Published : 03 Mar 2019 02:43 PM
Last Updated : 03 Mar 2019 02:43 PM

நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிப்பது எங்கள் வரம்பில் இல்லை: பிசிசிஐ கோரிக்கையை ஏற்க ஐசிசி மறுப்பு

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரவளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கோரிக்கையை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மறுத்துவிட்டது.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடன் நட்பு வைப்பதும், உறவைப் பேணுவதும், துண்டிப்பதும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இதுபோன்ற விஷயத்தில் தலையிட முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலையடுத்து ஐசிசி அமைப்புக்கு கடிதம் எழுதிய பிசிசிஐ, தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும், ஊக்குவிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. மேலும், இந்தியா, பாகிஸ்தான் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால்,கடிதத்தில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அணியின் பெயரை பிசிசிஐ குறிப்பிடவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ எழுதிய கடிதம் குறித்த விவகாரம் துபாயில் நேற்று நடந்த  ஐசிசி பொதுக்குழுக் கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் குறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் சிறிது நேரமே விவாதித்தார். பிசிசிஐ சார்பில் அமிதாப் சவுத்ரி பங்கேற்றிருந்தார்.

பிசிசிஐ அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஐசிசி, கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களுக்கு இடையிலான நட்புறவை பேணிக்கொள்வதிலும், உறவை துண்டிப்பதிலும் தங்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.  பிசிசிஐ கோரிக்கை ஏற்க முடியாது எனத் தெரிவித்துவிட்டனர்.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் நிருபரிடம் கூறுகையில், "உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் விளையாடாமல் ஒரு நாட்டை ஒதுக்குவது என்பது ஒருநாட்டின் அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஐசிசிக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று ஐசிசி தலைவர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். பிசிசிஐக்கு இந்த முடிவு வரும் எனத் தெரியும் இருந்தாலும் வாய்ப்புக்காக கடிதம் எழுதி இருந்தது.

ஏராளமான சர்வதேச வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் விளையாடி வருகிறார்கள். ஆனால், ஒரு வீரர்கூட இதுபோன்று தடை விதிக்க வேண்டும். பாதுகாப்புச் சிக்கல் இருக்கிறது என்று கூறவில்லை. அதேசமயம், இந்திய வீரர்களுக்கு கேட்டுள்ள அதிக பாதுகாப்பு பரிசீலிக்கப்படும் என்று ஐசிசி தலைவர் உறுதியளித்தார்" என அதிகாரி தெரிவித்தார்.

வரும் ஜூன் 16-ம் தேதி ஓல்டு டிராபோர்ட் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்று பலதரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x