணியை வீழ்த்த வேண்டும். ஒருவேளை சென்னை சிட்டி அணி தனது ஆட்டத்தில் வெற்றி பெறத் தவறி, ஈஸ்ட் பெங்கால் அணி தனது ஆட்டத்தை டிராவில் முடித்தால் இரு அணிகளும் தலா 40 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும்.

இந்த சூழ்நிலையில் இரு அணிகளும் (சென்னை சிட்டி, ஈஸ்ட் பெங்கால்) நேருக்கு நேர் மோதிய ஆட்டங்களின் முடிவுகள் கருத்தில் கொள்ளப்படும். இந்த நிலைமை உருவானால் சென்னை சிட்டி அணியே சாம்பியன் பட்டம் வெல்வதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு எதிரான இரு ஆட்டங்களிலும் சென்னை சிட்டி அணியே வெற்றி பெற்றிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x